ஸ்காபரோ – ஒன்றாரியோ என். டி.பி யின் வேட்பாளராகிய நீதன், 2022ம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலில் ஸ்காபரோ மத்தி தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது தேர்தல் பிரசாரத்தை கடந்த புதன் கிழமை மாலை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துள்ளார்.
நீண்டகால சமூகத் தலைவரம், கல்வியாளரும் மற்றும் சமூக ஆர்வலருமான நீதன் அவர்களுடன், ஒன்றாரியோ என்.டி.பியின் தலைவர் ஆண்ட்ரியா ஹார்வத், பிராம்ப்டன் கிழக்கு என்.டி.பி மாகாணசபை உறுப்பினர் குரத்தன் சிங், ஸ்காபரோ தென்மேற்கு என்.டி.பி மாகாணசபை உறுப்பினர் டோலி பேகம் ஆகியோரும், மற்றும் சிறப்பு விருந்தினராக தேசிய என்.டி.பி தலைவர் ஜக்மீத் சிங் அவர்களும் இந்த பிரசார விழாவில் கலந்து கொண்டார்கள்.
மேலும், இவர்களுடன் சேர்ந்து தமிழ் இளைஞர் விவகார ஆர்வலரும் சமூகத் தலைவருமான வர்ஷா புனிதச்செல்வன், மற்றும் சமூக ஒழுங்கமைப்பாளரும் அறிஞர் விவகார ஆர்வலருமான ஜெனெல் பிரேடி ஆகியோரும் நீதன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய மேன்மையான பங்களிப்பின் சிறப்பைப் பற்றி எடுத்துரைத்த ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டனர். ஏறத்தாழ 200 பேர் இந்த மெய்நிகர் பிரச்சார ஆரம்ப விழாவிற் கலந்து கொண்டனர்.
மேற்படி பிரச்சாரக் கூட்டத்தில் ஒன்ராறியோ என்.டி.பி தலைவர் ஆண்ட்ரியா ஹார்வத் பின்வருமாறு கூறினார்:
” டக் ஃபோர்ட் பல வருடங்களாக சுகாதாரப் பாதுகாப்பு, நீண்ட கால பராமரிப்பு மற்றும் கல்வி ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகளைப் பெருமளவில் குறைத்த நிலையில், நீதனின் நீண்டகால சமூக ஈடுபாடு, மற்றும் அர்ப்பணிப்பு, வாதத் திறமை ஆகியவை தான் ஸ்காபரோ மத்தியில் உள்ள மக்களின் முதன்மையான தேவையாகும். ஃபோர்டு உட்பட்ட கன்சர்வேடிவ் கட்சியினர் பள்ளிகளில் குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறியது மட்டுமன்றி கோவிட்-19 காலத்தில் சிறு வணிகங்களைச் செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளி விட்டார்கள். சுகயீன நாட்களில் தொழிலாளர்கள் ஊதியம் பெறுவதற்கும், மற்றும் வாழ்வு ஊதியம், வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கான குழந்தை பராமரிப்புச் செலவு ஆகியவற்றைப் பெறுவதற்கும் ஆதரவு கொடுக்க மறுத்து விட்டார்கள். தனது கட்டமைப்புத் தொழிலில் இருக்கும் நண்பர்களுக்காகத் தான் ஃபோர்ட் இங்கு இருக்கின்றாரே தவிர, பொது மக்களுக்காக அல்ல. உழைக்கும் மக்கள், உள்ளூர் வணிகங்கள் மற்றும் ஸ்காபரோ மத்தியில் வாழும் மக்களின் இன நீதி, ஆகியவற்றிற்காகப் போராட எங்கள் குழுவில் நீதனைப் போன்ற ஒருவர் இன்றியமையாதராவார். இவரைப் போன்ற ஒரு அதி சிறந்த தமிழ் வேட்பாளருக்கான பிரசாரத்தை, தமிழ் பாரம்பரியத்தைக் கொண்டாடும் இம்மாதத்தில் ஆரம்பித்து வைப்பதில் நாம் மிகவும் பெருமைப் படுகின்றோம்.” எ ன்றார்
ஸ்காபரோ மத்தியின் என், டி, பி வேட்பாளர் நீதன் சாண் அவர்கள் பின்வருமாறு கூறினார்:
“நான் ஸ்கார்பரோ வாழ் மக்களை நேசிக்கிறேன். எங்கள் குடியிருப்பாளர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி முதல் சிறந்த பாதுகாப்பு, தொழிலாளார் பாதுகாப்பு வரை அவர்கள் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லக் கூடிய சமூக சேவைகளைப் பெறுவதற்காகப் போராட நான் உறுதிபூண்டுள்ளேன். மக்களிடையே வேறுபாடுகள் இல்லாத, சமத்துவம் பேணும் ஒரு மாகாணம், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள், மற்றும் முன்னணி ஊழியர்களின் கடின உழைப்பு,- அதற்காக அவர்கள் செய்யும் தியாகங்களை அங்கீகரிக்கூடிய நியாயமான, கண்ணியமான வாழ்க்கை ஊதியம் ஆகியவற்றைப் பெறுவதற்கு அழுத்தம் கொடுப்பதில் ஆண்ட்ரியா ஹார்வத்துடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், மாகாணசபை உறுப்பினர் என்ற முறையில், ஸ்காபரோ மத்தியில் வசிக்கும் குடும்பங்களுக்கிடையில் அதிக சமத்துவம், மற்றும் மிகவும் வசதியான வாழ்க்கைக்காக போராடுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்.” என்றார்
இன உறவுகளுக்கான நகரக் கூட்டணி எனும் தேசிய அமைப்பின் தற்போதைய நிறைவேற்று அதிகாரம் உடைய நிர்வாக இயக்குனராக நீதன் செயற்படுகின்றார்.
• நீதன் டொராண்டோ நகரசபையின் முன்னாள் கவுன்சிலரும், மற்றும் ஸ்கார்பரோ-ரூஜ் ரிவர் மற்றும் யோர்க் பிராந்திய மாவட்ட பள்ளி வாரியத்திற்கான டொராண்டோ மாவட்ட பள்ளி வாரிய அறங்காவலரும் ஆவார்.
• முன்னாள் இளைஞர் முன்னேற்ற அலுவலர் என்னும் முறையில், நீதன் சமூக சேவைத் துறையில் பல விடயங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். போதைப்பொருள் பாவனை தொடர்பான நடவடிக்கைகளில் பெற்றோருடன் இணைந்து செயற்படுதல், மல்வெர்ன் சமூகக் கூட்டணி, மற்றும் ஸ்காபரோ இளைஞர் பணிக்குழு ஆகியன இவற்றுட் சிலவாகும்.
• தீவிரமான இன சமத்துவப் பாதுகாவலரான நீதன், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் நீதி தொடர்பான விடயங்களில் நல்லதோர் கொள்கை மாற்றம் ஏற்படுவதற்காகப் பாடுபட்டு வருகிறார்.






















