”போரில் தோற்றாலும் இலட்சியத்தில் தோற்காத தமிழினம்”என நாம் மார்தட்டுகையில்,அர்ச்சுனா எம்.பி என்ற மனநோயாளி பேரினவாதத்தின் கைக்கூலியாக, தமிழ் தேசியத்தையும் தமிழ் தேசியவாதிகளையும் இழிவுபடுத்தி தமிழ் தேசியத்தை பலவீனமடைய வைக்கும் திட்டமிட்ட சதிக்கு இந்த அரசியல் கோமாளிக்கு , வாக்களித்த ஒவ்வொரு தமிழனும் பொறுப்பேற்க வேண்டும்’
‘—கே.பாலா
தமிழ் தேசியத்திற்கான,தமிழர் உரிமைக்கான போராட்டமும் எழுச்சியும், உணர்வும்,குரலும் பலவீனமடைந்து வரும் நிலையில் அதனை அடியோடு அழித்தொழிக்கும் வகையில் வழமைபோன்றே தமிழர் தரப்பிலுள்ள சில ”விஷச் செடி”களை, ”இனத் துரோகி”களை தற்போதைய அநுரகுமார அரசாங்கமும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக தற்போது தமிழர் தேசத்தில் இந்த அநுரகுமார அரசாங்கத்தின் தலைமையில் நடக்கும் மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு எதிரான ” பொத்தடா வாயை…தூக்கி அடிப்பேன்டா நாயே..”என்ற வார்த்தைப் பிரயோகங்களும் அசிங்க அரசியல் நடவடிக்கைகளும் தீவிரம் பெற்று வருகின்றன.
தமிழ் தேசிய இனத்தைப் பொறுத்தவரை இலங்கை என்று சுதந்திரம் அடைந்ததோ அன்றுமுதல் இன்றுவரை எதிரிகளால் வீழ்த்தப்பட்ட வரலாறுகளை விட துரோகிகளினால் முதுகில் குத்தப்பட்ட வரலாறுகள்தான் அதிகம் . அதிலும் அந்தத் துரோகிகள் தமிழ் தேசிய இனத்துக்குள்ளிருந்தமையே இன்றுவரை தொடரும் தமிழ் தேசிய இனத்தின் அவலம். அந்த வகையில் அன்றைய அமிர்தலிங்கம் முதல் இன்றைய அர்ச்சுனா வரை இந்த துரோகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
தமிழினத் துரோகிகளில் பலர் இலங்கை அரசாங்கங்களுடன் இணைந்து வெளிப்படையாகவே தமிழ் தேசிய இனத்திற்கு துரோகம் செய்தவர்களாக ,தமிழ் தேசிய இனத்தை ,போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்களாக இருந்தவர்கள் ,இருக்கின்றவர்கள். ஆனால் தமிழ் தேசிய இனம் தற்போது இதுவரை சந்தித்திருக்காத ஒரு விசித்திர, மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு தமிழினத் துரோகியை,தமிழினத்தை காட்டிக்கொடுப்பவரை, தமிழ் தேசியத்தை இழிவுபடுத்துபவரை , பேரினவாதத்தை மகிழ்வடைய வைப்பவரை எதிர்கொண்டுள்ளது.அவர்தான் சுயேட்சைக்குழு 17 இன் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான அர்ச்சுனா இராமநாதன்.
யாழ்மாவட்ட மக்களின் குறிப்பாக தென்மராட்சி மக்களின் முட்டாள்தனத்தினால் எம்.பி.யாகி ”ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்” என்பதுபோல் உள்ள இந்த அர்ச்சுனா இராமநாதன் என்னும் நபரினால் ஒட்டு மொத்த தமிழ் தேசிய இனமும் வெட்கித் தலைகுனியும் நிலைமைகள் மாவட்ட , பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மூலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் மாவட்ட , பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இந்த அர்ச்சுனா என்ற எம்.பி.யினால் சந்தி சிரிக்கும் வகையில் தான் தற்போது நடந்தேறி வருகின்றன.
பாராளுமன்றம்,மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் என அனைத்து இடங்களிலும் தமிழ் தேசத்திற்கு எதிராகவும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் தமிழின உணர்வாளர்களுக்கு எதிராகவும் வெறிபிடித்த ,பைத்தியக்கார , கோமாளித்தனங்களின் ஒட்டுமொத்த உருவமாக இழிவான வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தியும் ,காட்டுக்கூச்சல்களைப் போட்டும் சண்டித்தனங்களை காட்டியும் குழப்பங்களை விளைவித்தும் பேரினவாதத்திற்கு ஆதரவாகவும் செயற்பட்டுவரும் இந்த நபரினால் தமிழ் மக்களைப்பார்த்து ஏனைய சிங்கள ,முஸ்லிம் மக்கள் கைகொட்டி சிரிக்கின்றனர்.
இதில் அண்மையில் நடந்த வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் போன்றவற்றில் அர்ச்சுனா என்னும் இந்த நபர் சக பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பிரதேச மக்கள் பிரதிநிதிகளை விழித்து பயன்படுத்திய வார்த்தைகள் இந்நபரின் ”மனநிலை ”தொடர்பில் மக்களுக்கிருந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன் இவரின் எல்லை மீறிப்போகும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு எதிரான செயற்பாடுகள், நடத்தைகள் தமிழ் மக்களை பொறுமையின் எல்லைக்குத் தள்ளியுள்ளன.
தனது கருத்தில் மற்றவர்கள் முரண்படும்போது அதற்கு பதிலளிக்க முடியாமல் சேறுபூசல்களையும்,பொய் ,புரட்டுக்களையும் அவிழ்த்துவிட்டு வன்முறையையும் மிரட்டலையும் வெளிப்படுத்தும் மொழியைப் பயன்படுத்தியும் தான் முரண்படுபவர் அல்லது தன்னுடன் முரண்படுபவரின் குடும்பங்களை பொது வெளியில் இழுத்து கொச்சைப்படுத்தியும் கேவலப்படுத்தியும் அசிங்க அரசியல் செய்துவரும் இந்த அர்ச்சுனா எம்.பி அண்மையில் நடந்த வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திர குமார் பொன்னம்பலத்தை “தூக்கி அடிப்பன் டா நாயே, வாயை மூடு” எனப் பேசியது நிச்சயமாக கலாசாரச் சீர்கெட்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்த ஒருவரால்தான் முடியும்.
அதுமட்டுமன்றி அங்கிருந்த மக்கள் பிரதிநிதிகளை ”வாயை மூடுடா,சத்தம் போடாமல் இருடா,நீ என்ன பைத்தியக்காரனா ”என ஒரு மன நோயாளிபோல் தான் பாவித்த கேவலமான வார்த்தைகள் மக்களிடம் விசனங்களையும் கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையம் ஏற்படுத்தியுள்ளதால் அந்த கேவலமான வார்த்தைப் பிரயோகங்களை நியாயப்படுத்த அந்த அர்ச்சுனா என்ற நபர் இன்னொரு ”ஏஐ’ (AI )பித்தலாட்ட வேலையையும் செய்து ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் முட்டாள்களாக்கவும் முயன்றுள்ளார்.
அர்ச்சுனா என்ற அந்த பித்தலாட்டக்கார நபர் தனது முக நூலில்
”பொத்தடா வாய் !” – ஜீ.ஜீ.”நீ பொத்தடா வாய் !” – அமிர் -எனத் தலைப்பிட்ட முன்னர் தமிழ் மக்களிடம் பிரசித்தம் பெற்றிருந்த சுதந்திரன் பத்திரிகையின் முகப்பு பக்கத்தை வெளியிட்டு ”பாராளுமன்றத்திலேயே உங்கள் ஆட்கள் காட்டிய ஒழுக்கத்தை நாடே பார்த்திருக்கிறது. அதற்குப் பிறகும் ஒழுக்கம் பற்றி நீங்கள் பேசுவது முரண்பாடாகத்தான் தெரிகிறது .தூக்கி அடிக்காமல் விட்டது என் பிழைதான் போல”எனப் பதிவிட்டுள்ளார் .
இந்த அர்ச்சுனா என்ற நபர் தனது முகநூலில் பதிவிட்ட “சுதந்திரன்” பத்திரிகை படத்தில் செவ்வாய், 24 மே 1968 என பதிவிடப்பட்டி ருக்கின்றது. ஆனால் நாள் காட்டியின் அடிப்படையில் 1968 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி என்பது வெள்ளிக்கிழமையே வருகின்றது. அடுத்து, அந்த படத்தில் உள்ள செய்தியில் அமிர் என்று குறிப்பிட்டு இருந்தாலும் அது அமைச்சர் அமிர் எனத் தெளிவாக கூறுகின்றது.1956 ஆம் ஆண்டில் இருந்து அமிர் என அழைக்கப்பட்ட அப்பாப்பிள்ளை .அமிர்தலிங்கம் பதவியில் இருந்தாலும் அவர் அமைச்சராக இருக்கவில்லை என்பதால் அர்ச்சுனா என்ற நபர் வெளியிட்டது ”ஏஐ”யில் உருவாக்கப்பட்ட சுதந்திரன்” பத்திரிகை என்பது தெளிவாகின்றது.
இந்த பதிவு தொடர்பில் மூத்த ஊடகவியலாளரான என். வித்தியாதரன், ”அர்ச்சுனா என்ற நபர் வெளியிட்டுள்ள இந்த போலி சுதந்திரன் பத்திரிகையைப் பார்த்ததுமே அந்த நாளிதழ்தயாரிப்பு பொய் என்பது எல்லோருக்கும்தெரிகிறது. குறிப்பிட்ட திகதியில் கிழமை பிழையாக உள்ளது. அமிர்தலிங்கம் எப்பொழுதும் அமைச்சரானவரே அல்லர். இதில் வேடிக்கை என்னவென்றால் ஏஐ மூலம் பழைய பத்திரிகை ஒன்றை தயார் பண்ணியவர்களுக்கு யார் அமிர்தலிங்கம், அவரது படம் எது, அவர்அமைச்சராக இருந்தாரா என்பவைபோன்ற அடிப்படை அரசியல் அறிவுகூட இருக்கவில்லை.
ஆயினும், இதில் இன்னொரு விடயம் உண்டு. அதே தலைப்புடன் கிழமை குறிப்பிடாமல் திகதி மட்டும் குறிப்பிட்ட சுதந்திரன் நாளிதழ் ஒன்று 1968 ஆம் ஆண்டு பிரசுரமாகி இருக்கின்றது. அதை வைத்துக் கொண்டுதான் இந்த உல்டா பிரதியைச் சிலர் தயாரித்திருக்கின்றனர்.‘பொத்தடா வாயை!’ என்ற பிரச்சினை பாராளு ளுமன்றில் அப்போது எதிரொலித்துத்தான் இருக்கின்றது . ஆனாலும் இப்போது ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் இடம்பெறும் அளவுக்கு அப்படி ஒன்றும் கேவலமான நிலைக்கு செல்லவில்லை ”என்று கூறுகின்றார்
சரி அதனை விடுவோம்.யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் மாவட்ட ,பிரதேச பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் கோமாளிகளின் கூடாரங்களாக மாறுவதற்கு இந்த அர்ச்சுனா என்ற நபர் மட்டும் தான் காரணமா அல்லது அவரின் மன நிலையை சோதிக்கும் வகையில் முரண்படும் சக எம்.பி.க்கள் காரணமா என்றால் இவர்கள் இருவரையும் விட பிரதான காரணமாக இவ்வாறான மாவட்ட ,பிரதேச பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு தலைமைதாங்கும் அரச தரப்பின் கையாலாகாத்தன, ஆளுமையற்ற ,அனுபவமற்ற அமைச்சர்.எம்.பி.க்கள்தான் உள்ளனர் .
இத்தகைய மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை ஒழுங்கு முறையாக நடத்த வேண்டிய பொறுப்பு கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவருக்குண்டு . தலைமை தாங்குவார் அந்த ஆசனத்தில் இருந்து ஆளுமையுடன் கூட்டத்தை நடத்த முடியாவிட்டால் கூட்டத்திலிருந்து முதலில் வெளியேற வேண்டியவர் அவர்தான், ஆனால் தற்போது கூட்டங்களுக்கு தலைமைதாங்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சர்,யாழ் மாவட்ட எம்.பி.க்கள் ”பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுபவர்களாகவே” உள்ளனர்.
சரியான , பொறுப்பான, தகுதியான தலைமைத்துவம் இல்லாது இவ்வாறான கூட்டங்கள் நடப்பதாலேயே இக் கூட்டங்கள் கோமாளிகள் கூடும் இடங்களாக மாறி வருகின்றன.அத்துடன் இதற்குள் அரசியலும் உண்டு. அதாவது அருவருக்கத்தக்க வகையில் பேசுவது,மோதுவது, வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவது தமிழ் தேசியம் என்ற பெயரில் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதால் அமைச்சர்,அரச தரப்பு எம்.பி.க்கள் இவர்களை மோத விட்டு .அசிங்கப்படவிட்டு,அவமானப்படவிட்டு வேடிக்கை பார்த்து குளிர் காய்கின்றார்கள்,
இதில் இன்னொரு இலாபமும் அரசதரப்பிற்கு உண்டு. அதாவது யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் , மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் இந்த அர்ச்சுனா என்ற நபர் செய்யும் பைத்தியக்காரத்தன நடவடிக்கைகள்,குழப்பங்களினால் எந்த வொரு கூட்டத்திலும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படாமல் , மக்கள் பிரச்சினைகள் பேசப்படாமல் குழப்பங்களிலேயே முடிவடைகின்றன. இதனால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டிய நெருக்கடி, தேவை,பொறுப்பு அரசுக்கு இல்லாமல் போகின்றது. அதனாலும் அர்ச்சுனா என்ற நபரை கட்டுப்படுத்தாமல் அரசாங்கத்தரப்பு அவரைப்பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளை, தேவைகளை தீர்ப்பதிலிருந்து நழுவிச் செல்கின்றது என்பதும் உண்மை.
தமிழீழத்திற்காக, தமிழ் தேசிய இனத்திற்காக,அதன் உரிமைகளுக்காக பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர் ,யுவதிகள் தமது உயிர்களையும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் தமது அவயவங்களையும் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தமது உயிர்களையும் பல இலட்சம் கோடி ரூபா சொத்துக்களையும் தியாகம் செய்து ”போரில் தோற்றாலும் இலட்சியத்தில் தோற்காத தமிழினம்”என மார்தட்டுகையில்,அர்ச்சுனா எம்.பி என்ற மனநோயாளி பேரினவாதத்தின் கைக்கூலியாக, தமிழ் தேசியத்தையும் தமிழ் தேசியவாதிகளையும் இழிவுபடுத்தி தமிழ் தேசியத்தை பலவீனமடைய வைக்கும் திட்டமிட்ட சதிக்கு இந்த அரசியல் மன நோயாளிக்கு வாக்களித்த ஒவ்வொரு தமிழனும் பொறுப்பேற்க வேண்டும்.


















