போதை வஸ்துகளை தடுக்க தவெக அரசு மறுப்பது ஏன்? என அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். போதையால் பறிபோகியுள்ள மேலும் சில உயிர்கள் – தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற முனைகிறதா தவெக அரசு? – நீதிமன்றங்களை விரிவுபடுத்தும் அரசு, கரைபுரண்டுள்ள போதை வஸ்துகளின் நடமாட்டத்தை தடுப்பதற்கான வழிகளை தேட மறுப்பது ஏன்? அரியலூர் அருகே ரோந்து பணியின் போது போதைக் கும்பலால் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான ஊர்க்காவலர் படை வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கழுத்தை நெறித்து ஆற்றுக்குள் தூக்கிவீசப்பட பெண் பலி, தூத்துக்குடி அருகே பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விசிக பிரமுகர் கொலை என அடுத்தடுத்து வெளியாகும் கொலைச் செய்திகள் தமிழக மக்களுக்கு பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன. குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்தி பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும், பாதுகாப்பு அளித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவலர்களே போதைக் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்படும் அளவிற்கான அசாதாரண நிலையை இந்த பொம்மலாட்ட தவெக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது. தவெக ஆட்சியில் அன்றாடம் ஒலிக்கும் மரண ஓலங்களால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வெளிவரவே பயந்து ஒடுங்கிவரும் சூழலில், அவர்களின் கூக்குரல் அண்ணன், தம்பி, மாமன் என்று ரீல்ஸ்காக ரீல் விடும் முதல் – அமைச்சர் விஜய் காதுகளுக்கு மட்டும் கேட்காமல் இருப்பதன் மூலம் தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் ஆட்சியா அல்லது அரக்கர்களின் ஆட்சியா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. தவெக ஆட்சி அமைந்தவுடன் பட்டிதொட்டி எங்கும் போதை கலாச்சாரம் பரவி உள்ளதாக வாய்கிழிய பேசிய முதல் – அமைச்சர் விஜய், அதனை வேர் வரை சென்று கிள்ளி எறியாமல், குற்றம் நடந்தபின்பு நீதி வழங்கும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை கூட்டுவது மூலம் தனக்கு கீழ் இயங்கும் காவல்துறை செயலற்ற நிலையில் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா? எனவே, பட்டிதொட்டி எங்கும் புரையோடிப் போயிருக்கும் போதை பொருட்களின் தாராள நடமாட்டத்தை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, போதைக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த ஊர்க்காவலர் படை வீரரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண உதவியை உடனடியாக வழங்கிடுவதோடு, சட்டம் ஒழுங்கு என்பது மக்களின் உயிருக்கும் உடமைக்கும் வழங்கப்படும் அடிப்படை உத்தரவாதம் என்பதை இனியாவது உணர்ந்து அதனை சீரமைக்க கூடுதல் கவனத்தை செலுத்திட வேண்டும் என முதல் – அமைச்சர் விஜய்யை வலியுறுத்துகிறேன்.



















