பாகிஸ்தானுக்கு வழங்கிய 3 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.25 ஆயிரம் கோடி) நிதியுதவி திட்டத்தை சவுதி அரேபியா மேலும் சில காலம் நீட்டித்துள்ளது என்று பாகிஸ்தான் நிதி அமைச்சர் முகமது அவுரங்கசீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: நிதியுதவிக்கான கால அவகாசம் நியாயமான காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான உறவை கருத்தில் கொண்டு, எவ்வளவு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை” என்றார். பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு திருப்பிச் செலுத்திய 3.5 பில்லியன் டாலர் கடனுக்கு மாற்றாக, கடந்த ஏப்ரல் மாதம் சவுதி அரேபியா 3 பில்லியன் டாலர் நிதியுதவியை வழங்கியிருந்தது. முதலில் இந்த நிதியுதவி 3 மாத காலத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் கால அவகாசம் கடந்த 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பாகிஸ்தானின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க சவுதி அரேபியா மேலும் 5 பில்லியன் டாலர் நிதியுதவியும் வழங்கியுள்ளது. இதற்கான கால அவகாசம் 2028-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அவுரங்கசீப் தெரிவித்தார்.



















