விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடித்துள்ள ‘இரண்டு வானம்’ படம் அக்டோபர் 23ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து இவர், குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி, ஆர்யன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக கட்டா குஸ்தி 2 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் 3-வது முறையாக விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘இரண்டு வானம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இளம் நடிகை மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில், டி.ஜி. தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் வெளியீட்டிற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்திலிருந்து ‘வெள்ளிச்சுடரே’ என்ற பாடல் வெளியாகி கவனத்தை பெற்றது. இந்நிலையில் இப்படம் அக்டோபர் மாதம் 23ம்
தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
















