எனவோ சகலரும் பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டும் என கனேடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தும் கனடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி
செம்மணி மனிதப்புதைகுழியானது இலங்கையில் இனவழிப்புக்கு மத்தியில் வாழ்ந்த மக்கள் முகங்கொடுத்த அளவிலா துன்பங்களையும் மீறல்களையும் மீள நினைவுறுத்தியிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்கு நீதிகோரி உலகளாவிய ரீதியில் இயங்கிவரும் சகல செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து, பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டியதன் தேவைப்பாட்டையும் உணர்த்தியிருப்பதாககனடாவின் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் கனேடிய பாராளுமன்ற வளாகத்தில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு:
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் பதில்களையும் நீதியையும் கோரிக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரம் அங்கீகரிக்கப்படவேண்டியது அவசியமாகும். ஆரம்பத்தில் மனிதப்புதைகுழியாக இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்பட்ட செம்மணியில் இருந்து அண்மையில் சுமார் 600 ஐ அண்மித்த மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இது சர்வதேசத்தின் கவனம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றுக்கான தேவைப்பாட்டைக் கொண்டிருக்கும் முக்கிய விவகாரமாகும்.
இலங்கை சுமார் மூன்று தசாப்தகால மோதல் வரலாற்றையும், அக்காலப்பகுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத பின்னணியையும் கொண்டதொரு நாடாகும். இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி மனிதப்புதைகுழியானது இனவழிப்புக்கு மத்தியில் வாழ்ந்த மக்கள் முகங்கொடுத்த அளவிலா துன்பத்தையும் மீறல்களையும் மீள நினைவுறுத்தியிருக்கின்றது. அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்களுக்கு நீதிகோரி உலகளாவிய ரீதியில் இயங்கிவரும் சகல செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து, இவ்விவகாரத்தில் பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டியதன் தேவைப்பாட்டையும் இது உணர்த்தியிருக்கின்றது.
2009 ஆம் ஆண்டு நவி பிள்ளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராகப் பதவி வகித்தபோது, தமிழ்ச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5 – 6 பேரடங்கிய குழுவினரை ஜெனிவாவில் சந்தித்தார். அவ்வேளையில் தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதேவேளை கலாநிதி மரியோ அருள்தாஸ் இலங்கையின் இனவழிப்புக்கு எதிராக லண்டன் வீதிகளில் பிரசாரங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த 17 வருடங்களாக பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை இலக்காகக்கொண்ட பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றார்.
இது இவ்வாறிருக்க இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளில் கனடா அங்கம் வகிப்பதுடன், இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறுப்புக்கூறல் செயற்திட்டம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதை கனடா ஏற்றுக்கொண்டிருக்கின்றது. அதுமாத்திரமன்றி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உள்ளடங்கலாக நால்வருக்கு கனேடிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இருப்பினும் இந்நடவடிக்கைகள் மாத்திரம் போதுமானவை அல்ல. இவற்றுக்கு அப்பால் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது. எது எவ்வாறெனினும் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு நாம் ஆதரவளிக்கின்றோம் என்றார்.


















