பூடான் நாட்டில் பனிப்பாறை ஏரி திடீரென உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நமது அண்டை நாடான பூடானின் வடமேற்கு பகுதியில் உள்ள காசா மாவட்டத்தில் ஷிண்டாபு என்ற பனிப்பாறை ஏரி அமைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை இந்த ஏரி திடீரென உடைந்து அதிலிருந்த தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மோ சூஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள பிரபலமான இயற்கை ஊற்றான காசா சாச்சு பகுதியில் இருந்த கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. எனினும், முன்னதாகவே அப்பகுதியில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. வெள்ளநீர், புனாகா ட்சோங் பகுதியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகாங் பகுதியைக் கடந்துள்ளது. பூடானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அசாமின் துப்ரி மாவட்டம், மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதி, அலிபுர்துவார் மற்றும் ஜல்பைகுரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தின் கூச் பெகார் பகுதியில் சங்கோஷ் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆற்றின் நீர்மட்டத்தை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பூடானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் புனாகா-காசா நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் மண் மற்றும் பாறைகள் அடித்துவரப்பட்டு குவிந்துள்ளன. இதனால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளநீரில் அடித்துவரப்பட்ட சேதங்களால் சூரியசக்தி மூலம் இயங்கும் நீர்ப்பாசன திட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பாறைகள் உருகுவதால் உருவாகும் ஏரிகளில் இயற்கையான தடுப்பணைகள் உடையும்போது, அதிக அளவிலான தண்ணீர் திடீரென வெளியேறி இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் வேகமாக உருகுவது இத்தகைய அபாயங்களை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.



















