காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் தொடர்ந்த வழக்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உளவுத்துறை முன்னாள் தலைவருக்கும் அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற அமைப்பின் சட்ட ஆலோசகராக இருக்கும் குர்பத் வந்த் சிங் பன்னூன், அமெரிக்காவில் வசித்து வருகிறார். அமெரிக்கா-கனடா குடியுரிமை பெற்ற இவரை கடந்த 2023-ம் ஆண்டு நியூயார்க்கில் வைத்து கொல்ல முயற்சி நடந்தது. இது தொடர்பாக நிகில் குப்தா என்ற இந்தியர் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பன்னூன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாக அவர் குற்றம் சாட்டி வருகிறார். எனவே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ‘ரா’-வின் முன்னாள் தலைவர் சமந்த் கோயல் ஆகியோருக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கேதரின் போல்க் பைலா, அஜித் தோவல் மற்றும் சமந்த் கோயல் ஆகியோருக்கு எதிராக சம்மன் அனுப்பி உள்ளார். கடந்த 13-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த சம்மனை இந்திய நீதிமன்றங்கள் மூலம் அனுப்ப அவர் உத்தரவிட்டார். அதன்படி தோவலுக்கான சம்மன் டில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திற்க்கும், கோயலுக்கு துவாரகா, திஸ்ஹசாரி மாவட்ட நீதிமன்றங்களுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில், தங்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சிவில் நடவடிக்கை தொடர்பான சம்மனை தோவல் மற்றும் கோயலுக்கு அனுப்புமாறு சம்பந்தப்பட்ட இந்திய நீதிமன்றங்களுக்கு அமெரிக்க நீதிபதி வேண்டுகோளும் விடுத்து இருந்தார். தி ஹேக் உடன்படிக்கையின் படியும், இந்திய சிவில் நடைமுறைச்சட்டத்தின் படியும், தோவல் மற்றும் கோயலுக்கு வெளிநாட்டு நீதிமன்றங்கள் சம்மன் அனுப்ப முடியும் என்பதையும் அமெரிக்க நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார். குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை முயற்சி தொடர்பாக அஜித் தோவல் மற்றும் சமந்த் கோயல் ஆகியோருக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருப்பது மத்திய அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

















