இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபாலோ ஆனுக்கு பின்னரும் நியூசிலாந்து அணி எழுச்சி பெற்று இங்கிலாந்தை வீழ்த்தி பாராட்டுக்களை குவித்து வருகிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்ஸில் 435 ரன்களை இங்கிலாந்து எடுத்திருந்த நிலையில், நியூசிலாந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் ஆனது. 2 ஆவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 483 ரன்கள் குவித்ததை தொடர்ந்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என, இங்கிலாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து மேலும் 210 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தை இன்று தொடர்ந்தது. இருப்பினும் சீரான இடைவெளியில் நியூசிலாந்து பவுலர்கள் விக்கெட்டுகளை எடுத்துக் கொண்டே இருந்தனர். ஜோ ரூட் மட்டும் அதிரடியாக விளையாடி, நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே இருந்தார். 113 பந்துகளில் அவர் 95 ரன்கள் எடுத்து மிரட்டினார். அவருக்கு உறுதுணையாக 116 பந்துகளில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மிகவும் நிதானமாக விளையாடி 33 ரன்கள் எடுத்தார். இருப்பினும் 74.2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 256 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பதிவில், ‘டெஸ்ட் போட்டிதான் பெஸ்ட் போட்டி. என்னவொரு அற்புதமான ஆட்டம். சமீபத்தில் நடந்த மிகச்சிறந்த போட்டியாக இதனை பார்க்கிறேன். வெல்டன் நியூசிலாந்து. ஃபாலோ ஆன் ஆன பிறகும் சிறப்பாக கம் பேக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளீர்கள்’ என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சேன், ‘டெஸ்டை விட சிறப்பான கிரிக்கெட் போட்டி எதுவுமே இருக்காது. என்ன ஒரு அற்புதமான ஃபினிஷிங்கை நியூசிலாந்து அணி செய்துள்ளது!’ என்று பாராட்டியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ‘கிரிக்கெட்டில் நம்ப முடியாத ஆட்டம் இன்று நடந்துள்ளது. மிகச்சிறந்த கிரிக்கெட் போட்டியான டெஸ்ட் ஆட்டம் மீண்டும் ஒளிர்ந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.