‘பன்முக ஆற்றலான் கா. சிவத்தம்பியின் தமிழியல் பார்வை’ நூல் வெளியீட்டுக்குத் தலைமை தாங்கி பேராசிரியர் இ. பாலசுந்தரம் புகழாரம்
“இலங்கைத் தமிழர்களின் இலக்கிய திறனாய்வுத் துறையிலும் தமிழியல் தொடர்பான ஆய்வுத் துறைகளில் தன்னை ஈடுபடுத்தி உயர்ந்த அர்ப்பணிப்புடன் தன் வாழ்வை தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்ந்து மறைந்த பேராசிரியர்கா. சிவத்தம்பி அவர்களின் தமிழியல் ஆய்வு மற்றும் இலக்கியத் திறனாய்வுப் பங்களிப்புக்ளைக் கௌரவிக்கும் வகையில் தனது ஆய்வை மேற்கொண்டு கலாநிதித் பட்டம் பெற்ற முனைவர் வாசுகி நகுலராஜா அவர்களை நாம் கொண்டாடி மகிழ்ந்து அவரையும் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும்”
‘இவ்வாறு கடந்த 10-10-2026 அன்று சனிக்கிழமையன்று ஸ்காபுறோவில் நடைபெற்ற முனைவர் வாசுகி நகுலராஜா அவர்களின்’பன்முக ஆற்றலான் கா. சிவத்தம்பியின் தமிழியல் பார்வை’ என்னும் நூல் வெளியீட்டுக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய பேராசிரியர் இ. பாலசுந்தரம் புகழாரம் சூட்டினார்.
அன்றைய வெளியீட்டு விழா ஸ்காபுறோ ஶ்ரீ சத்தியசாய் பாபா நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கனடா வாழ் கலை இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் கலைஞர்கள் தொலைக்காட்சிக் கலைஞர் மற்றும் ஊடகவியலாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் மண்டபத்தை நிரப்பியிருக்க இந்த அரிய நூல் வெளியீட்டு விழா இடம் பெற்றது.
அன்று வெளியிடப்பெற்ற நூலானது ஒரு ஆழமான தமிழியல் மற்றும் தமிழின் தொன்மை வரலாறு என அனைத்துப் பகுதிகளையும் கொண்டதாக அமைந்ததால் அது தொடர்பான ஆய்வு மற்றும் விமர்சனம் போன்ற பணிகளை நீண்ட கால தமிழியல் மற்றும் இலக்கணம் தொடர்பான ஈடுபாடு கொண்ட கல்வியாளர்களால் ஆற்றினார்கள். எனவே இந்த நிகழ்வானது தமிழின் ஆழத்தையும் அதன் அழகையும் எடுத்தியம்பும் ஒரு வரலாற்றுப் பெருவிழாவாக இடம்பெற்றது என்றால் அது மிகையாகாது


























