– ஒட்சிசன் வழங்கப் படாமையே மரணத்திற்குக் காரணமா?
வவுனியா வடக்கு பிரதேச சபைத் தலைவர் கடும் கண்டனம்!
(26-11-2026)
பாம்பு தீண்டிய நிலையில் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 21 வயது யுவதி, மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உரிய ஒட்சிசன் வசதி வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் பயணத்தின் இடையே மூச்சுத்திணறலுக்கு உள்ளான யுவதிக்கு புளியங்குளம் வைத்தியசாலையில் ஒட்சிசன் சிலிண்டர் மாற்றப்பட்ட போதிலும், அதுவும் முறையாக செயல்படவில்லை எனப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக யுவதியின் பெற்றோரிடம் நேரடியாக விசாரித்த வவுனியா வடக்கு பிரதேச சபைத் தலைவர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு, நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையின் செயற்பாடுகளை கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும், ஒட்சிசன் சிலிண்டர்கள் உரிய முறையில் நிரப்பப் படுகின்றனவா? என்பது தொடர்பிலும் கேள்வி எழுப்பியுள்ள அவர், சம்பவம் தொடர்பில் சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளின் தரம் தொடர்பில் மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ள இந்தச் சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















