சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
திருட்டு மாங்காய்க்குச் சுவை கூடுதல் என்று தமிழ்நாட்டில் ஒரு செலவடை உண்டு. மேலும் அதே போன்று அடித்துப் பிடுங்கி அதை தான் அனுபவிப்பதில் சிலர் அலாதி மகிழ்ச்சி கொள்வர். இதை இரண்டையும் நினைக்கும் போது இலங்கையில் போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல், அவை மேலும் மேலும் அபகரிக்கப்படுவது தமிழ் மக்களை மேலும் மேலும் துன்பத்திற்குள் தள்ளுகிறது.
போர்க் காலத்தில் அதைக் காரணம் காட்டி பாதுகாப்புப் படையினரின் முகாம்களை அமைக்க தமிழ் மக்களின் நிலங்கள் வலிந்து கையகப்படுத்தப்பட்டு இன்றுவரை அவை முழுமையாக உரியவர்களிடம் திருப்பியளிக்கப்படுவதில்லை.
அண்மைக் காலங்களில் `புனித பூமி`, `பௌத்த பாரம்பரியம்`, `மகாவம்சத் தொடர்பு`என்று பல காரணங்களை மேற்கோள் காட்டி நிலங்கள் பறிக்கப்படுவது தொடர்கிறது.
இந்த போக்கை உற்று நோக்கினால், இது வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை இலக்கு வைத்தே இந்த அபகரிப்பு நடைபெறுகிறது. இது தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்து கிடைக்கப்பெற்றாலும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுவதில்லை என்பது நடைமுறையாகியுள்ளது. இப்போது வடக்கில் “சிங்கள பௌத்த பாரம்பரியத்தை” தேடி அரசாங்கம் காணிகளை அபகரிப்பதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளது. இவ்வளவு தசாப்தங்களாக இல்லாமல் திடீரென்று இப்போது ஏன் எங்கிருந்து புதிதாகச் சிங்கள பௌத்த பாரம்பரிய இடங்கள் முளைப்பதிலுள்ள நோக்கம் மிகத் தெளிவாகவே உள்ளது. அதாவது முடிந்தவரை மதத்தின் பெயரில் நிலங்களைக் கையகப்படுத்தி அங்கு விகாரனைகளை எழுப்பி, சிங்களக் குடியிருப்புகளை ஏற்படுத்தி, குடிப்பரம்பலை மாற்றியமைப்பதே அரசின் எண்ணமாத் தெரிகிறது என்று தமிழர் தரப்பினர் அச்சம் கொண்டுள்ளனர்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக மக்களின் வெறுப்புக்கு உள்ளான ராஜபக்ச அரசாங்கம் சிங்கள பௌத்த பாரம்பரியத்தைத் தேடி வடக்கில் இனவாதத்தைத் தூண்ட முயல்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் குழுவினருடன் அண்மையில் யாழ்ப்பாணம் காரைநகர் வேரப்பிட்டி பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
தென்னிலங்கையில் அரசிற்கு எதிரான ஒரு மனப்போக்கு உருவாகி வருவதாகக் கூறப்படும் நிலையில், பௌத்தத்தின் பெயரைப் பயன்படுத்தி தமக்கு எதிராக எழுந்துள்ள சிங்கள எதிர்ப்பை அடக்க அரசு முயல்கிறது என்று மாகாண அரசியல்வாதிகள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
”கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்து மக்கள் வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள மக்களை தவறாக வழிநடத்தி தமிழர் பிரதேசங்களில் சிங்கள பௌத்த தொன்மை வாய்ந்த காணிகள் காணப்படுவதாக தெரிவித்து அதனை அபகரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.” என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் குற்றஞ்சாட்டுகிறார்.
வேரப்பிட்டி கிராமத்தில் உள்ள கணேசா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள பகுதியில் பல இடிபாடுகள் காணப்படுப்படுவதாகவும், பாடசாலைக் கட்டிடத்தின் வலதுபுறம் தரையில் சுமார் 15 மீட்டர் விட்டத்தில் 2 மீட்டர் ஆழத்திற்கு தோண்டப்பட்ட இடத்தில் ஆறு அஸ்திவாரங்கள் சிதறிக் கிடப்பதாகவும், கட்டிடத்தின் கிழக்கே மைதானம் முழுவதும் பழைய ஓடுகள்
மற்றும் ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளிட்ட பல பொருட்கள் காணப்படுவதாகவும் தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
குறித்த இடத்தின் அகழ்வாராய்ச்சியை துரிதப்படுத்தி அதன் வரலாற்று முக்கியத்துவத்தை கண்டறியும் வகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு தொல்பொருள் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் விக்கிரமநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் தொல்லியல் துறை, அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் செயற்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைச்சர் விக்கிரமநாயக்கவின், காணிகளை கைப்பற்றும் செயற்பாடுகளுக்கு, ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆதரவளிப்பதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“தமிழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் இடங்களைக் கைப்பற்றுவதில் ஒன்றுதான் தொல்லியல் துறையும். அமைச்சர் மற்ற அனைத்து பிரச்சினைகளையும் புறந்தள்ளிவிட்டு சிங்கள பௌத்த கலைப்பொருட்களைத் தேடி வடக்கிற்கு வருகிறார்.
இவற்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் ஆதரவளிப்பது வெட்கக்கேடானது. அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கூட சிங்கள பௌத்த ஆதிக்கத்தைப் பரப்புவதற்கு ஆதரவளிக்கவில்லை. அங்கஜன் இந்த முட்டாள்தனத்தை நிறுத்த வேண்டும்.” என அவர் கேட்டுக்கொண்டார்.
முல்லைத்தீவு குருந்தூர்மலை சிவன் ஆலயம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்துக்களால் வழிபடப்பட்டு வரும் நிலையில், புத்தர் சிலையை வைத்து அதனை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின்போது, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கும் தமிழ் மக்கள் எதிர்ப்பும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் வடக்கே ஏதோவொரு காரணத்தை மேற்கோள் காட்டி தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. அது மட்டுமின்றி இந்து ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களும் மறைமுகமாக மதகுருமார்களை அச்சுறுத்தி, பூசைகளைத் தடுத்து, அந்தக் காணிகளையும் சிங்களப் பேரினவாதிகள் கையகப்படுத்த இராணுவம் மற்றும் பொலிசார் மூலம் அழுத்தங்களையும் பலப்பிரயோகத்தையும் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் அரசிற்கு எதிராக வைக்கப்படுகின்றன.
ஏற்கெனவே வலிந்து அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படாமல் அதன் உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் அதை விடுவித்து அவர்களிடம் கையளிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்கிற விமர்சனங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதுவரை தமது முயற்சியால் மட்டுமே கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என்று எந்த தமிழ்க் கட்சியும் கூறிக்கொள்ள முடியாத நிலை உள்ளது.
இன்னும் சில மாதங்களில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தொடர்ந்து காணிகள் அபகரிப்பு தேர்தலில் ஒரு முக்கியப் பிரச்சனையாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமது நிலங்களின் மீதான உரிமையை ஒருநாளும் விட்டுக்கொடுக்க முடியாது என்று தமிழ் மக்கள் போராடிவரும் நிலையில், இந்தப் பிரச்சனையை சர்வதே சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்பதை அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.






















