கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும். ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்? பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்-அமைச்சர் விஜய், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்-அமைச்சர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்?
கடந்த ஜூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்-அமைச்சர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்-அமைச்சர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்! பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்-அமைச்சரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்-அமைச்சர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மவுனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்-அமைச்சர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா? தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது? ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
















