தாராபுரம் கனிம ஆய்வுத் திட்டம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கடாபுள்ளபட்டி பகுதியில் பிளாட்டினம் உள்ளிட்ட அரிய கனிமங்கள் தொடர்பாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட ஆய்வு குறித்து மக்களிடையே எழுந்துள்ள நியாயமான சந்தேகங்களுக்குத் தமிழக அரசு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும்.
கடந்த 22.02.2024 அன்று மத்திய அரசின் தேசியக் கனிம ஆய்வு அறக்கட்டளை முன்வைத்த திட்டத்தில், கடாபுள்ளபட்டி பகுதியில் 143.37 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அரிய மண் தனிமங்கள், அரிய உலோகங்கள், பிளாட்டினக் குழுத் தனிமங்கள் ஆகியவற்றுக்கான ஜி-4 ஆரம்பக்கட்ட ஆய்வு முன்மொழியப்பட்டது. இதற்கான ஆய்வு முகமையாக மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த முன்மொழியப்பட்ட ஆய்வுப் பகுதி ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வுடன் சுமார் 90 சதவீதம் ஒத்துப்போனதால், குறிப்பிட்ட திட்டம் பின்னர் இரத்து செய்யப்பட்டது. அதேவேளையில், தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனிம ஆய்வுகள் தொடர்பாக உள்ளூர் அமைப்புகள் எழுப்பும் புகார்கள் மற்றும் விவசாயிகளின் அச்சங்கள் குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டிய கடமை உள்ளது. ஆரம்பக்கட்டக் கனிம ஆய்வு, கனிம அகழ்வு, கனிமச் செயலாக்கம் ஆகியவை வெவ்வேறு கட்டங்கள். ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்ப சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்புகளைத் தனித்தனியாக மதிப்பிட வேண்டியது அவசியம். கேரளாவின் சவாரா பகுதியில் கனிம மணல் பிரித்தெடுக்கும் நடவடிக்கைகள் மண் மற்றும் நீர் தரம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. ஆலப்பாடு கடலோரப் பகுதியில் நில அரிப்பு தொடர்பான ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணங்களில் இயற்கையான கடலோர மாற்றங்களும் அடங்கும். கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் கனிம மணல் செயலாக்கத்துடன் தொடர்புடைய கதிரியக்கத் தனிமங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவின் ரஸ்டன்பர்க் பகுதியில் பிளாட்டினச் சுரங்கங்களைச் சுற்றியுள்ள மண் மற்றும் படிவுகளில் நச்சு உலோகத் தனிமங்களின் செறிவு அதிகரித்திருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவையனைத்தும், தாராபுரத்தில் உடனடியாக இதே பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கான நேரடி ஆதாரங்கள் அல்ல என்றாலும், கனிம அகழ்வு மற்றும் செயலாக்கம் தொடங்குவதற்கு முன்பே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீராதாரங்கள், கழிவு மேலாண்மை ஆகியவற்றை அறிவியல் அடிப்படையில் மதிப்பிட வேண்டியதன் அவசியத்தை இவை உணர்த்துகின்றன.
அடுத்தகட்ட முடிவுகளுக்கு முன் மக்கள் கருத்துக் கேட்பு நடத்தப்படுமா?. விவசாய நிலங்கள், நிலத்தடி நீர் மற்றும் அமராவதி ஆற்றுப் படுகை பாதிக்கப்படாது என்பதற்கு அரசு வழங்கும் சட்டபூர்வ உத்தரவாதம் என்ன?. தாராபுரம் சுற்றுவட்டாரக் கனிம ஆய்வுகள் குறித்த உண்மை நிலவரத்தை முழுமையான வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மக்களின் நிலமும் நீரும் பாதுகாக்கப்பட வேண்டிய பொதுச் சொத்துகள்; அவை யாருடைய வணிக லாபத்திற்காகவும் பலியாக்கப்படக் கூடாது என்பதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மிக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.


















