ChiDAES-Canada -கிழக்கிலங்கை மாணவர் கல்வி மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட அமைப்பின் 21வது ஆண்டு ஒன்றுகூடலில் சமூக சேவை விருதுகளையும் வழங்கியது
கனடாவில் வாழும் கிழக்கிலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட சமூக அக்கறை கொண்ட புத்திஜீவிகள் இணைந்து ஆரம்பித்த ChiDAES-Canada -என்று அழைக்கப்பெறும் கிழக்கிலங்கை மாணவர் கல்வி மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட அமைப்பின் 21வது ஆண்டு ஒன்றுகூடலில் சமூக சேவை விருதுகளையும் வழங்கி மேலும் மாணவர்களின் நலன்களைக் கவனிக்க நிதிசேர் ஏலம் இடும் நிகழ்வையும் நடத்தியது.
மேற்படி வைபவத்தை பல நோக்கங்களுடன் நடத்துவதில் அமைப்பின் தலைவர் விஜயரட்ணம் அவர்கள் செயலாளர் சசி சசீந்திரன் அவர்கள் மற்றும் பொருளாளர் ஜீ;வா மாணிக்கம் அவர்கள் மற்றும் ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்கள் அவர்களுடன் அனைவரதும் குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் ஒன்றிணைந்த இந்த சமூக நோக்கம் கொண்ட ஒரு மாலை ஒன்றுகூடலை சிறப்பாக நடத்தினர்.

மேற்படி நிகழ்வு 2259 Jane Street, North York, என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Church of St. Stephen, தேவாலய மண்டபத்தில் கடந்த 12ம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது
விழாவின் பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி அமெரிக்கா வாழ் நந்தகுமார் அழைக்கப்பெற்றிருந்தார். அன்றைய தினம் சமூக சேவை விருதுகள் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பெற்ற இருவரில் சமூக சேவையாளர் வசந்தகுமார் தம்பிராஜா (பாபு) மற்றும் எழுத்தாளரும் கவிஞரும் பத்திரிகையாளருமான நாகமணி லோகேந்திரலிங்கம் ஆகிய இருவருக்கும் மேடையில் பாராட்டுக் கேடயங்கள் வழங்கப்பெற்றன. அவர்கள் பற்றிய அறிமுக உரைகளை முறையே சசி சசீந்திரன், விசு கணபதிப்பிள்ளை ஆகியோர் வழங்கினார்கள்.

விழா நிகழ்ச்சிகளை பிரபல அறிப்பாளரும் சமூக அக்கறை கொண்டவருமான சஞ்சேய் அவர்கள் தொய்வு எதுவுமின்றி தொகுத்து வழங்கினார்.
இறுதியில் நடைபெற்ற மாணவர்களின் நலன்களைக் கவனிக்க நிதிசேர் ஏலம் இடும் நிகழ்வில் சேகரிக்கப்பட்ட தொகை பத்தாயிரம் டாலர்களை எட்டியிருந்த வேளையில் பரிசுப் பொதியை அதிஸ்டவசமாகப் பெற்றுக் கொண்ட மதிபாஸ்கரன் அவர்கள் அந்தப் பொதியை ChiDAES-Canada அமைப்பினருக்கே திரும்பவும் வழங்கிய நிலையில் அந்தப் பொதி மீண்டும் 500 டாலர்களுக்கு அதிஸ்டசாலெி ஒருவருக்கு வழங்கப்பெற்றது.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் உட்படட பல பயனுள்ள ஒன்றுகூடலாக விளங்கிய இந்த மாலை நிகழ்வு இனிதே நிறைவுற்றது.























