இலங்கை முல்லைத்தீவில் “கருணையுடன் கரம் கொடுப்போம்” என்ற தாரகா மந்திரத்துடன் கனகா – செல்லா என்ற அறக்கட்டளை ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
இதை ஆரம்பித்தவர் ஜேர்மனியில் வாழ்ந்து வருகின்ற, மாவை சிவம் என்று எல்லோராலும் அறியப்பட்ட திரு.கந்தையா சிவகுமார் அவர்கள். ஏதிலியாகி நிற்கும் சிறார்களின் வாழ்வை வளம் கொழிக்க வைக்கவேண்டும் தன்னாலான உதவிகளை அந்த இளந்தலைமுறையினருக்கு செய்ய வேண்டும் என்ற தணியாத தாகமாக நீண்ட காலமாக அவர் மனதில் இருந்த அந்த தொண்டுணர்வு இன்று செயல்வடிவம் பெற்றிருப்பதை பாராட்டி மகிழ்கிறோம்.
இந்த அறக்கட்டளையை இப்போதைக்கு முல்லைத்தீவில் ஆரம்பித்தாலும் காலப் போக்கில் இலங்கை முழுவதும் இவ்வறக்கட்டளைக் கிளைகளை அமைத்து ஆதரவற்ற சிறார்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே தனது எண்ணம் என என்னுடன் பேசும் போது திரு.மாவை சிவம் அவர்கள் கூறியிருந்தார்.
கருணை மிகுந்த மனதிலேதான் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். மனிதர்களே தெய்வங்கள், மனிதர்களுக்கு தொண்டு செய்தால் அது தெய்வங்களுக்கு தொண்டு செய்வதற்கு சமன் என ஆன்மீகம் சொல்லுகின்றது. கனகா – செல்லா என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து வைத்த திரு.மாவை சிவம் அவர்கள், இளைஞனாக ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து வந்தவர்.
இளைஞனாக இருந்த போதே தான் வசித்துவந்து கற்றிங்கன் நகரில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தை அமைப்பதில் உறுதுணையாக இருந்தது மட்டுமல்ல காலப் போக்கில் பல பொறுப்பு வாயந்த தொண்டுப் பதவிகளில் இருந்து சிறப்பாக செயலாற்றிவர்.
தான் எடுத்துக் கொண்ட பணியில் அர்ப்பணிப்பு விசுவாசம் நேர்மை போன்றவற்றால் பலரும் பாராட்டும் விதமாகவும் வாழ்த்தும் விதமாகவும் தொண்டாற்றியவர்.

இவர் தமிழாசிரியராக, வில்லுப்பாட்டுக் கலைஞராக, நாடக கலைஞராக தயாரிப்பாளராக பரிணமித்ததுடன் என்னப்பெற்றால் நகரில் கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் பெயரில் இயங்கி வருகின்ற புங்குடுதீவு மக்களின் ஒன்றியம் இவரின் பக்குவப்பட்ட ஆற்றல் கண்டு இவரின் தொண்டு வேண்டி தம்மோடு இணைத்துக் கொண்டது.பல இளந்தலைமுறையினரை வில்லுப்பாட்டுக் கலைஞர்களாக உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவரின் ஆன்மீக, தமிழ்மொழி, கலைத்துறை தொண்டு கண்டு இவருக்கு, சிவநெறிச்செல்வர், தமிழ்வாரிதி, இசைப்பாவலர் என்ற கௌரவ விருதுகைளை சமூகம் அளித்திருக்கின்றது.
அவரைப் பற்றிய சுருக்கமான விபரத்தையும் இவ்வறக்கட்டளை விபரத்துடன் இணைத்துப் பதிவதற்கான காரணம், நிச்சயமாக இவரின் பன்முகச் சிந்தனை தாயகச் சிறார்களையும் அரவணைத்து அவர்களையும் கலை, இலக்கிய, ஆன்மீகம் போன்ற துறைகளிலும் கல்வியிலும் மேம்படச் செய்வார் என்பது ஒரு துளியளவேணும் சந்தேகம் இல்லை என்பதற்காகவே.
தனது தாயாரின் பெயரில் வரும் கனகா என்ற முதல் எழுத்துக்களான கனகா என்ற பெயரையும் தனது மனைவியின் தாயாரின் பெயரில் வரும் செல்லா என்ற பெயரையும் கொண்டு இவ்வறக்கட்டளையை அவர் அமைத்திருப்பது சிறப்பானதாகும்.
தகவல் : ஏலையா க.முருகதாசன்






















