ஆணவக்கொலைக்கு ஆளானவர்களின் ஆன்மாக்களை மையக்கருவாக இயக்கிய “சிட்டுக்குறிஞ்சி” திரைப்படம். டி.ஏ.ஜூட் ஆனந்த் தயாரிப்பில், வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் ரஜித் மேனன், தீப்சிகா, ஜி.எம். குமார், தேனி முருகன், கராத்தே ராஜா, மஞ்சு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சிட்டுக்குறிஞ்சி”. காடுகளை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ரஜித் மேனன் கேரளாவிலிருந்து தமிழ்நாடு காட்டுபகுதிக்கு பேரூந்தில் வருகிறார். அங்கு வனத்துறை விருந்தினர் மாளிகையின் சாவி இல்லாததால் அங்குள்ள ஒரு வீட்டில் ரஜித் மேனனை தங்க வைக்கிறார் வனத்துறை அதிகாரி. அந்த வீட்டில் திருமணமான தீப்சிகா மட்டும் தனியாக இருக்கிறார். தீப்சிகாவின் உபசரிப்பில் திருமணமான தீப்சிகா மீது காதல் வசப்படுகிறார் ரஜித் மேனன். தனது விருப்பத்தை தீப்சிகாவிடம் சொன்னதும் தீப்சிகா அழுதுவிடுகிறார். இதனால் பயந்துபோன ரஜித் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறி கேரளாவுக்கு சென்று விடுகிறார். பிறகு தனது நண்பரை அழைத்துக் கொண்டு மீண்டும் அதே காட்டுக்கு வருகிறார். அங்கு தீப்சிகாவை சந்திக்கிறார். ஆனால் தீப்சிகாவுக்கு ரஜித்தை அடையாளம் தெரியவில்லை. மிகுந்த குழப்பத்துடன் கடந்தமுறை தங்கியிருந்த வீட்டுக்கு போகிறார். ஆனால் அந்த வீடு இடிந்து அறுபது ஆண்டுகள் கடந்த பாழடைந்த வீடாக காட்சியளிக்கிறது. அதன் பின்னணி என்ன என்பதுதான் மீதிக்கதை. ரஜித் மேனனின் அமைதியான நடிப்பு அலாதியாக இருக்கிறது. படத்தின் முன்பகுதி மெதுவாக ஊர்ந்து நகர்ந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது. தீப்சிகாவின் மாறுபட்ட கதாபாத்திரங்கள் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அவர் வருகின்ற காட்சிகள்தான் படத்தின் உயிரோட்டமாக அமைகிறது. துடிப்பான அவரது நடிப்பும் இதழிலிருந்து சிந்துகின்ற சிரிப்பும் பார்வையாளர்களை ஈர்க்கின்றது. ஜி.எம். குமார், தேனி முருகன், கராத்தே ராஜா, மஞ்சு அனைவரும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிரித்தும் அழுதும் நடித்திருக்கிறார்கள். ஆணவக்கொலைக்கு ஆளானவர்களின் ஆன்மாக்களை மையக்கருவாக வைத்து குழப்பத்துடனே படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் மீனாட்சி சுந்தரம்.
















