சிறுபான்மையினரின் தோள்களில் கைபோட்டுக்கொண்டு, உள்ளுக்குள் அப்பட்டமான பேரினவாத , மதவாத அரசியலை முன்னெடுக்கும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை வேடம் போட்டு வருகின்றமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மதவாத, இனவாத அரசியலை சஜித்துக்கு முட்டுக்கொடுக்கும் பங்காளிகளோ அல்லது பங்காளிகளாக இல்லாமல் சஜித் மீது ஒருதலைக்காதல் கொண்டுள்ளவர்களோ கண்டும் காணாதவர்கள்போல் இருப்பதும் பட்டும் படாமல் அறிக்கைவிடுவதும் சஜித்தும் திருந்தவில்லை அவரின் பங்காளிகளும் வருந்தவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது. இந்த வேடதாரியான சஜித் பிரேமதாசவுக்கும் அவரது கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும் முட்டுக்கொடுக்கும் பங்காளிகளாகவுள்ள கொழும்பை,மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூடடணித் தலைவர்களான மனோகணேசன் ,இராதாகிருஷ்ணன் , திகாம்பரமோ வடக்கு,கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் ரவூப் ஹக்கீம் .அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் ரிஷாத் பதியுதீனோ அல்லது பங்காளிகளாக இல்லாமல் சஜித் மீது ஒருதலைக்காதல் கொண்டுள்ள சுமந்திரனோ சஜித்தின் இந்த இனவாத,மதவாத நடவடிக்கைகள் கண்டும் காணாதவர்கள்போல் இருப்பதும் பட்டும் படாமல் அறிக்கைவிடுவதும் சஜித்தும் திருந்தவில்லை அவரின் இந்த இரட்டை வேடத்தைப்பார்த்து இவர்களும் வருந்தவில்லை என்பது வெளிப்படுகின்றது.”
—-கே.பாலா
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணம் என்பது சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை முறைகேடாகப் பயன்படுத்திய வரலாற்றைக் கொண்டது. மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளைத் தங்களின் ‘தேர்தல் பங்காளிகள்’ எனப் பிரகடனப்படுத்தி, தமிழரசுக்கட்சியின் அரசியல் செல்வாக்கையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சிறுபான்மை மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் கவரும் சஜித் பிரேமதாசா, தேர்தல் முடிந்த மறுநிமிடம் பெரும்பான்மைவாத அஜண்டாவை நோக்கியே நகர்கிறார். ‘இனவாதமற்றவர்கள்’ என்ற பிம்பத்தை போலித்தனமாகக் கட்டமைத்துக் கொண்டு, அதேவேளையில் பேரினவாதிகளை மற்றும் மதவாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் காய்களை நகர்த்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த துரோகத்தனஅரசியல் இரட்டை நிலை மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்று இரு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட புத்த பெருமானின் முதல் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக திருகோணமலை சம்புத்தி ஜயந்த விகாரை புத்தர் சிலை பிரதிஷ்டை இடம்பெற்று இனவாத ஆக்கிரமிப்பாக அது இடம்பிடித்த நிலையில் இவ்விடயத்தில் பிக்குகளிடமும் பேரினவாதிகளிடமும் அநுரகுமார அரசாங்கம் அடிபணிந்தமை, தற்போது சிறையில் இருக்கும் ஞானசார தேரரின் காவியுடை தொடர்பில் மீண்டும் பிக்குகளிடமும் பேரினவாதிகளிடமும் அடிபணிந்தமை இந்த அரசாங்கத்துக்கு கறுப்பு புள்ளிகளாக அமைந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் மூலம் தமிழ் மக்களை தாம் ” இனவாதமற்றவர்கள் என்ற முகமூடி” அணிந்து ஏமாற்றிக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாடி வந்த ”இரத்தத்திலேயே இனவாதம் கலந்த” பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் போலி முகமூடி மீண்டும் கிழிந்து போயுள்ளது
சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தீவிர இனவாத வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய ஞானசார தேரர் என்ற பிக்குவுக்கு ஆதரவாகச் சஜித் பிரேமதாச களம் இறங்கியுள்ளதுடன் தற்போது சிறையிலுள்ள ஞானசார தேரரின் விவகாரத்தை தற்போதைய அரசாங்கம் கையாளுவதன் மூலம், அவர்கள் சிறுபான்மை சமூகங்களின் (தமிழ் மற்றும் முஸ்லிம்) ஆதரவைப் பெற அல்லது அவர்களை திருப்திப்படுத்த முயற்சிப்பதாக அக்கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியான லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டி தமது கட்சியின் இனவாத முகத்தை மீண்டும் ஒரு தடவை வெளிப்படுத்தியுள்ளனர். இச்சந்திப்பின் போது லக்ஷ்மன் கிரியெல்ல சிறுபான்மை சமூகங்களைக் குறிக்க “சுலு ஜாதி” (சிறிய இனங்கள்) என்றும், பெரும்பான்மை சிங்கள மக்களைக் குறிக்க “மகா ஜாதி” (பெரிய இனம்) என்றும் இன ரீதியாகப் பிளவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியமை தற்போது தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் கொதி நிலையை ஏற்படுத்தியுள்ளது .
ஆனால் இந்த வேடதாரியான சஜித் பிரேமதாசவுக்கும் அவரது கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும் முட்டுக்கொடுக்கும் பங்காளிகளாகவுள்ள கொழும்பை, மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூடடணித் தலைவர்களான மனோகணேசன் ,இராதாகிருஷ்ணன் , திகாம்பரமோ வடக்கு,கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் ரவூப் ஹக்கீம் .அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் ரிஷாத் பதியுதீனோ அல்லது பங்காளிகளாக இல்லாமல் சஜித் மீது ஒருதலைக்காதல் கொண்டுள்ள சுமந்திரனோ சஜித்தின் இந்த இனவாத,மதவாத நடவடிக்கைகள் கண்டும் காணாதவர்கள்போல் இருப்பதும் பட்டும் படாமல் அறிக்கைவிடுவதும் சஜித்தும் திருந்தவில்லை அவரின் இந்த இரட்டை வேடத்தைப்பார்த்து இவர்களும் வருந்தவில்லை என்பது வெளிப்படுகின்றது.
இதில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் , கண்டி மல்வத்து பீடாதிபதியிடம் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் வெளிப்படுத்தி இனவாதத்தை பின்வருமாறு கண்டிக்கின்றார். ”கண்டி மல்வத்து பீடாதிபதியிடம் ஐக்கியம்மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல, தமிழ், முஸ்லிம், இலங்கையர்களை தொடர் படுத்தி பேசியமை கடும் தவறானது. அரசாங்கம், தமிழ் பேசும் மக்களை சந்தோஷ படுத்த, ஞானசாரர் விவகாரத்தை பயன் படுத்துகிறது என்ற பொருள் படும் கிரியல்லவின் கருத்து அதிக பிரசங்கிதனமானது.. மேலும், சிறுபான்மை மக்களை “சுலுஜாதி”, பெரும்பான்மை மக்களை “மகாஜாதி” என அடையாள படுத்துகின்றமை தவறு. கடந்த காலத்தின் பிளவுகளை ஏற்படுத்திய மொழிநடையை மீண்டும் உயிர்ப்பிக்காமல், சர்ச்சைக்குரிய விடயங்களை கூட்டாக கையாளும் எமது திறனிலேயே இலங்கையின் ஜனநாயக எதிர்காலம் தங்கியுள்ளது. . தமிழ் பேசும் மக்களுக்கும், இவை தொடர்பில் பொது வெளிகளில் பேச வேண்டாம் என நான் ஏற்கனவே பொறுப்புடன் கோரி உள்ளேன். இவை இறுதியில் எங்கே போய் முடியும் என என் பட்டறிவுக்கு தெரியும்” எனக்கடிதம் அனுப்பினார்
ஆனால் ஒரு சில தினங்களுக்குள்ளேயே மனோகணேசன் தனது முக நூல் பதிவில் ,”சஜித்பிரேமதாசவிடம் நான் காணும் சில நல்ல அறிகுறிகள். (சரி, பிழை, கண்டால் முகத்துக்கு முன்னே சொல்லிட வேண்டும் அல்லவா?) சற்றுமுன், அவரிடமே சொன்னேன் 1983-கறுப்பு ஜூலை குற்றங்களுக்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோரினீர்கள்.,13ம் திருத்த சட்டத்தை முழுமையா அமுல் படுத்துவதாக உறுதி அளித்தீர்கள்.2024 தேர்தலுக்கு முன் நாம் பேசி, முடித்தபடி, எண்ணிக்கையில், குறைவான சமூகங்களை “சிறு சமூகம்” என்றும், எண்ணிக்கையில், அதிகமான சமூகத்தை “பெரிய சமூகம்’என்றும், குறிப்பிடாமல், “சக சமூகங்கள்” என குறிப்பிடுகிறீர்கள்.பல சவால்களுக்கு மத்தியில் நிலைப்பாடுகளை அறிவிக்கிறீர்கள். இப்படியே போனால், வரலாறு ஒருநாள் தீர்ப்பளிக்கலாம். அது மக்கள் தீர்ப்பை விட மகத்தானது” என்று பாராட்டி புகழாரம் சூட்டுகின்றார்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனது ஆட்சியில் இராணுவத்திற்கே முன்னுரிமை . இராணுவத்தினர் பாதுகாக்கப்படுவார்கள் என சிங்களவர்களுக்கு சஜித் கொடுத்த க்குறுதியும், திருகோணமலை சம்புத்தி ஜயந்த விகாரை சர்ச்சையில் பௌத்த பிக்குகள் பௌத்த மதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அல்லது உரிமைகளைப் பயன்படுத்துவதையோ எவரும் தடுக்க முடியாது. இலங்கையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்த மூலையிலும் விகாரைகள் அமைப்பதையோ அல்லது புத்தர் சிலைகள் வைப்பதையோ எதிர்ப்பது பௌத்த மதத்திற்கு எதிரானது என அவர் கூறியதோ, 2019ஆண்டு ஜனாதிபதித்தேர்தலிலும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலிலும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு உட்பட, நாடு முழுவதும் 1000 விகாரைகள் கட்டுவேன் என சிங்கள மக்களுக்கு உறுதியளித்திருந்ததும் தனது தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்காக மனோகணேசனுக்கு மறந்து போயிருக்கலாம்
அதுமட்டுமல்ல சிறுபான்மையினங்களான தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான கடும் இனவாதியும் மதவாதியுமான ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் காவி உடை களையப்பட்டு சிறை ஆடை வழங்கப்பட்டமைக்கு எதிராக பிக்குகளுடன் இணைந்து சஜித் பிரேமதாசாவும் அவரது கட்சியினரும் வீதிக்கு இறங்கியுள்ளதுடன் இனவாதத்தையும் மதவாதத்தையும் மீண்டும் கையில் எடுத்துள்ளனர் ஞானசார தேரர் சிறைவாசம் மற்றும் தண்டனைகளை எதிர்கொண்ட சூழலில், சஜித் பிரேமதாசவின் கட்சியினர் கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து பௌத்த பிக்குகள் கைது செய்யப்படுவதையும் சிறையில் அடைக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என்றும், தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களின் (தமிழ் மற்றும் முஸ்லிம்) ஆதரவைப் பெற அல்லது அவர்களை திருப்திப்படுத்த இவ்வாறான கைதுகளை மேற்கொள்வதாகவும் இதனால் பௌத்த சாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியமையும் இச்சந்திப்பின் போதுசஜித் கட்சியின் மூத்த தலைவரான லக்ஷ்மன் கிரியெல்ல சிறுபான்மை சமூகங்களைக் குறிக்க “சுலு ஜாதி” (சிறிய இனங்கள்) என்றும், பெரும்பான்மை சிங்கள மக்களைக் குறிக்க “மகா ஜாதி” (பெரிய இனம்) என்றும் இன ரீதியாகப் பிளவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியமையும் மனோகணேசனுக்கு மறந்திருக்கலாம் .அதனால்தான் சஜித்தை புகழ்ந்து, பாராட்டி இப்படி ஒரு பதிவை தனது முக நூலில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகனும் ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பிரதித்தலைவருமான சஜித் பிரேமதாசவை தலைவராகவும் தமிழ், முஸ்லிம் கட்சிகளைப் பங்காளிக் கட்சிகளாகவும் கொண்ட இந்தக்கட்சி தமது கட்சி அனைத்து மக்களுக்குமானது, இனவாதமற்றது என்று கூறிக்கொண்டாலும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக கட்சி இராணுவமயமாக்கப்பட்டது . இலங்கை இராணுவத்தின் தளபதியாகவிருந்த போர்குற்றச் சாட்டுகளுக்குள்ளான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவையும் தனது கட்சி வேட்பாளராக்கி அவரையும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்ததுடன் முன்னாள் இராணுவ, கடற்படைத் தளபதிகள் படு தீவிரமாக இணைக்கப்பட்டு அவர்களுக்கு கட்சியில் உயர் பதவிகளும் வழங்கப்பட்ட துடன் நாட்டில் அரசொன்றை அமைக்க இராணுவத்திலுள்ளவர்கள் தமது கட்சியில் இணைய வேண்டும் என்ற அழைப்பையும் எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச விடுத்தார்
ஐக்கிய மக்கள் சக்தியில் இதுவரையில் முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க. இராணுவத்தின் முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் ஓய்வு பெற்றவர்களான மேஜர் ஜெனரல் சமன் லியனகே ,மேஜர் ஜெனரல் அருண வன்னியாராச்சி, மேஜர் ஜெனரல் ஹேரத் , மேஜர் ஜெனரல் அதுல கொடிப்புலி, மேஜர் ஜெனரல் பிரியந்த நாபானகொட, மேஜர் ஜெனரல் வசந்த ஜயசூரிய , மேஜர் ஜெனரல் எச்.எம்.எம்.பி ஹேரத், மேஜர் ஜெனரல் நிஷங்க ரணவன, மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து மேஜர் ஜெனரல் உபுல் விதானகே, மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, பிரிகேடியர் மஞ்சுள விஜேசிங்க ஆகிய இராணுவத்தின் முன்னாள் தளபதிகள் இணைந்துள்ளனர்.இனவாதம் மதவாதம் அற்ற ஒரு கட்சியில் எப்படி இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதிகள், போர்குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்கள் இணைவார்கள்?
இவர்கள் மட்டுமன்றி இலங்கை கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற அட்மிரல் தயா சந்தகிரி,முன்னாள் சிறப்பு அதிரடிப்படை தளபதியான ஓய்வு பெற்ற நிமல் லெவ்கே,ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளதுடன் இவர்கள் அனைவருக்கும்கட்சியில் பல்வேறு பதவி நிலைகளும் வழங்கப்பட்டுள்ளன. .இவ்வாறான நிலையில் இராணுவத்தில் தனக்கு எதிராக செயற்பட்டவர்களும் கட்சியில் உள்வாங்கப்பட்டு உயர் பதவிகள் வழங்கப்பட்டதால் அதிருப்தியடைந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசாவுடன் முரண்பட்டதால் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
மலையக தமிழ் ,முஸ்லிம் கட்சிகளை பங்காளிகளாக வைத்துக்கொண்டு ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்றத் தேர்தலில் தனதும் தனது கட்சியின் வெற்றிக்காகவும் தமிழரசுக்கட்சியை பயன்படுத்தி வடக்கு,கிழக்கு தமிழ்மக்களின் வாக்குகளையும் மலையகத்தமிழ் தலைவர்களையும் கட்சிகளையும் பயன்படுத்தி மலையக தமிழ், மக்களின் வாக்குகளையும் முஸ்லிம் தலைவர்களையும் கட்சிகளையும் பயன்படுத்தி முஸ்லிம்களின் வாக்குகளையும் பெற்றுக் கொண்டு தென்னிலங்கை வாக்குகளை கவர்வதற்காக கட்சியையும் இராணுவ மயப்படுத்தி தனது ஆட்சியில் இராணுவத்திற்கே முன்னுரிமையென அறிவித்துக்கொண்டு இரட்டை வேடம்போட்டு வந்த சஜித் பிரேமதாச தலைமையலான இந்தக்கட்சிதான் தற்போது புத்தர் சிலை,காவியுடை மூலம் மீண்டும் இனவாதம் கக்கத்தொடங்கியுள்ளது
திருகோணமலை சம்புத்தி ஜயந்த விகாரைப் பகுதியில் 2025 ஆம் ஆண்டு சட்டவிரோத ”ரெஸ்ரோரண்ட்” ஒன்றை அகற்றும் அரச அதிகாரிகளின் நடவடிக்கையை தடுக்க இரவோடிரவாக சட்டவிரோதமாக புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்ய முயன்ற பிக்குகளினால் அப்பகுதியில் ஏற்பட்ட களேபரமும் அதன் தொடர்ச்சியாக அதனை சிங்கள -தமிழ் இன முறுகலாக, கலவரமாக மாற்றி அநுர குமார அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட விருந்த சதியும் தவிர்க்கப்பட்டபோதும் இந்த சம்பவத்தில், இதுவரை காலமும் ஜனநாயகம், சமத்துவம், சமஉரிமை இனநல்லுறவு , மதப் புரிந்துணர்வு என்ற முகமூடிகளுடன் இருந்த பிரதான எதிர்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினதும் முகமூடிகளை கிழித்து சஜித் பிரேமதாச ஒரு கடும் இனவாதி, அவரது கட்சியின் கொள்கையும் இனவாதம்தான் என்பதனை புத்த பெருமான் தமிழ் மக்களுக்கும் சஜித் பிரேமதாசாவை மீட்பராக வணங்கும் இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் புரிய வைத்தார்
“பௌத்த பிக்குகள் பௌத்த மதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அல்லது உரிமைகளைப் பயன்படுத்துவதையோ எவரும் தடுக்க முடியாது.அரசியலமைப்பின் 9ஆவது சரத்தின்படி இலங்கையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்த மூலையிலும் விகாரைகள் அமைப்பதையோ அல்லது புத்தர் சிலைகள் வைப்பதையோ எதிர்ப்பது பௌத்த மதத்திற்கு எதிரான செயல் என்று இந்த விடயத்தில் சஜித் பிரேமதாச கொதித்தெழுந்தார் .சஜித் பிரேமதாச ஒன்றும் இனவாதம் துறந்த உத்தமர் அல்ல. 2019ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு உட்பட, நாடு முழுவதும் 1000 விகாரைகள் கட்டுவேன் என சிங்கள மக்களுக்கு உறுதியளித்திருந்தார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலின் போதும் அந்த உறுதிமொழியை மீண்டும் வழங்கியிருந்தார் .இவ்வா றான நிலையில்தான் தமிழர் நிலத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் , புத்தர் சிலை வைத்தல் , பௌத்த விகாரைகள் அமைத்தல் மற்றும் தமிழ் மக்களின் நில உரிமைப் பிரச்சினைகளின் போது, சஜித் பிரேமதாச சட்டத்தின் ஆட்சியையோ அல்லது சிறுபான்மையினரின் உணர்வுகளையோ பொருட்படுத்தாமல் பௌத்த பிக்குகளின் பக்கமே , இனவாதத்தின் மொத்த உருவமாக நின்றார் .
இவ்வாறான நிலையில்தான் கடும் இனவாதியும் மதவாதியுமான ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்ப ட்டுள்ள நிலையில் அவரின் காவி உடை களையப்பட்டு சிறை ஆடை வழங்கப்பட்டமைக்கு எதிராக பிக்குகளுடன் இணைந்து சஜித் பிரேமதாசாவும் அவரது கட்சியினரும் வீதிக்கு இறங்கியுள்ளதுடன் இனவாதத்தையும் மதவாதத்தையும் மீண்டும் கையில் எடுத்துள்ளனர் . ஞானசார தேரர் சிறைவாசம் மற்றும் தண்டனைகளை எதிர்கொண்ட சூழலில், சஜித் பிரேமதாசவும் அவரது கட்சியினரும் கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தனர்.
அப்போது பௌத்த பிக்குகள் கைது செய்யப்படுவதையும் சிறையில் அடைக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என்றும், ஞானசார தேரருக்குப் பதிலாகத் தான் சிறை செல்லவும் தயார்” என்றும் பௌத்த கலாசாரத்தையும் சாசனத்தையும் பாதுகாக்கப் போவதாகவும் சஜித் பிரேமதாசா கூறினார்.அத்துடன் தற்போதைய அரசு பௌத்த பிக்குகளைக் இலக்கு வைத்து நடவடிக்கை எடுப்பதாகவும்,தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களின் (தமிழ் மற்றும் முஸ்லிம்) ஆதரவைப் பெற அல்லது அவர்களை திருப்திப்படுத்த இவ்வாறான கைதுகளை மேற்கொள்வதாகவும் இதனால் பௌத்த சாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர் .
சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தீவிர இனவாத வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய ஞானசார தேரர் என்ற ஒருவருக்கு ஆதரவாகச் சஜித் பிரேமதாச குரல் கொடுத்தது, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இனவாதமற்றவர்களாக நடித்துக்கொண்டு மலையக தமிழ் ,முஸ்லிம் கட்சிகளை பங்காளிகளாக வைத்துக்கொண்டு. ஒவ்வொரு தேர்தலிலும் இவர்களை பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் வாக்குகளையும் பெற்றுக்கொண்டு வந்த சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி செய்வதோ அப்பட்டமான இனவாத,மதவாத அரசியல்.
ஒவ்வொரு தேர்தலிலும் ‘இனவாதமற்ற மாற்று சக்தி’ என்ற போர்வையோடு மேடையேறும் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைத் தன் அரசியல் சதுரங்கத்தில் காய்களாகப் பயன்படுத்தி வருகிறது. மலையகத் தமிழ் மக்களின் தலைமைகளையும், முஸ்லிம் சமூகத்தின் தலைமைகளையும் தங்களின் தேர்தல் பங்காளிகளாகச் சேர்த்துக் கொள்வதும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஆதரவைச் சாமர்த்தியமாகப் பெற்று சிறுபான்மையினரின் வாக்குகளை அறுவடை செய்வதும் இவர்களின் வழக்கமான தேர்தல் உத்தியாகவே இருந்து வருகிறது. ஆனால்,சிறுபான்மையினரின் தோள்களில் கைபோட்டுக்கொண்டு, உள்ளுக்குள் அப்பட்டமான பேரினவாத மற்றும் மதவாத அரசியலை முன்னெடுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை வேடம் போட்டு வருகின்றமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்பட்டமான மதவாத, இனவாத அரசியலை இனியும் உணராமல் இருப்பது தமிழ், முஸ்லிம் சமூகங்களின் எதிர்காலத்திற்கே ஆபத்தானது















