குரு அரவிந்தன்
அன்று புதன் கிழமை, யூலை மாதம் 15 ஆம் திகதி 2026. காலை எழுந்து யன்னலுக்கால் வெளியே பார்த்தேன். வழமை போலக் கேட்கும் குருவிகளின் சத்தம் கேட்கவில்லை. மௌனத் திரை விரிக்கப்பட்டிருந்தது. என்னவாக இருக்கும்? வெளியே மப்பும் மந்தாரமாய் இருப்பது போலத் தெரிந்தது. வானத்தைப் பார்த்தேன், கருமேகங்ளைக் காணவில்லை, மழை வரும் அறிகுறியுமில்லை. அதற்குப் பதிலாக மங்கலான மஞ்சள் நிறத்தில் வானம் இருண்டு கிடந்தது. அதன் நடுவே என்றும் இல்லாதவாறு வானத்தில் சூரியன் சிகப்பு வட்டத் தட்டுப் போலத் தகதகவென்று சிறிது நேரம் காட்சி தந்தது. ஒரு கணம் சந்திரனோ என்று எண்ணத் தோன்றியது. இல்லை கிழக்குவானில் சூரியன்தான்! சூரியனை நேரடியாகப் பார்க்க முடிந்தது. அந்த வானத்து மௌனம் ஏதோ ஒருவகை இனம்புரியாத பயம் காட்டியது. இது போன்றதொரு சூழ்நிலையை ஏற்கனவே அலஸ்காவிலும், ஐஸ்லாந்திலும் பார்த்திருக்கின்றேன்.
கனடாவுக்கு என்ன நடந்தது, பூமியில் மாற்றமில்லை, சூரியனிலும் மாற்றமில்லை, ஆனால் இடை நடுவேதான், வானத்தில் அந்த மாற்றம் நடந்தது. இணையத்தில் சென்று தேடினேன், காரணம் புரிந்தது. இதற்கெல்லம் காரணம் கடனாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீ என்தை அறிய முடிந்தது. சுமார் 800 இடங்களில் காட்டுத் தீ பரவியிருந்தது. கனடாவின் தென் பகுதி மட்டுமல்ல, காற்று வீசும் திசையில் இருந்த அமெரிக்காவும் இதனால் பாதிக்கப்பட்டது. மேற்கு மற்றும் வடக்கு ஒன்டாரியோ மற்றும் வடக்கு மினசோட்டா முழுவதும் பரவி வரும் ஒரு பெரிய காட்டுத்தீயே இதற்கு மூல காரணமாகும். இதனால் இப்பகுதிகளில் காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற’ நிலைக்கு வீழ்ச்சி அடைந்திருந்தது.
இது போன்ற நிகழ்வு 2023 ஆம் ஆண்டும் நடந்திருந்தது. ஆனால் இதைவிட அது மோசமாக இருந்தது. இதன் காரணமாக அரசு ‘மஞ்சள் அறிவிப்பு’ விட்டிருந்தது. காரணம், ரொரன்ரோ, உலகின் மிக மோசமான காற்றுத் தரங்களில் சிலவற்றைப் பதிவு செய்திருந்தது. அதன் குறியீட்டு அளவு 220 க்கு அருகில் இருந்தது, இது ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையாக இருந்தது. இதைவிட பாஸ்டன், மாசசூசெட், நியூயோர்க்கின் பெரும்பாலான பகுதிகள், ‘ஆரோக்கியமற்றது’ என்ற வரையிலான வரம்பில் இருந்தன. அதனால் மாநிலம் தழுவிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதாவது தேவையில்லாமல் வெளியே நேரத்தைச் செலவிட வேண்டாம், வெளியே நடக்கும் பொது நிகழ்ச்சிகளையும் ரத்துச் செய்யும்படியும் கேட்டிருந்தது. பாடசாலை மாணவர்களுக்கும் அந்தக் கட்டுப்பாடு இருந்தது. காட்டுத் தீ எற்பட்ட இடங்களில் உள்ள மக்களை வெளியேற்றுவதில் மாகாண அரசுகள் செயற்பட்டன. குடியிருப்புகள் எரிந்தாலும், மக்கள் காப்பாற்றப்பட்டனர். ஆனால் மிருகங்கள் பறவைகள் மற்றும் உயிரினங்கள் தப்ப வழியில்லாமல் நடுவே அகப்பட்டுக் கொண்டன. இயற்கையின் அழிவைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்தாலும், இப்படியான நிகழ்வுகள் வருடா வருடம் அதிவெப்பம் காரணமாக நடக்கத்தான் செய்கின்றன.

வானம் ஏன் என்றும் இல்லாதவாறு மஞ்சள் நிறமாக மாறியது என்பதற்கு அடிப்படை இயற்பியல் காரணம் இருந்தது. பொதுவாகக் காற்றில் உள்ள புகைத் துகள்கள் சூரிய ஒளியைச் சிதறடிப்பதுண்டு. ஆனால் அவை எல்லா நிறங்களையும் சமமாகச் சிதறடிப்பதில்லை. சூரிய ஒளி வெள்ளையாகத் தெரிந்தாலும், அது எல்லா நிறங்களின் கலவையாகும். குறிப்பாக நீலம் மற்றும் ஊதா போன்ற குறுகிய அலைநீளங்களைக் கொண்ட ஒளியை அவை மிகவும் திறம்படச் சிதறடிக்கின்றன, அதே சமயம் சிவப்பு, ஒரேஞ்சு மற்றும் மஞ்சள் போன்ற நீண்ட அலைநீளங்கள் மிகவும் எளிதாக ஊடுருவிச் செல்கின்றன.
பொதுவாக வானத்தைப் பார்த்தால் சாதாரணமாக, வானம் என்பது சிதறடிக்கப்பட்ட நீலநிற ஒளி மேலே அங்குமிங்கும் பட்டுத் தெறிப்பதாகவே இருக்கும். அதனால் வானம் நீலமாகவே கண்ணுக்குத் தெரியும். ஆனால், காட்டுத்தீயின் புகை வளிமண்டலத்தில் சேரும்போது, அந்த நீலத்தின் பெரும்பகுதி வடிகட்டப்பட்டு, அதற்குப் பதிலாக நிறமாலையின் வெப்பமான பகுதியால் ஆதிக்கம் செலுத்தப் படுகின்றது. அதனால்தான் கடுமையான புகை சூழ்ந்த நாட்களில், பகல் நேரங்களில் மங்கலான, மஞ்சள் நிற வானமும், மாலை நேரங்களில் வழக்கத்திற்கு மாறாகத் தீப்பிழம்புகள் போலத் தோற்றமளிக்கும் பிரகாசமான சூரிய அஸ்தமனங்களும் காணப்படுகின்றன. எனவே, சிகப்பு சூரியன் என்பது சூரியன் மாறுவதல்ல. சூரியனின் ஒளி உள்ளே வரும் வழியில் காற்று அதன் செயல்பாட்டை மாற்றுவதாகும்.
அதிகப் புகை உள்ள சூழலில் நீண்ட நேரம் வெளியில் இருக்க நேர்ந்தால், இருமல், தொண்டை எரிச்சல், கண் அரிப்பு அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டது. உங்களுக்கு ஆஸ்துமா, இதய நோய் இருந்தாலோ, அல்லது நீங்கள் கர்ப்பிணியாகவோ, முதியவராகவோ இருந்தாலோ, இப்படியான அறிகுறிகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இப்படியானவர்கள் தான் அதிக புகை வெளிப்பாட்டால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.


















