”இலங்கையில் அரசியலமைப்பை விடவும், பாராளுமன்ற பெரும்பான்மையை விடவும் ,மக்களின் தெரிவை விடவும் மகாசங்கத்தின் முடிவே இறுதித் தீர்ப்பாக அமைகிறது. ஆட்சியாளர்கள் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட முற்பட்டாலும், காவி உடைக்கு முன்னால் தங்களின் ‘அதிகாரக் கிரீடத்தைக்’ கழற்றி வைத்துவிட்டு தலைவணங்குவதை, .அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை பிக்குகளுக்காக சிறை விதிகளை மாற்ற முடிவுசெய்து”காவியுடை”முன்பாக மண்டியிட்ட சிவப்பு சட்டை ஜனாதிபதி அநுரகுமாரவின் சரணாகதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது”
——-கே.பாலா

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஆட்சியாளர்கள் மாறலாம், நீலம், பச்சை, கருஞ்சிவப்பு, சிவப்பு என நிறங்கள் ஆட்சிபுரியலாம், அரசியலமைப்பு சட்டங்கள் திருத்தப்படலாம், மாற்றுக்கொள்கை யுடையவர்கள் கூட அதிகாரத்தின் உச்சத்திற்கு வரலாம். ஆனால், அவர்கள் அத்தனை பேரின் தலைவிதியையும் ஆட்சியின் பாதையையும் தீர்மானிக்கும் இறுதி அதிகாரப் புள்ளியாகத் திகழ்வது நாட்டின் ”காவியுடை” அரசியல் மையமான மகாசங்கமே.
‘சர்வவல்லமை படைத்தவர்கள்’ மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலம் பெற்றவர்கள், மூவின மக்களின் பேராதவினைப்பெற்றவர்கள் என்று தங்களை நினைத்துக் கொள்ளும் இடதுசாரி ஆட்சியாளர்களான சிவப்பு சட்டைக்காரர்கள் கூட கூட, காவி உடைக்கு முன்னால் தலைவணங்க,அடிபணியக் கடமைப்பட்டவர்கள் என்பதை அண்மையில் பொதுபலசேன ஞானசார தேரரின் சிறைத்தண்டனை விவகாரத்திலும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த காவியுடை அரசியல் நகர்வுகளிலும் நாடு மீண்டும் ஒருமுறை கண்டுகொண்டது.
முதலாளித்துவம், சோசலிசம், தேசியவாதம் என எந்தக் கொள்கையைப் பேசும் அரசாக இருந்தாலும், இலங்கை அரசியலின் ‘செல்லுபடியாகும் கடைசிச் சீட்டு’ பௌத்த பிக்குகளின் கைகளிலேயே இருக்கிறது. மார்க்ஸியக் கோட்பாடுகளையும், வர்க்கப் போராட்டத்தையும் முதன்மையாகக் கொண்டு அதிகாரத்திற்கு வந்த ஜே.வி.பி. தலைமையிலான ‘சிவப்புச் சட்டை’ ஆட்சியாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சட்டத்தின் ஆட்சி, சமத்துவம் என்றெல்லாம் முழங்கினாலும், ஞானசார தேரரின் விவகாரத்தில் காவியுடைக்கு முன்னால் அரச அதிகாரம் எவ்வாறு பணிந்தது என்பது தற்கால அரசியலின் மிகப்பெரிய சான்றாகும்.
வழக்கு -தண்டனை
2016 ஆம் ஆண்டு ஹோமாகம நீதிமன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற அறைக்குள் நுழைந்து நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதற்காக இலங்கையில் பொதுபலசேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஞானசார தேரர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
தனக்கு எதிரான இந்த தண்டனையை எதிர்த்து ஞானசார தேரர் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையிலும், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .இச்சம்பவம் பௌத்த மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் தொடர்ச்சியான விவாதமாக இருந்த நிலையில், 2019 மே மாதத்தில் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.விடுதலையானதைத் தொடர்ந்து அவர் மீண்டும் முறைப்படி காவியுடை அணிந்து தனது மத நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.

பொதுமன்னிப்பு -தலைமறைவு
ஆனால் அந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி தொடரப்பட்ட அடிப்படை உரிமை வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜனாதிபதி அளித்த பொதுமன்னிப்பை செல்லாது என ரத்து செய்தது.இதன் விளைவாக, ஞானசார தேரரது மீதமுள்ள சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்காக அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்தது. மேல்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து, ஞானசார தேரர் தலைமறைவானார். எனினும் பொலிஸார் மேற்கொண்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் மூலம், களுத்துறை காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பௌத்த விகாரையில் தலைமறைவாக இருந்த ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். 2019-இல் பொதுமன்னிப்பு பெறுவதற்கு முன்னர் அவர் சுமார் 9 மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்ததால், 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையில் மீதமுள்ள காலத்தை அவர் முழுமையாகச் சிறையில் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் பேசியதற்காக 2024 மார்ச் மாதத்தில் அவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஞானசார தேரருக்கு எதிராக இருந்த பிற வழக்குகளிலும் அவரது குற்றங்கள் உறுதிசெய்யப்பட்டு சிறைத்தண்டனைத் தீர்ப்புகள் மேல்முறையீட்டு மேல்நீதிமன்றங்களாலும் உறுதி செய்யப்பட்டன.
காவியுடை களைவு
இதனையடுத்து ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நடைமுறையிலுள்ள சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளின்படி அவர் நடத்தப்பட்டார். இலங்கை சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ், குற்றவியல் வழக்கின் அடிப்படையில் கடுங்காவல் தண்டனை பெறக்கூடிய எந்தவொரு நபரும் சிறைச்சாலையின் சீருடையையே அணிய வேண்டும். இதன் அடிப்படையில், ஞானசார தேரரின் காவியுடை களையப்பட்டு , கைதிகளுக்கான வெள்ளை நிற சிறை ஆடை அவருக்கு வழங்கப்பட்டது.
இதுதான் தற்போது இலங்கையின் மகாசங்கங்களையும் பௌத்தர்களையும் கொதிப்படைய வைத்ததுடன் சிவப்பு சட்டைக்காரர்களான ஆட்சியாளர்களுக்கும் பெரும் நெருக்கடியைக்கொடுத்தது. பௌத்த துறவி ஒருவரின் சம்மதமின்றியோ அல்லது மகாநாயக்கத் தேரர்களின் (பௌத்த பீடாதிபதிகள்) வழிகாட்டல்/அனுமதியின்றியோ அவரது காவியுடையை அகற்றுவது பௌத்த தர்மத்திற்கும், மத மரபுகளுக்கும் எதிரானது.ஒரு பௌத்த துறவி வினய (துறவற) விதிகளை மீறி தானாக முன்வந்து காவியுடையைத் துறந்தால் ஒழிய, அரச அதிகார அமைப்புகள் அல்லது சிறைத்துறை மூலமாக பலவந்தமாகவோ அல்லது சட்டத்தின் பெயராலோ காவியுடையைக் கழற்ற வைப்பது பௌத்த கலாசாரத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என கடும் எதிர்ப்பை வெளியிட்டு பல பௌத்த அமைப்புகளும், பிக்குகளும் வீதிகளில் கிளர்ந்தெழத்தொடங்கினர்.
ஞானசார தேரரின் குமுறல்
ஞானசார தேரரும், சிறைச்சாலையில் தமக்கு காவி உடை அணிய அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டார் .தனக்கு இதற்கு முன்னர் பல தடவைகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், எந்தவொரு அரசாங்கமும் சிறைத் தண்டனைக் காலத்தில் காவி உடையை அகற்றுமாறு எனக்கு கூறியதில்லை,ஆனால், தற்போதைய அரசாங்கமே எனது காவி உடையை அகற்றி வெள்ளை நிற சிறை உடை அணிவித்துள்ளது.சிறைச்சாலையில் காவி உடை அணிவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது தொடர்பில் மகா சங்கத்தினரே தீர்மானிக்க வேண்டும் “காவி உடை அணிந்திருந்தாலும், வெள்ளை சிறை உடை அணிந்திருந்தாலும் ஞானசாரர் எப்போதும் ஞானசாரர்தான்” அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டே இதுவரை நான் செயற்பட்டு வந்தேன். இதனையும் எதிர்கொள்வேன் “பொறுத்திருந்து பார்ப்போம்”என தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
63 பிக்குகளுக்கு இல்லாத உரிமை
ஞானசார தேரருக்கு மட்டும் ஏன்?
பௌத்த மகாசங்கங்கள்,அஸ்கிரியபீடங்கள், பிக்குகளின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதன்ன கூறுகையில், சிறைச்சாலை விதிமுறைகளின்படி,3 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிறைச்சாலையினால் வழங்கப்படும் சிறை ஆடையைஅணிந்தே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.பௌத்த பிக்கு ஒருவருக்கு நீதிமன்றத்தினால் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தால்,அந்த தண்டனைக் காலத்தைச் சிறைச் சாலையில் கழிக்கும் போது அவர் தமதுகாவி ஆடையை அணிய முடியும்.
எனினும், விதிக்கப்பட்டது கடுழியச் சிறைத்தண்டனை என்றால் எந்தவொரு நபரும் சிறை ஆடையையே அணியவேண்டும். தண்டனை பெற்ற ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது,அவரது சிறைத்த ண்டனைக் காலம் 3ஆண்டுகளை விடக் குறைவானதாக இருந்தால், அவர் தண்டனைக்கு முன்னர் அணிந்திருந்த சாதாரண ஆடையை அணிவதற்குச் சிறைச்சாலை அத்தியட்சகர் அனுமதி வழங்க முடியும்.அத்தகைய சந்தர்ப்பங்களில்பௌத்த பிக்குகளுக்கும் காவி ஆடைஅணிய அனுமதி வழங்கப்படலாம்.ஆனால், 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டஎந்தவொரு தராதரத்தைக் கொண்டநபராக இருப்பினும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது சிறைச்சாலையினால் வழங்கப்படும் ஆடையைஅணிந்தே ஆஜர்படுத்தப்பட வேண்டும்.மேலும், நாட்டின் சிறைச்சாலைகளில்63 க்கும் மேற்பட்ட பிக்குகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் சிறைச்சாலையினுள் சிறை ஆடையையேஅணிந்துள்ளனர் என்று தெரிவித்தார் .
ஜனாதிபதிக்கு கடிதம்
இந்நிலையில் 4 பிரதான பிரிவுகளின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு காரசாரமாக கடிதம் ஒன்றை அனுப்பினர் .அதில் ஒரு பௌத்த துறவியின் காவியுடையை அகற்றுவது அல்லது அவரைத் துறவறத்திலிருந்து நீக்குவது தொடர்பான முடிவுகளை பௌத்த மகா சங்கத்தினர் (மகாநாயக்க தேரர்கள்) தான் தீர்மானிக்க முடியும்.சிறைச்சாலை அதிகாரிகளோ அல்லது சிவில் சட்டங்களோ அதைத் தீர்மானிக்கக் கூடாது.ஒரு பிக்கு நீதிமன்றத்திற்கோ அல்லது வெளியே அழைத்துவரப்படும்போதோ சிறைச்சாலைச் சீருடையில் காண்பிக்கப்படுவது பௌத்த தர்மத்திற்கும், மத மரபுகளுக்கும் இழைக்கப்படும் அவமதிப்பு இது பௌத்தர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது என்று கோபத்தை வெளிப்படுத்தினர்
காவியுடை களவைத் தடுக்கக்கோரி மனு
இதற்கிடையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தினியாவல பாலித தேரர் தாக்கல் செய்த இந்த மனுவில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார , அமைச்சின் செயலாளர், மற்றும் புத்த சாசனம் மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டனர்.
ஞானசார தேரர் ஒரு குடும்பஸ்தர்
இவ்வாறான நிலையில் ஞானசார தேரரின் காவியுடை நீண்ட காலத்துக்கு முன்னரே களையப்பட்டிருக்க வேண்டும் என ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் தெரிவித்தார் .ஞானசார தேரருக்கு மீண்டும் காவியுடை அணிவிக்க வேண்டும் என சில பௌத்த பிக்குகள் பாதயாத்திரையை ஆரம்பித்த நிலையில், அந்த நடவடிக்கையை விமர்சித்த சத்தாரத்ன தேரர், பௌத்த தர்மத்தின் அடிப்படையில் காவியுடையை இழக்கச் செய்யக்கூடியதாகத் தாம் கருதும் பல்வேறு செயல்களில் ஞானசார தேரர் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி னார்.ஒரு தடவை அவர் குடித்து விட்டு மதுபோதையில் வாகனம் செலுத்தி நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியுள்ளார். அவருக்கு ஒரு மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிரான்ஸில் இருக்கின்றார்கள். ஆக காவியுடை களையப்படுவதற்கு இவ்வாறான தீய செயல்களே போதுமானது.
அப்போதெல்லாம் இந்த மகாநாயக்கர்களும், ஏனைய தேரர்களும் எங்கிருந்தார்கள்? மகாநாயக்கர்கள் மற்றும் மகாசங்கத்தினர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் ஜே.ஆர் ஜயவர்த்தனவுக்கு முன்பிருந்தவர்கள், அவருக்குப் பின் வந்த பிரேமதாச, சந்திரிக்கா, மகிந்த, மைத்திரி மற்றும் ரணில் எல்லோரும் இந்த நாட்டை ஆட்சி செய்தார்கள்.மேலும், ஞானசார தேரர் தொடர்பான கடந்தகால சர்ச்சைகள் எழுந்தபோது மகாநாயக்கர்கள் உள்ளிட்ட பௌத்த மதத் தலைவர்கள் ஏன் இதேபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதி -மகாசங்கத்தினர் சந்திப்பு
இவ்வாறான நிலையில் மகா சங்கத்தினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வை சந்தித்தனர் . இந்த சந்திப்பையடுத்து சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நிலையானகட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, நீதிமற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ், பொது நிர்வாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த ஆரியரத்ன,பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. சேனாரத்ன,சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஒருவரான ஏ.சி. கஜநாயக்க ஆகியோர்இக்குழுவில் அங்கம் வகித்தனர்.
இந்த விசேட குழுவின் முதலாவது கூட்டம் அதன் தலைவரான புத்தசாசன, சமயமற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீரவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பௌத்த பிக்குகள், சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடையை அணிவதற்கு அனுமதிக்க வேண்டும் என விசேட குழு பரிந்துரைத்தது.இது தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகையில், தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளிலுள்ள பிக்குகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பௌத்த நிக்காய அந்தப் பிக்குவின் காவி உடையை அணியும் உரிமையை மறுக்காதவரை, சிறையில் உள்ள பிக்குகள் காவி உடையை அணியலாம். இதற்கமைய, சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் 356ஆம் நிலையான விதியில் திருத்தங்களை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது. சிறையில் அனுமதிக்கப்படும் பௌத்த பிக்கு ஒருவர் காவி உடையைக் களைய வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்காக, பௌத்த விவகாரத் திணைக்களத்துடன் கலந்தாலோசிக்க சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
மேலும், விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக, நடைமுறையில் உள்ள சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் நிலையான உத்தரவுகளைத் திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழுள்ள விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் நிலையான உத்தரவுகளை மீளாய்வு செய்து புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு, தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்துள்ளது என்று தெரிவித்தார்.
ரகுபதி சர்மாவிற்கு ஒரு நீதி
ஞானசார தேரருக்கு ஒரு நீதி
1999 ஆம் ஆண்டு, சந்திரிகா குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாகச் வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சைவ சமய மதகுருவான ரகுபதி சர்மாவை இலங்கையின் மிகக் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம் சிறைக்குள் தள்ளியது. மனித நாகரிகமே தலைகுனிய வேண்டிய சித்திரவதைக் கூடாரங்களுக்குள் அவர் இழுத்துச் செல்லப்பட்டார். ஒரு இந்து மதகுரு என்ற தயவின்றி அவர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.ஆசாரமிக்க ஒரு இந்து அர்ச்சகராக, தீவிர சைவ உணவை மட்டுமே உண்டு வந்த அவரது பூணூல் மிருகத்தனமாக அறுத்தெறியப்பட்டது. அவரது மத நம்பிக்கையை மிதித்து, கட்டாயப்படுத்தி அசைவ உணவும் மதுபானமும் உண்ண நிர்ப்பந்தித்து மனத்தூய்மையை அவமதித்தார்கள்.
இது போதாதென்று தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்தார்கள். முட்கம்பி சுற்றப்பட்ட குழாயை ஆசனவாயில் நுழைத்து வெளியே இழுத்தார்கள்; அந்தரங்க உறுப்புகளை மேசை இலாச்சியில் வைத்து நசுக்கினார்கள். அவருக்குத் துளியும் புரியாத சிங்கள மொழியில் எழுதப்பட்ட அறிக்கைகளில், சித்திரவதை மூலம் கையெழுத்து வாங்கினார்கள்.சட்ட மருத்துவ அறிக்கை அவரது உடலில் இருந்த தீக்காயங்களையும், தழும்புகளையும் தெளிவாக உறுதிப்படுத்தியது. ஆனாலும் நீதி கிடைக்கவில்லை. கைது செய்யப்பட்ட முதல் 18 மாதங்களுக்கு அவருக்குத் தன்னைப் பிரதிநிதித்துவம் செய்யச் சட்டத்தரணியை ஏற்பாடு செய்யக்கூட அனுமதி மறுத்தார்கள். இறுதியில் 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற இடி அவர் தலையில் இறக்கப்பட்டது.
சித்திரவதையின் வடுக்களால் அவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. நீரிழிவு, இரத்த அழுத்தப் பிரச்சினைகளால் தளர்ந்த உடலோடு சிறையில் துடித்தார். தன்னுடைய பாவனைக்கு அவர் கேட்ட சக்கர நாற்காலிக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது. சிறையில் கோவிட்-19 தொற்று வந்தபோது, படுக்கையிலேயே வலியால் கதறினார்.இந்த நரகத் துயரம் இவரோடு மட்டும் நிற்கவில்லை. இவரது மனைவி வசந்தி ரகுபதி சர்மாவும் கைது செய்யப்பட்டிருந்தார். கடுமையான சித்திரவதைகளுக்குப் பின், 15 ஆண்டுகள் சிறையில் கழித்தார். இறுதியில், 2015இல் நீதிமன்றத்தால் “குற்றமற்றவர்” என விடுவிக்கப்பட்டார்.
பெற்றோர் இருவரும் சிறைக்குள் முடங்கிக் கிடந்தார்கள். ஆதரவற்ற நிலையில் இருந்த அவர்களின் 6 மற்றும் 8 வயது குழந்தைகள் மட்டக்களப்பில் உள்ள ஓர் இல்லத்தில், பெற்றோர் அரவணைப்பின்றி ஏங்கித் தவித்த அவர்களின் வேதனை வார்த்தைகளில் அடங்காது. 22 ஆண்டுகளுக்கும் மேலான இளமைக்காலம், குடும்பத்தின் நிம்மதி, பிள்ளைகளின் எதிர்காலம் என அத்தனையையும் இழந்துவிட்டார்கள்.2022 நவம்பரில் ரணில் விக்ரமசிங்கவின் பொதுமன்னிப்பின் கீழ் இவர் வெளியே வந்தார்.
ஆனால் இதே நாட்டில் சமூகத்தில் வெறுப்பையும் இனவாதத்தையும் விதைத்து, தீவிர கிரிமினல் குற்றப் பின்னணியோடு நீதிமன்ற அவமதிப்புக்காக சிறை தண்டனை பெற்ற ஞானசார தேரர் விடயத்தில் மட்டும் சட்டத்தை மாற்றக்கோரி பிக்குகள் பாத யாத்திரை வருகின்றனர். காவியுடையில் சட்டம் கைவைத்து மகா பாவம் என எதிர்க்கட்சிகள் கலங்கித்துடிக்கின்றன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க வெறும் இரண்டு நாள்களுக்குள் காவியுடையை கழற்றிய சட்ட விதிகளையே தூக்கி எறிந்துவிட்டார் .”சட்டம் அனைவருக்கும் சமம்” என்ற போலி வார்த்தைகளின் பின்னாலிருக்கும் ஜே.வி.பி.யின் அதிகாரத்தின் கோர முகத்தை புரிந்து கொள்ள இந்த ஞானசார தேரர் உதவியுள்ளார்
காவியுடை முன்பாக
மண்டியிட்ட சிவப்பு சட்டை
ஆக மொத்தத்தில் சித்தாந்தங்கள் மாறலாம், தலைவர்கள் வரலாற்றின் பக்கங்களில் மறையலாம், ஆனால், இலங்கையின் அரசியல் களத்தில் காவி உடைகளின் செல்வாக்கு மட்டும் என்றும் மாறுவதுமில்லை மங்குவதுமில்லை. ஞானசார தேரர் விவகாரம் நமக்கு உணர்த்துவது ஒன்றைத்தான்.இலங்கையில் அரசியலமைப்பை விடவும், பாராளுமன்ற பெரும்பான்மையை விடவும் ,மக்களின் தெரிவை விடவும் மகாசங்கத்தின் முடிவே இறுதித் தீர்ப்பாக அமைகிறது. ஆட்சியாளர்கள் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட முற்பட்டாலும், காவி உடைக்கு முன்னால் தங்களின் ‘அதிகாரக் கிரீடத்தைக்’ கழற்றி வைத்துவிட்டு தலைவணங்குவதை .அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை பிக்குகளுக்காக சிறை விதிகளை மாற்ற முடிவுசெய்து ”காவியுடை”முன்பாக மண்டியிட்ட சிவப்பு சட்டை ஜனாதிபதி அநுரகுமாரவின் சரணாகதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், இலங்கையில் ஆட்சிக் கட்டிலைத் தீர்மானிக்கும் உண்மையான அதிகாரச் சாவி, அரசாங்கத்திடம் இல்லை. அது காவி உடை உடுத்திய மகாசங்கத்தின் கைகளிலேயே எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறது
















