பார்த்தீபன்
ஏதோ ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு என்ற செய்தியுடன்தான் இலங்கையில் ஒவ்வொரு நாளும் விடிகிறது. கோழி இறைச்சி, சீனி, பருப்புக்கு கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுகிறது என்ற செய்தியோடு இப் பத்தியை எழுதும் நாள் புலர்ந்திருக்கிறது. கடைகளில் பொருட்களுக்காக முண்டியடிக்கும் மக்கள், எதை எத்தனை நாட்களுக்காய் சேகரிப்பது? அதற்கும் கையில் பணம் இல்லாத நிலை என்று பதைபதைக்க நிற்கின்ற காட்சிகளை எங்கள் நகரங்களில் கண்டபடி இருக்கிறோம். ஸ்ரீலங்கா அரசின் பொருளாதாரப் பின்னடைவுக்கு கொரோனா தொற்றுத்தான் காரணமா? இல்லை சரியான நிர்வாகம் இல்லை என்பதுதான் காரணமா என்று சிங்கள மக்களே தங்கள் ஆட்சியைப் பற்றி பேசுகிறார்கள்.
திடீர் திடீரென பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. கடந்த நாட்களில் ஒரு சமையல் எரிவாயுவை வாங்கி நகரமெல்லாம் திரிந்து களைத்து முப்பது கிலோமீற்றர் பயணம் செய்து கடைசி எரிவாயுக் கலனை வாங்க இயன்றது. வரும் காலம் எப்படி இருக்கப் போகிறது என்ற அச்சம்தான் பொதுசன மக்களை வாட்டுகிறது. ஆயிரத்து நானூறு அளவில் விற்ற எரிவாயு அதன் இரட்டை விலையாக்கப்பட்டுள்ளதுடன் அதற்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது இன்னும் விலையேற்றுவதற்கான உத்தியாகவே தென்படுகிறது. மக்களின் வாழ்க்கைமீது இப்படி பொருளாதார சுமையை ஏற்றுவது மிகக் கொடுமைானது.
ஸ்ரீலங்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற கோத்தபாய ராஜபக்ச, வெளிநாட்டு உர இறக்குமதியை நிறுத்தினார். இதற்கு அவர் சொன்ன காரணம், வெளிநாட்டு உரத்தினால் நாட்டின் மண் வளம் பாதிக்கப்படுகிறது என்பதே. ஆனால் கொரோன சூழலில் இப்படி உரத்தை தடுக்கும்போது உற்பதிகளும் ஏற்றுமதிகளும் பாதிக்கும் என்பதை அறியாமல் எடுத்த முடிவு என்றும் இதுவே இலங்கையின் முழுப் பொருளாதாரப் பின்னடைவுக்கும் காரணம் என்றும் ஸ்ரீலங்கா பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் பாதுகாப்புக்காக ஸ்ரீலங்காவின் நிதி ஒதுக்கீடு எப்படி இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். கலியாண வீட்டில் மாப்பிள்ளை, செத்த வீட்டில் பிணம் என்பதைப் போல ஸ்ரீலங்கா இராணுவம் எல்லாவற்றிலும் நுழைக்கப்படுகிறது. வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் பள்ளிக் கூடங்களிலிருந்து மருத்துவத்துறை வரை இராணுவத்தின் காலங்கள் ஆழப் புதைந்து நிற்கின்றன. பாதுகாப்புத்துறைக்காக அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு இராணுவ ரீதியான ஆட்சி நடாத்தப்படும் நாட்டில் இதுபோன்ற பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதை கண்டு வருகிறோம்.
வடகொரியாவில் ஏவுகணை தாக்குதல் நடத்தும் முயற்சிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இராணுவ ரீதியாக அந்த நாடு பெரும் பலத்துடன் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அந்த நாட்டின் அரச தலைவர் கடும் சர்வாதிகாரியாக இராணுவ – யுத்த ஆயுதங்களின் மத்தியில் நின்றுதான் பேசுகிறார். ஆனால் அந்த நாட்டில் ஒரு கிலோ வாழைப் பழம் மூவாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறதாம். இராணுவ ஆட்சியின், சர்வாதிகாரத்தின் விளைவு இப்படித்தான் இருக்கும். இலங்கை ஆசியாவின் வடகொரியா ஆகிறது. கோத்தபாய ஆசியாவின் கிம் ஜாங் உன் ஆகிக் கொண்டிருக்கிறார். இதை நாங்கள் சொல்லவில்லை சிங்களவர்களே இப்போது சொல்லத் துவங்கியுள்ளார்கள்.
நடப்பவை யாவும் நன்மைக்கே என்று நம்புகிற தமிழர்களின் நம்பிக்கை இன்னு மெய்யாகி வருகிறது. ஸ்ரீலங்கா அரச தலைவர் கோத்தபாய ராஜபக்ச இதே வழியில் பொருளாதார சுமைகளை மக்களுக்கு ஏற்றி ஆட்சி நடாத்தினால் லிபியாவில் கடாபியை கொன்றதைப் போல கோத்தபாய கொன்று வீசப்படுவார் என்று சிங்களப் பேரினவாத தலைவர்கள் உச்சரிக்கத் தொடங்கிவிட்டனர். கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவின் காவடிகளாக செயற்பட்ட உதய கம்மன்பில, விமல் வீரவன்ச முதலிய இனவாதிகள்தான் இப்போது கோத்தபாயவுக்கு எதிரான களத்தில் முன்னிலையில் நிற்கின்றனர்.
ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை யுத்தம் புரிந்த ராஜபக்சவினர் மருந்தையும் உணவையும் தடுத்து பசியில் இருந்த மக்கள்மீது கொடும்போர் தொடுத்து இனப்படுகொலை புரிந்தார்கள். அதற்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரான கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக இன்று பொருளாதார யுத்தம் நிகழ்கிறது. சிங்கள மக்களின் மத்தியில் போர் வீரன் வேடம் காட்டிய கோத்தபாய ராஜபக்ச இன்றைக்கு சிங்க மக்களால் தூக்கி வீசப்படுகிற ஆளாக மாறி வருகிறார். நந்திக்கடலில் புலிகளை நாய்களைப் போல இழுத்து வந்து சுட்டேன் என்று வீரம் பேசியவரை இன்று சிங்கள மக்களே கோத்தாவை நாயிலும் கடையராக நொந்து பேசி வருவதையும் பாரக்கிறோம்.
போரில் இறந்திருந்தால் வீரனாக கதை முடிந்திருக்கும். ஆனால் அந்தப் போரில் குறுக்கு வழியில் வென்று பின்னர் பெரும் கோழையாக வரலாற்றில் இடம்பிடிப்பதுதான் மிகவும் இழிவானது. அதுவே கோத்தபாய ராஜபக்சவுக்கு நடக்கிறது. நீங்கள் தமிழர்களின் தேசத்தை அங்கீகரித்திருந்தால், இன்றைக்கு தமிழீழம் என்ற நாடு அருகில் இருந்திருந்தால் இந்தப் பொருளாதார நெருக்கடியின் போது பிரபாகரன் உங்களுக்கு கை கொடுத்திருப்பார்.
2009இற்கு முந்தைய காலத்தில் சிங்கள அரசால் மண்ணைக்கும் தடை, மருந்தும் தடை, சோத்துக்கும் தடை, சோப்புக்கும் தடை என்ற காலத்தில் மக்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பொருட்களை இறக்குமதி செய்தும் உற்பத்தி செய்யும் தமீழீழ மக்களின் வாழ்க்கையில் குறையில்லாமல், அவர்கள்மீது பொருளாதார நெருக்கடியை சுமத்தாமல் ஒரு ஆட்சியைப் பிரபாகரன் நடாத்தியிருந்தார். கடும் போரிலும் மக்களை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கும் தீர்க்கதரிசனமான கொள்கைகளை உணர்ந்து நடைமுறைப்படுத்தினார். நிதித்துறை, பொருண்மியம், தமிழீழ வைப்பகம், சுதேச தொழிற்சாலைகள், பொதுநிர்வாகம் என பொருளாதார நெருக்கடியை தவிர்க்கும் வித்தில் தலைவர் பிரபாகரன் உருவாக்கிய கட்டமைப்பு தமிழர் தேசத்தை தலை நிமிரச் செய்தது. பிச்சைக்காரர்கள் இல்லாத தேசமாக அன்று தமிழர் தேசம் இருந்தது. அந்தளவுக்கு வேலை வாய்ப்புக்களும் நிறைந்திருந்தன.
இத்தனை போரின் பிறகும் தாயகத்தில் தமிழர்கள் பொருளாதார ரீதியாக மீண்டெழுந்து வருகிறார்கள். அது பெரும் சாதனை. அதைப் போல போரால் புலம்பெயர்ந்து உலகம் எங்கும் சிதைந்த நிலையில் இருக்கும் ஈழத் தமிழர்கள் பொருளாதார ரீதியாக பெரும் பலம் கொண்டு வருகிறார்கள். இன்றைக்கு உலகில் பெரும் முதலீடுகளை செய்கின்ற தொழிலதிபர்களாக ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள். இப்படியான நிலையில் ஸ்ரீலங்கா தமிழர் தேசத்தை அங்கீகரித்திருந்தால் இன்றைக்கு சிங்கள தேசத்திற்கு தமிழர்கள் கை கொடுத்திருப்பார்கள்.
“எங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டு தமிழீழம் உருவாக்கப்படுமானால் தங்கள் தேசப்பற்றும், அரசியல் சாணக்கியமும் எங்கள் ஆற்றலுடன் ஒன்றுக்கொன்று துணையாக இளைய இலங்கையில் சிநேகபூர்வமான இரு வல்லரசுகள் தோன்றிவிடும்” என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இவ்வாறு கூறியதும் இதற்காகவே. ஈழத் தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமல் இத் தீவின் பலத்தை ஒருபோதும் நிலைநிறுத்த முடியாது. அது பாதுகாப்பு ரீதியாகவும் இருக்கலாம். பொருளாதார ரீதியாகவும் இருக்கலாம்.






















