சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல எல்லா நாடுகளிலும் `இப்படியும்-அப்படியும்` ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள். இந்தியர்கள் ஒன்றிற்கும் உதவாதவர்கள், அவர்கள் பண்டாரங்கள்-பரதேசிகள், அவர்களுக்கு சுதந்திரம் அளித்தால் சரியாக நிர்வகிக்க முடியாமல் பிரிட்டனிடமே மீண்டும் நாட்டை கையளித்துவிடுவார்கள் என்று கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் பிரிட்டிஷ் பிரதமராகவும் இருந்த கொக்கரித்த வின்ஸ்டன் சர்ச்சில் இருந்த அதே கட்சியைச் சேர்ந்தவரும் இந்திய வம்சாவளியினருமான ரிஷி சுனாக் அதே பிரிட்டனின் பிரதமராக இன்று வந்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் நல்லிணக்கம், நேர்மையான ஆட்சி, ஊழலற்ற நிர்வாகம் போன்றவற்றை முன்னிறுத்தி அதை ஒப்பீட்டளவில் சிறப்பாகச் செய்து மக்களின் நன்மதிப்பையும், பேராதரவையும் பெற்ற நெல்சன் மண்டேலாவின் மறைவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது கட்சியான ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் கட்சியின் ஜேக்கப் ஜூமா ஊழல் புகார்களில் சிக்கி, நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டு ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டது. மண்டேலா பிறந்த மண்ணில் ஜூமாவா என்று இன்றளவும் மக்கள் பேசுகின்றனர். அந்தளவுக்கு அவர் மோசமான நிர்வாகத்தை நடத்தி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குப்தா சகோதரர்களுடன் ஊழல்களைச் செய்து மக்களிடையே அவப்பெயரைப் பெற்றுள்ளார்.
இப்போது இலங்கையைச் சேர்ந்த இருவரின் செயல்பாடு நாட்டிற்கு நல்லதோர் பெயரையும், மோசமான அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது. தீய விஷயங்கள் அல்லது எதிர்மறையான செய்திகளே மக்களை விரைவாகச் சென்றடையும், அதுவே ஊடகவியலாளர்களுக்குச் சுவையான செய்திகளை சேகரிக்க உதவும் என்கிற பொதுவான நிலையிலிருந்து சற்று மாறுபட்டு ஆக்கபூர்வமான செய்தியை முதலில் அளிக்கலாம் என்று கருதுகிறேன்.
அவ்வகையில் இந்த வாரம் ஆஸ்திரேலியாவில் இரண்டு இலங்கையர்களின் செயல்பாடே பாராட்டையும் கண்டனத்தையும் பெற்றுள்ளது. ஒன்று சிட்னியிலும் மற்றொன்று மெல்பர்ணிலும் நடைபெற்ற சம்பவங்கள். இரண்டும் தனிநபர் சார்ந்த விஷயங்கள்.
முதலாமவர் விராஜ் திசநாயக்க. அடிப்படையில் சோஷலிஸ தொழிற்சங்கவாதி மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர். மெல்பர்ண் நகரில் ஆஸ்திரேலிய அலுவலகத் தலைமையைக் கொண்டு இயங்கும் நாஃப் நிறுவனத்தில் ஊழியர்கள் தமது நியாயமான உரிமைகளைக் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகமோ தங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேலைக்கு வந்தால் ஊதியம் இல்லையேல் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தது. ஊழியர்களும் நெருக்கடியான சூழலில் இருந்தாலும், போராட்டமே வெற்றிக்கு வழி எனும் குறிக்கோளுக்கு இணங்க போராட்டத்தை தொடர்ந்தனர். ஒரு மாத காலம் கழிந்தது. எனினும் இருதரப்பும் தமது நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.
தொழிலாளர்கள் தரப்பில் அவர்களுக்கு தலைமையேற்றிருந்தார் விராஜ் திஸநாயக்க. முதலில் அவரை மட்டும் தனிமைப்படுத்தி ஆசை வார்த்தைகள் பேசி தொழிலாளர்களிடமிருந்து பிரித்து வேண்டிய சலுகைகளை அளிப்பதாகக் கூறி எப்படியாவது போராட்டத்தை முறித்துவிட நிர்வாகம் முற்பட்டது. ஆனால் விராஜோ சோஷலிஸ சிந்தனைகளில் ஊறியவர் என்பதால், எக்காரணத்தைக் கொண்டும் தொழிலாளர்களை தவிக்கவிடமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு மாதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை. அதன் காரணமாக அவர்கள் செலுத்த வேண்டிய வீட்டுக்கடன், இதர கடன்கள், வீட்டுச் செலவுகள் ஆகியவற்றின் நெருக்கடிகளை எதிர்கொள்ள தொடங்கினர். ஆனால் நிர்வாகமோ நெருக்கடிகளை மேலும் அதிகரித்தது.

அதேவேளை விராஜ் திஸநாயக்கவோ ஊழியர்களிடம் ஊக்கமூட்டும் வகையில் பேசி போராட்டத்திலிருந்து பின்வாங்க வேண்டாம் என்றும் நியாயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையூட்டினார். அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. போராட்டம் நாற்பது நாட்களைக் கடந்தது. இறுதியில் நிர்வாகம் இறங்கி வந்தது. வன்முறைகள் ஏதுமின்றி சாத்வீக முறையில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டம் 40ஆவது நாளை எட்டிய நிலையில் நிர்வாகம் பின்வாங்கியது. கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்பதாக அறிவித்தது.
ஆனால், விராஜ் தலைமையிலான குழுவோ தங்களது முக்கிய கோரிக்கையான பணி நிரந்தரம் என்கிற உத்தரவாதம் எழுத்துபூர்வமாக அளிக்கப்படும்வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். நிர்வாகத்திற்கு வேறு வழியில்லாமல் கோரிக்கையை ஏற்றது. அந்த போராட்டத்தில் நியாயம் இருந்ததை உணர்ந்த நாஃப் நிர்வாகம் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாக அறிவித்தது.
தொழிலாளர்களின் போராட்டத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்த இதர தொழிற்சங்கங்கங்கள் ஆதரவளிக்க முன்வந்தன. ஆங்காங்கே தொழிற்சங்க கிளைகள் பண உதவி அளிக்க முன்வந்தன. ஒரு கிளை மட்டுமே 13,000 ஆஸ்திரேலிய டாலர்களை அளித்தது. மேலும் பல தொழிற்சாலைகளில் ஊழியர்கள் தாமாக முன்வந்து நன்கொடையளித்தன. இந்த போராட்டத்தின் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கும் என்பதை அறிந்துகொண்ட நிர்வாகம் ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாக அறிவித்ததை அடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் முடிவிற்கு வந்தது.
நாஃப் நிறுவனம் ஒன்றும் சிறிய நிறுவனம் அல்ல. அவர்களுக்கு உலகெங்கும் 90 நாடுகளில் கிளைகள் உள்ளன. 40,000க்கும் அதிகமான பணியாளர்கள் உள்ளனர். ஒரு நாட்டில் நடைபெறும் போராட்டம் பல நாடுகளில் எதிரொலிக்கும் என்பதை நிர்வாகம் நன்று அறிந்திருந்தது. ஆனால் அனைத்திலும் பார்க்க நிர்வாகமே விராஜ் திஸநாயக்கவின் வன்முறையற்ற அறப்போராட்டத்தை கண்டு வியந்து `மூக்கின் மேல் விரலை வைத்தது.
தொழிலாளர்கள் அனைவருக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வும் முடிவு செய்யப்பட்ட து. அது பின் தேதியிட்டு அளிக்கப்படும் என்பதும் முடிவானது.
இதில் முக்கியமாக ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அந்த போராட்டத்தில் பன்னாட்டைச் சேர்ந்த ஊழியர்கள் பங்குபெற்றனர். தலைமையேற்ற விராஜ் திஸநாயக்க மட்டுமே சிங்களவர். அவர் மீது நம்பிக்கை வைத்து தொழிலாளர்கள் உறுதியுடன் போராடினர். வெற்றியும் கிடைத்தது. அவரது தலைமைத்துவத்தை பன்னாட்டு சோஷசில அமைப்புகளும் ஆதரவு சஞ்சிகைகளும் பாராட்டின. அவரது தலைமைத்துவம் காரணமாக அடுத்த தலைமுறையினரின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தொழிற்சங்கவாதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் பாராட்டியுள்ளனர்.

அடுத்து நாட்டிற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியவரின் கதையைப் பார்ப்போம். இது உலகறிந்த செய்தி தான். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் சார்பில் இடம்பெற்றிருந்தவர் தனுஷ்க குணதிலக. அவர் எதற்காகச் சென்றாரோ அதைவிடுத்து `இதர ஆட்டங்களில்` ஈடுபட்டு அகப்பட்டு அவமானப்பட்டு சிறையில் உள்ளார்.
நடைபெற்றுவரும் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் அவர் ஆடுகளத்தில் ஆடியதைவிட அறைக்குள் ஆடிய ஆட்டமே இப்போது சந்தி சிரிக்கிறது. ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய அவர் அதிலும் சரியாக சோபிக்கவில்லை. மேலும் காயம் காரணமாக இதர போட்டிகளுக்கு பரிசீலிக்கப்படவில்லை. எனினும் ஜோடிகளைத் தேடும் இணையதளம் ஒன்றின் மூலம் அவருக்கு ஆஸ்திரேலியப் பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அது தனிப்பட்ட தொடர்பு என்பதால், அதற்குரிய வரைமுறைகளுடன் அவர் அதை பேணி பாதுகாத்திருக்க வேண்டும்.
இணையதளத்தின் மூலம் ஏற்பட்ட தொடர்பு படுக்கையறை வரை சென்றது. ஆனால் அவர் தீவிரமாக விளையாட அது விவகாரமாகி பொலிஸ் நிலையம் வரை சென்றது. விசாரணையில் இறங்கிய பொலிசார், அவர் மீது குற்றமிருப்பதாகக் கருதி அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. சிட்னியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் நீதிமன்றம் செல்லும்வரை கமுக்கமாகவே இருந்தது. ஆனால் `கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்தே ஆக வேண்டும்` என்கிற கதையாக பூனைக்குட்டி மூடையிலிருந்து வெளிவந்துவிட்டது.
வழக்கை விசாரித்த பொலிஸ் அதிகாரி தனுஷ்க குணதிலக `டிண்டர்` இணையத்தின் மூலம் சந்தித்த பெண்மணியுடன் தொடர்பில் இருந்தார் என்றும் அவர்கள் உறவு படுக்கையறை வரை சென்றது என்றாலும், உடலுறவின் முக்கியமான தருணத்தில் அவர் ஆணுறை அணிய மறுத்து, தன்னை அந்த பெண்மணி மீது வலிந்து திணித்தார், அவரது கழுத்தை நெரித்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.
நீதிமன்றம் அவரது பிணை மனுவை நிராகரித்து அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அவரில்லாமல் இலங்கை அணி நாடு திரும்பியது. அவரது நடத்தையும் கைதும் நாட்டிற்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பாலியல் புகார்களில் சிக்குவது இது முதல்முறையல்ல. ஐ நாவின் அமைதி காக்கும் படைக்கு கணிசமான பங்களிப்பை இலங்கை செய்து வருகிறது. கரிபியன் தீவு நாடான ஹையிட்டியில் அமைதி காக்கும் பணிக்குச் சென்ற ஐ நா வின் அமைதி காக்கும் படையில் இருந்த இலங்கை வீரர்கள், சிட்னியில் தனுஷ்க குணதிலக செய்த அப்படியான வேலையில் ஈடுபட்டனர்.
ஐ நா அமைதி காக்கும் படைக்கு, உலகளவில் மிகவும் அவமானத்தை இலங்கையின் இராணுவ வீரர்கள் ஏற்படுத்திவிட்டனர் என்ற கெட்ட பெயர் ஏற்பட்டது. விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன. அதில் இலங்கை இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதியானாலும், மேலதிக நடவடிக்கையை ஐ நாவால் எடுக்க முடியவில்லை. அவர்கள் நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டனர். இனி அவர்களை ஐ நா அமைதி காக்கும் படையில் இணைப்பதில்லை என்கிற அளவிற்கு விவாதங்கள் நடைபெற்றன. ஆனால் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்கள் மூடி மறைக்கப்படுகின்றன.

போர்க்காலத்தில் இலங்கை இராணுவம் எப்படி நடந்து கொண்டது என்பதை உலகறியும். மக்கள் செறிந்து வாழும் இடங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் என்று அனைத்து இடங்கள் மீதும் வகைதொகையின்றி குண்டுவீச்சுகள் இடம்பெற்றன. இசைப்பிரியாவிற்கு என்ன நடந்தது என்பதை பார்த்தவர்களுக்கு நெஞ்சம் படபடத்தது. அந்த காட்சிகளைப் பார்த்தவர்கள் அப்படியான கொடுமை யாருக்கும் நேரக் கூடாது என்றனர். ஆனால் தவறிழைத்தவர்கள் யாரென்று கண்டுபிடித்து முறையான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. அப்படியான கலாசாரம் இயல்பானது என்ற நிலையை தோற்றுவித்தது.
தற்போது ஆஸ்திரேலிய பொலிசார் தனுஷ்க குணதிலக மீதான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை. அவருக்கு பிணை அளிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வாதாடி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அவர் மீதான பாலியல் புகார்கள் ஒன்றும் புதிதல்ல. அப்படியான புகார்களில் அவர் ஏற்கெனவே சிக்கி, அணியிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்ட சம்பமும் இடம்பெற்றது. இது ஒருமுறையல்ல சில முறைகள் நடைபெற்றுள்ளன.
தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்காதவர்கள் எப்படி ஒரு தேசிய அணியில் இடம்பிடித்தார் அல்லது அவருக்கு அப்படியான இடமளிக்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இலங்கை கிரிக்கெட் சபை அவரை கிரிக்கெட் தொடர்பான அனைத்து விஷயங்களிலிருந்தும் இடைநீக்கம் செய்துள்ளது. அவர் மீதான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை ஆட்சியாளர்கள் யாரும் அவரைக் கண்டிக்கவில்லை. அப்படியான நிலைப்பாடே இலங்கை தனிப்பட்ட நபர்கள் காரணமாக சர்வதேசளவில் அபகீர்த்திக்கு ஆளாகிறது என்பது கசப்பான உண்மை.





















