– 50 இற்கும் மேற்பட்டோர் காயம்
அனுராதபுரம் – மதவாச்சி வீதியின் ரம்பேவ பகுதியில் ஏ – 9 பிரதான வீதியில் 10ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் வேளையில் 3 பஸ்கள் ஒன்றோடொன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமையுடன், 50 இற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸும், அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இ.போ.ச. பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. அதேநேரம் இ.போ.ச. பஸ் ஒன்றின் பின்னால் வந்த தனியார் பஸ்ஸும் கட்டுப்பாட்டை இழந்து மோதியதிலேயே இந்தப் பாரிய தொடர் விபத்து சம்பவித்துள்ளது.
அன்று 10ம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்தக் கோர விபத்தில் காயமடைந்த 50 இற்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக அந்தப் பகுதியிலிருந்தவர்களினாலும் பொலிஸாரினாலும் மீட்கப்பட்டு, அவசர சிகிச்சைக்காக மதவாச்சி பிரதேச வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.



















