(ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்திலிருந்து ஆர்.என். லோகேந்திரலிங்கம்)
கனடாவைத் தலைமையகமாகக் கொண்டதும் உலகின் பல நாடுகளிலும் கிளைகளை கொண்டதுமான; அனைத்துலக தமிழர் பேரவை’ ஏற்பாட்டில் நடைபெறும் ‘உலகத் தமிழ் ஆய்வு மாநாடு-2026 . இன்று 15-10-2026 அன்று வியாழக்கிழமை கனடா- ஸ்காபுறோவில் கோலாகலமாக ஆரம்பமாகின்றது!
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இன்று 15ம் திகதி, வெள்ளிக்கிழமை 16ம் திகதி, சனிக்கிழமை17ம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 18ம் திகதி ஆகிய நான்கு நாட்கள் தொடர்ச்சியாக வெவ்வேறு மண்டபங்களில் நடைபெறும் என; அனைத்துலக தமிழர் பேரவை’ அமைப்பின் தலைவரும் விழாக்குழுத் தலைவருமான நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் நேற்று புதன்கிழமை 14ம் திகதி கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக இந்த அனைத்துலக மாநாட்டில் பங்கெடுப்பதற்காக உலகின் பல நாடுகளிலிருந்தும் பேச்சாளர்களும், பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய வண்ணம் உள்ளார்.
அவர்களை வரவேற்கும் பணிகளை ;அனைத்துலக தமிழர் பேரவை’ யின் முக்கிய உறுப்பினர்களும் பல பணிகளை தங்கள் பணிகளாக ஏற்று செயற்படுகின்றவர்களுமான திருவாளர்கள் நிமால் விநாயகமூர்த்தி, நவநேசன் முருகண்டி, கென் கிருபா, சந்திரகுமார் இராமகிருஸ்ணன் மற்றும் தொண்டர் பிரிவின் உறுப்பினர் குரு யோகராஜா ஆகியோர் தொடர்ச்சியாக காலை முதல் மாலை வரை ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு கடந்த இரண்டு நாட்களும் கனடாவிற்கு வருகை தந்தவர்களில் பல முக்கிய பேச்சாளர்கள் அடங்கியிருந்தனர்
மலேசியாவிலிருந்து எழுத்தாளரும் பேச்சாளரும் மாநாட்டின் விழாக்குழுவில் முக்கிய பங்குவகிப்பவருமான இராஜேந்திரன் பெருமாள், இலங்கை ‘வீரகேசரி’ பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்கள், இலங்கையிலிருந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் அவர்கள்,மற்றும் பிரான்ஸ் தேசத்தில் வாழும் ஈழத்தின் ‘பிறவிக்’ கலைஞர்களான புகழ்பெற்ற தயாநிதி மற்றும் குணபாலன் (நையாண்டி மேளம் புகழ்) உட்பட பலர் தற்போது கனடாவின் ரொறன்ரோ மாநகருக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இவர்களில் சிலரை வரவேற்கும் முகமாக விமான நிலையத்திற்கு கனடா உதயன் பிரதம ஆசிரியரும் லோகேந்திரலிங்கமும் சென்றிருந்தார்.
இந்த பிரமாண்டமான நான்கு நாள் மாநாடு தொடர்ச்சியாக மிகுந்த பொருட்செலவில் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாடு நான்கு நாட்களும் இடம்பெறும் மண்டபங்கள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:-
15ம் திகதி வியாழக்கிழமை: காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை
Centennial College Event Centre- 937 Progress Ave, Scarborough
16ம் திகதி வெள்ளிக்கிழமை: காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை
Centennial College Event Centre- 937 Progress Ave, Scarborough
17ம் திகதி சனிக்கிழமை:
காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5..00 மணி வரை
Centennial College Event Centre- 937 Progress Ave, Scarborough.
மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணிவரை
கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சி
Metropolitan Centre , 3840 Finch Avenue East Scarborough
18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை; அனைத்துலக தமிழர் பேரவை’ அமைப்பின் இராப்போசன விருந்து
மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 11..00 மணி வரை
Durham Convention Centre, 30 Beck Crescent, Ajax
தகவல்: சத்தியன்


















