நடிகர் தனுஷ் அதிகாலை மலைக்கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு, பழனி முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முக்கிய விழா மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதேபோல் அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் அவ்வப்போது பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் செயல்பட்டு வரும் தனுஷ், தற்போது ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தனுஷின் 56வது படத்தின் படப்பிடிப்பு பூஜை நேற்று நடைபெற்றது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன், காளிவெங்கட், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த நிலையில், நடிகர் தனுஷ் அதிகாலை தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா மற்றும் அப்பா, அம்மா, அக்கா உள்ளிட்ட குடும்பத்தினருடன் பழனி மலைக்கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு, பழனி முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.
















