அமிதாப் பச்சனின் 84-வது பிறந்த நாளுக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் அமிதாப் பச்சன். இதுவரை 200 திரைப்படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ளார். ஐந்து தேசிய விருதுகளை வென்றுள்ளார். ஹம், அந்தா கானூன் மற்றும் வேட்டையன் போன்ற படங்களில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளனர். தற்போது, நடிகர் கமல் ஹாசனுடன் ‘கல்கி 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார்கள். அது 1985-ம் ஆண்டில் வெளியான அதிரடி திரைப்படமான ‘கெராப்டார்’ ஆகும். பிரயாக் ராஜ் இயக்கிய இந்த படத்தில் மூன்று ஜாம்பவான் நடிகர்களும் முதல் முறையாக இணைந்து நடித்தனர். அமிதாப் பச்சனின் 84-வது பிறந்த நாளான இன்று அவருக்குப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கமல்ஹாசனும் வாழ்த்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதில், “கம்பீரமான குரலை ஒரு அடையாளமாகவும் பேசும்போது விடும் இடைவெளியை நாடகத்தன்மை மிக்கதாகவும் புருவத்தை உயர்த்துவதைக்கூட கதையின் திருப்பமாகவும் மாற்றியவர்!. சாதாரணமான, “தேவியோன் அவுர் சஜ்ஜனோ” (பெண்களே, பெரியோர்களே) என்ற வார்த்தைகளைக்கூட அமிதாப் பச்சன் பிளாக்பஸ்டர் தொடக்கக் காட்சியைப் போல மாற்றிவிடுவார். அவர் எப்போதுமே தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். ஆக்ரோஷமான இளைஞரே… பிறந்த நாள் வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.
















