ஜ.நா அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேச கவனமொன்றை ஈர்த்துக் கொள்ளும் வகையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலை நோக்கி பயணத்தை மேற்கொண்டனர்.
`குரலற்றவர்களின் குரல்` அமைப்பு யாழ் ஊடக அமையத்தில் இன்று(10) மதியம் 2 மணியளவில் நடாத்திய ஊடக சந்திப்புக்குப் பின்னர் இந்த பயணத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட விசேடப் பேருந்தில் பயணத்தை மேற்கொண்டனர்.
தேசிய சிறைக் கைதிகள் தினம் செப்டம்பர் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் இந்த பயணம் ஆரம்பிக்கப்பட்டதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் சிலர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், யாழ் மாநகர சபை யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் யாழ் ஊடக அமையத்திற்கு வருகைதந்து பயணத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்கு, உறவினர்கள் சென்று வருவதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை கனேடிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்து வழங்கியது.