தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது வன்னியில் பல கட்டமைப்புக்களை உருவாக்கி குட்டி அரசாங்கம் ஒன்றை நடத்திய காலப்பகுதியில் இயங்கி தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த ஒரு சீருடையை தனது யாழ்ப்பாண மாநகரசபையின் காவல்துறை பணியாளர்களுக்கு வழங்கினார் என்றும், எனவே விடுதலைப் புலிகள் போன்ற ஒரு அமைப்பை மீள உருவாக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அன்றைய தினமே இரவு 8.00 மணியளவில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.யாழ்ப்பாண நீதி மன்ற வளாகத்தில் மேயர் மணிவண்ணன் அவர்களை விடுவிக்கவும் அவரின் நலன்களை கவனிக்கவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனோடு சுமார் 20 சட்டத்தரணிகள் நீதி மன்றத்தில் குழுமியிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றிரவு அவர் முற்படுத்தப்பட்ட போது, பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் வரி வசூலிப்பாளர்களுக்கு சீருடை வழங்கியமையை அடுத்து சர்ச்சை எழுந்தது. தமிழீழ காவற்றுறையின் சீருடையை ஒத்த சீருடையை வழங்கியதாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோவினால் நேற்று அதிகாலை 1.40 மணிக்கு கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் காலை ஒப்படைக்கப்பட்டார். அங்கு சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர் முதல்வர் வி. மணிவண்ணன் பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு பின்னர் 8 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.