அச்சக உரிமையாளர் ஒருவர் சொன்னார் புது வருஷப் பிறப்புக்கு கலண்டர் அடிப்பதற்கு முடியாமல் இருப்பதாக. ஏனென்றால் கலண்டர் மாத இதழ்களை ஒன்றாகச் சேர்த்துப் இணைப்பதற்கு ஒரு உலோக பட்டி பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. இந்த உலோக பட்டி வெளிநாட்டில் இருந்து வருகிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியால் அதன் விலை அதிகரித்து செல்வதோடு அது அரிதான பொருளாக மாறிவிட்டது. எனவே காலண்டர்களை அடிக்க முடியவில்லை என்று அவர் சொன்னார்.
கலண்டருக்கும் தட்டுப்பாடான ஒரு புது வருசம் பிறந்திருக்கிறது. கலண்டருக்கு மட்டுமல்ல பால் தேநீர், சமையல் எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களையும் சந்தையில் பெறமுடியவில்லை. கர்ப்பிணிகளுக்கு திரிபோஷா இல்லை. ஏனென்றால் திரிபோஷா மாவில் சேர்ப்பதற்கு சோளம் இல்லை. தேநீர்க் கடைக்காரர்களின் சங்கம் இனி கடைகளில் பால் தேநீர் விற்பதில்லை என்று அறிவித்திருக்கிறது. கடைகளில் மட்டுமில்லை வீடுகளிலும் பிளேன் ரீ தான்.நாடு முழுவதும் பெருமளவு சாப்பாட்டுக் கடைகள் மூடப்பட்டுள்ளன காரணம் சமையல் எரிவாயு இல்லை. தெருவோர சிறிய சாப்பாட்டுக் கடைகளில் மட்டுமல்லை பெரிய நட்சத்திர அந்தஸ்துடைய உல்லாச விடுதிகளிலும் சில சமயம் பால்ரீ தட்டுப்பாடாக இருக்கிறது. சிறிய அங்கர் பால்மா பெட்டி ஒன்றை வாங்குவதாக இருந்தால் அதோடு சேர்த்து 4 அல்லது 6 அங்கர் யோக்கட்களையும் வாங்க வேண்டியிருக்கிறது. அங்கர் பால்மா கொம்பனிதான் அவ்வாறு விற்குமாறு தமக்கு கூறியதாக கடை முதலாளிகள் கூறுகிறார்கள். இது ஒரு மோசமான சுரண்டல். இதை கடை முதலாளிகள் செய்கிறார்களா? அல்லது அங்கர் கொம்பனி அவ்வாறு செய்யச் சொன்னதா? தெரியவில்லை. ஆனால் பால் மாவுக்காக எவ்வளவு விலையையும் கொடுக்க ஒரு பகுதி நடுத்தரவர்க்கம் தயாராக காணப்படுகிறது. அதை எல்லாருமாகச் சேர்ந்து சுரண்டுகிறார்கள்.
கொழும்பின் மிகப்பெரிய சுப்பர் மார்க்கெட்களில் ஒன்றாகிய ஆர்பிகோ சுப்பர் மார்க்கெட்டில் விறகுக் கட்டுக்கள் விற்கப்படுகின்றன. ஒரு பொதி 150 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை போகிறது. சுப்பர் மார்க்கெட்களில் விறகை விற்கும் ஒரு காலம். இப்படித்தான் இந்தமுறை புதிய ஆண்டு பிறந்தது. கடந்த திங்கட்கிழமை புத்தாண்டு பிறந்து இரண்டு நாட்களின் பின் அரசாங்கம் முட்டை விலை இரண்டு ரூபாயாலும் இறைச்சிக் கோழியின் விலை 50 ரூபாயாலும் குறைக்கப்படுவதாக அறிவித்தது. ஆனால் கடைகளில் ஏறிய விலை ஏறியதுதான். மூத்த வர்த்தகர் ஒருவர் சொன்னார் இலங்கை போன்ற நாடுகளில் ஏறிய விலை இறங்குவது மிக அரிது என்று. இலங்கை இப்பொழுது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி அசாதாரணமானது. எனவே பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வந்ததும் இப்பொழுது ஏறியிருக்கும் விலைகள்
இறங்கத்தானே வேண்டும் ?என்று அவருக்குச் சொன்னேன். அவர் சொன்னார் என்னுடைய இதுவரை கால அனுபவத்தின்படி ஏறிய விலைகள் இறங்குவது குறைவு என்று.
அவர் கூறுவது சரியாக இருந்தால் வரப்போகும் மாதங்களில் நிலைமை இன்னும் மோசமாக மாறலாம். “2022ஆம் ஆண்டும் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கஷ்டப்படவேண்டிய வருடமாகவே அமையும் நிலையே இருக்கின்றது” என்று கூறியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார.
தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது.2021 நவம்பரில் 9.9% ஆக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் 2021 டிசம்பரில் 12.1% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஆனால் நாட்டின் ஜனாதிபதி யுத்தகளத்தில் தான் செய்த சாதனைகளை இப்பொழுதும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறார். நாட்டின் முதற்பிரஜையாக தன்னைத் தெரிவு செய்வதற்காக பல தியாகங்களை செய்த சிங்களவர்களின் பாதுகாப்பும் அவர்களது பாரம்பரியத்தை பாதுகாப்பதும் தனது தலையாய பொறுப்பு எனத் தான் உறுதியாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். கோட்டை கல்யாணி சாம ஸ்ரீ தர்ம மகா சங்க சபையால் அவருக்கு “ஸ்ரீ லங்காதீஸ்வர பத்மவிபூஷன” விருது கடந்த இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டபொழுது ஆற்றிய உரையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றிதான் அவருடைய ஒரே அரசியல் முதலீடு. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியின் பின்னரும் அவர் தன்னுடைய சாதனை என்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் யுத்தத்தை வெற்றி கொண்டதையே சிங்கள மக்களுக்கு திரும்பத் திரும்ப நினைவூட்டுகிறார். அதேசமயம் வைரஸ் தொற்றில் இருந்து நாட்டை பாதுகாத்ததையும் அவர் தனது சாதனையாக கூறுகிறார். அதற்கும் அப்பால் அவருடைய கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சி குறித்து அவர் பெருமையோடு சுட்டிக்காட்ட வேறு எதுவும் இல்லை.கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் ஏற்பட்ட எல்லாச் சறுக்கல்களுக்கு பின்னரும் அவர் தன்னை சிங்கள பௌத்தர்களின் தலைவராகவே காட்டுகிறார்.
ஆனால் அவருக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வழங்கிய சிங்கள மக்கள் இப்பொழுது ஆத்திரத்தோடும் விரக்தியோடும் காணப்படுகிறார்கள். அவர்கள் அடுத்த தேர்தலில் அவருக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. மூன்றிலிரண்டு பெரும்பான்மை எப்பொழுதோ காலாவதியாகிவிட்டது என்றும் எதுக்கு கட்சிகள் நம்புகின்றன. அண்மை வாரங்களில் தென்னிலங்கையில் உள்ள பிரதேச சபைகளில் நிகழும் பட்ஜெட் வாக்கெடுப்புக்களின் முடிவுகள் அதைத்தான் நிரூபிக்கின்றன. கடந்த மாதம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள நாட்டின் மிகப்பெரிய பலநோக்கு கூட்டுறவுச் சபைக்கான தேர்தல் நடந்தது. அத்தேர்தல் முடிவுகளும் அதைத்தான் உணர்த்துகின்றன. அதேபோல கடந்த மாதம் நிகழ்ந்த தாதியர் சங்கத்துக்கான தேர்தல் முடிவுகளும் அதைத்தான் உணர்த்துகின்றன.
அமைச்சுக்களின் செயலர்களும் பிரதான அதிகாரிகளும் பதவி விலகுவதும், பதவி மாற்றப்படுவதும் அதைத்தான் உணர்த்துகின்றன. இந்த வாரம் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பதவி நீக்கப்பட்டார். தெல்கந்த சந்தையில் வைத்து அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சித்த காரணத்தால் அவர் பதவியில் இருந்து தூக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சுசில் பிரேம்ஜயந்த தெல்கந்த சந்தைக்குப் போயிருக்கிறார். அங்கே பச்சை மிளகாய் ஒரு கிலோ 1200 ரூபாய்க்கு விற்கப்படுவதை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்.“விவசாயத்துறை அமைச்சு தோல்வி கண்டுவிட்டது. விவசாயத்துறை தொடர்பில் அரசின் கொள்கை முழுத் தோல்வி கண்டு விட்டது” என்று அவர் கூறியுள்ளார். அதனால்தான் பதவியில் இருந்து தூக்கப்பட்டிருக்கிறார். அவர் மூன்று ஜனாதிபதிகளின் கீழ் சுமார்18 ஆண்டுகளாக சிரேஷ்ட அமைச்சுப் பதவிகளை வகித்தவர். “அரசுத் தலைமையின் இந்த அணுகுமுறையானது, 2022இல் நடக்கப்போகிற விபரீதங்களை இந்த அரசு சரியாகக் கையாளப் போவதில்லை என்ற சமிக்ஞையைத்தான் சுட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன.
ஆளும் தரப்புக்குள்ளேயே அமைச்சர்களும் உயர்மட்டத் தலைவர்களும் பங்காளி கட்சிகளும் கடுமையான அதிருப்தியோடு இருக்கிறார்கள். சுசில் பிரேம் ஜயந்த ஒரு அரை அமைச்சர்தான். ஆனால் முழு அமைச்சர்களாக உள்ள வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றோர் அரசாங்கத்துக்கு உள்ளே இருந்தபடியே அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அரசாங்கம் தனக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க
வேண்டியிருக்கிறது. ஆனால் அதற்காக எதிர்க்கட்சிகள் நம்புவது போல ராஜபக்சக்களை இலகுவாக தோற்கடிக்க முடியாது.
முதலாவது காரணம் எதிர்க்கட்சிகள் ஒரு பலமான தலைமையின் கீழ் ஒன்று திரண்ட சக்தியாக இன்றுவரை மேலெழவில்லை. இரண்டாவது காரணம் ராஜபக்சக்கள் இனிமேலும் யுத்த வெற்றி
வாதத்திற்கு தலைமை தாங்க முடியும்.
யுத்த வெற்றி வாதம் எனப்படுவது 2009க்கு பின்னரான சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் புதிய வடிவம். அதை அவர்கள் ஈஸ்டர் குண்டுவெடிப்பின் மூலம் அடுத்தடுத்த கட்டத்துக்கு அப்டேட் செய்து கொண்டார்கள். எனவே தென்னிலங்கை அரசியலில் தமிழின எதிர்ப்பும் முஸ்லிம் எதிர்ப்பும் தொடர்ந்தும் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளவரை ராஜபக்சக்கள் யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கலாம். யுத்த வெற்றி வாதத்தை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகளுக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்னவெனில் மூவினத் தன்மை பொருந்திய ஒரு கூட்டுக்குப் போவது. மூன்று இனத்தவர்களின் வாக்குகளையும் திரட்டும் போதுதான் யுத்த வெற்றி வாதத்தை அதாவது 2009க்கு பின்னரான சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை தோற்கடிக்கலாம் என்பது 2015ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டது. அவ்வாறு மூன்று இனத்தவர்களின் வாக்குகளையும் கவர்வதற்கு ஒரு ஜனவசியம் மிக்க தலைவர் வேண்டும். ஒப்பீட்டளவில் ரணில் விக்கிரமசிங்க அப்பொழுது அப்படியொரு தலைவராக தோன்றினார். இப்பொழுது அப்படி ஒரு தலைவரை கண்டுபிடிக்க எதிர்க்கட்சிகளால் முடியவில்லை. எதிர்க்கட்சிகள் அப்படி ஒரு தலைவரைக் கட்டியெழுப்பாதவரை ராஜபக்சக்கள் நிம்மதியாக இருப்பார்கள். ஏழைச் சிங்கள மக்கள் யுத்த வெற்றியைச் சாப்பிட முடியாது என்று உணரும் ஒருநாள் வரும்வரையிலும் அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.