பைசாசி’ திரைப்படம் பூஜையுடன் நடைபெற்றது. பேஸான் மீசியா நிறுவனம் தயாரிப்பில், குழந்தை முருகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகும் இதிகாச திரைப்படம் ‘பைசாசி’. எஸ்.பி.ஆர் என்கிற சுந்தரபாண்டியராஜா கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகிகளாக யாஷிகா ஆனந்த், அஸ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இளம் நடிகைகள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆத்ரேயா இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.வி.உதயகுமார் மற்றும் சி.கே.முருகன் பாடல்கள் எழுத, ராஜேஷ்குமார் வசனம் எழுதுகிறார். மணிகண்டன் மற்றும் தாமரை நடனக் காட்சிகளை வடிவமைக்க, விஜய் ராஜான் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சதிஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பி.ஆர்.ஓ-வாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். பைசாசி படத்தின் இணை இயக்குநர் பிரகாஷ் பாபு பேசுகையில், “முருகன் எனக்கு 18 வருடங்கள் பழக்கம். திருமணம் முடிந்ததும் என்னால் பீல்டுக்குள்ள வர முடியல. ஆனால், முருகன் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தார். இந்த படத்தை மூன்று முறை எடுக்க முயற்சித்து முடியாமல் போய்விட்டது. இந்த முறை எப்படியாவது எடுத்துவிட வேண்டும், என்று முயற்சித்து முடித்திருக்கிறோம். முருகன் சாதாரணமானவர் அல்ல, அவர் உழைப்பு மிகப்பெரியது. இந்த படத்தின் மூளை அவர் தான். அவர் மூளை தான் இந்த படம் சிறப்பாக வருவதற்கு காரணம். இந்த படத்திற்காக ஹீரோ ராஜா பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார், அவருக்கு நன்றி. நான், என் மனைவி, ராஜா சார் மற்றும் முருகன் நான்கு பேரும் இணைந்து படத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்த படத்தை எப்படி பிரமாண்டமாக எடுக்கலாம், அதே சமயம் செலவுகளை எங்கு குறைப்பது, படத்தின் தரத்தை எப்படி அதிகரிப்பது, என்று மிக சரியான திட்டமிடலுடன் முருகன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். இன்றைய நிகழ்ச்சி குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.



















