கவிஞர் க.குமரகுரு
1. ஊரெல்லாம் பதட்டமாக உயிர்பிழைத்தோர் கதிகலங்க
பாரெல்லாம் அகதியாக கால்பதித்த எம்மினத்தை
வாரியணைத் துவரவேற்க யாருமற்ற வேளைதனில்
காரிருள்வி லக்கியெம்மை கரம்கூப்பி வரவேற்றாய்.
2. வெள்ளிக்கி ழமைதோறும் விரிவான செய்திகளை
அள்ளிவரும் அழகுநிறை ஊடகமாய் மிளிருகின்ற
உள்ளத்தைக் கவர்ந்திழுக்கும் உற்றநல்ல நண்பனாக
எள்அளவும் தளர்ந்திடாமல் எப்போதும் உடனிருப்பாய்.
3. மக்களெலாம் விரும்புகின்ற மகத்தான உதயனிதழ்
பக்கங்கள் தருகின்ற பலதரப்பு விடையங்கள்
முத்தமிழை தாங்கிவரும் முழுதான செய்திகளும்
தித்திக்கும் மனநிறைவை கொடுத்துவிடும் வாசகர்க்கு.
4. உண்மையினை எடுத்தியம்பி உணர்வுகளின் தொகுப்பாக
மனிதநேயம் கொண்டதாக மக்களது எண்ணமாக
எண்ணியதன் உணர்வுகளை எப்போதும் தாங்கிவரும்
கண்களிலே நீர்பனிக்கும் கதிரோட்டம் கண்டவுடன்
5. கடந்துவந்த கால்நூற்றாண் டுகாலத்தில் கணக்கின்றி
நடந்திட்ட நிகழ்வுகளோ ஏராளம்! ஏராளம்!!
விடுதலையின் வெற்றியெம்மை நெருங்கிவந்த போதினிலே
சடுதியான சூழ்ச்சியினால் போராட்டம் மெளனித்தும்
6. எத்தனையோ துன்பங்கள் ஈழத்த மிழர்க்கட்கு
அத்தனையும் எதிரொலிக்க அரசியலில் அனாதையாக
தத்தளித்த போதெல்லாம் தயங்காமல் செய்தியாக்கி
இத்தரையில் வாழுகின்ற எம்முறவை இணைத்திட்டாய்
7. காட்டுமிராண் டிமனிதர்கள் கருணையற்ற செய்கைகளை
ஓட்டுமொத்த ஈழத்த மிழ்மக்கள் உணர்வுகளை
தாக்குகின்ற போதெல்லாம் தயங்காமல் உறுதியுடன்
தீட்டுகின்ற கதிரோட்டம் சென்றிடுமே செந்நெருப்பாய்.
8. எம்மவரின் வாழ்வியலை எடுத்தியம்பும் உதயனிதழ்
மண்ணைவிட்டு வந்தோரின் கல்விகலை இலக்கியம்
எண்ணற்ற பல்துறைசார் வளர்ச்சியினை எப்போதும்
விண்ணுயர வாழ்த்துரைத்து மென்மேலும் வளர்த்திடுமே
9. கடந்துவந்த பாதைகால் நூற்றாண்டைப் பின்நோக்கின்
தொடர்ந்துவந்த எண்ணிலாத இடையூறுகள் சவால்களையும்
திடமான உறுதியுடன் சகலதையும் பின்தள்ளி
தடம்பதித்து மிளிருகின்றார் தரணியெங்கும் தாரகையாய்!!!
10. சர்வதேச விருதுவிழா உதயனது தகைமைவிழா
மெய்யாக உழைத்திட்ட மேலான பெருமக்கள்
பல்துறைசார் கலைஞர்கள் எழுத்தாளர் சான்றோர்கள்
எல்லோர்க்கும் விருதளித்து ஏற்றமுறச் செய்திடுவார்.
11. தங்கப்ப தக்கங்கள் தரமான சிறுகதைக்கு
சொந்தபந்தம் பாராது திறமைக்கு முதற்பரிசு
சந்திக்கும் கலைஞர்கள் தமிழகமோ தாய்நாடோ
வந்தோரை அரவணைத்து வரவேற்றுப் பரிசளிப்பார்.
12. மனிதநேயம் நிறைந்திட்ட மகத்தான செய்தியாளர்
நினைவெல்லாம் நிலைத்திட்ட நட்பின்நா யகனென்று
மனம்திறந்து வாழ்த்தினார்க விப்பேரசு வைரமுத்து
எழுத்துவேந்தர் என்றுரைத்தார் கவிதையுற வுஏர்வாடி.
13. சொல்லேர்உ ழவனாக சுதந்திரமாய் சுழன்றிடுவார்
எல்லோரி டமும்இனிதாய் உறவாடும் நண்பரவர்
எல்லைபாரார் எழுதுவோரை எப்போதும் ஊக்குவிப்பார்
பொய்யில்லை இதுவெறுமனே வெற்றுப்பு கழ்ச்சியில்லை
14. கனடியஅ ரசியல்நீ ரோட்டத்தில் கால்பதித்த
அனைவரையும் இனமதநி றவேற்றுமையைப் புறம்தள்ளி
மனதார வரவேற்று வாழ்த்துகின்ற பண்பாளர்
அனைவரதும் வெற்றிக்காய் அயராது துணைபுரிவார்.
15. அங்கிங்கொ ணாதபடி எங்கும்நி றைந்திருப்பார்
சங்கடங்கள் வந்தபோதும் தளராத மனமுடையோன்
எங்களது மக்களது இதயத்தில் நிறைந்திருக்கும்
மங்காத புகழுடனே வாழ்ந்திடுவீர் நூறாண்டு.
16. உதயனிதழ் ஆசிரியர்ஆர் என்லோகேந் திரலிங்கம்
கதிரோட்டம் தாங்கிவந்த கனதியான செய்திகளை
இதுவரைஎ னும்தொகுப்பு ஆவணத்தை தந்தவரே
நதிபோன்று வாழ்ந்திடுவாய் நாயகனே வாழ்த்துகின்றேன்.






















