அநுர அரசின் முயற்சியாக கப்பலில் வந்திறங்கிய எரிபொருள் வாகனங்கள்.
ந.லோகதயாளன்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் (Delft Island) வரலாற்றில் முதன்முறையாக அமைக்கப்பட்டு வரும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கப்பல் ஊடாக எரிபொருட்களும் தீவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
நெடுந்தீவு மக்களின் நீண்டகால எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், எரிபொருள் விநியோகத்தில் நிலவும் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைத்து, மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பொருளாதார நடவடிக்கைகளையும் இலகுபடுத்தும் நோக்கில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை கடற்படையுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 5ஆம் திகதி இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து எரிபொருட்களும் தீவுக்கு வந்தடைந்துள்ளன.
இதுவரை நெடுந்தீவிலுள்ள மின்பிறப்பாக்கிகளுக்குத் தேவையான எரிபொருளைக் கொண்டுசெல்ல சுமார் 7 மணிநேரம் தேவைப்பட்டு வந்தது. புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக இந்த நடவடிக்கையை சுமார் 45 நிமிடங்களில் மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் போக்குவரத்துச் செலவுகள் காரணமாகத் தீவில் நிலவிவந்த எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதிக விலைக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைமுறையிலுள்ள தேசிய விலைகளுக்கு இணையாக நெடுந்தீவு மக்களும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணநாதன் இளங்குமரன், இத்திட்டம் நெடுந்தீவு மக்களின் நீண்டகால எரிபொருள் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாதுகாப்பற்ற முறையில் பீப்பாய்களில் எரிபொருளைக் கொண்டுசெல்ல வேண்டிய நிலைமையைக் குறைப்பதுடன், கடற்றொழில், வாழ்வாதார நடவடிக்கைகள், உள்ளூர் தொழில்கள் மற்றும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் இத்திட்டம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து தீவுகளுக்கான போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தும் நோக்கில், வேலணை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குறிகட்டுவான் இறங்குதுறைக்குச் செல்லும் பிரதான வீதியை அபிவிருத்தி செய்யும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
நீண்டகாலமாக எரிபொருள் தேவைக்காகப் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொண்ட நெடுந்தீவு மக்களுக்கு, புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் நடைமுறைக்கு வருவது அன்றாட வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.















