கோவிட்-19நோய்த் தொற்றானது அரச இயந்திரத்தின் அனைத்து கூறுகளையும் ஆக்கிரமித்துக்கொள்ள. மார்ச் 2020 தொடக்கம் எமது அரசாங்கத்திற்கு ஒரு பெரும் சவாலாவே அமைந்தது – மார்க்கம் ஸ்ரோவில் தொகுதியின் லிபரல் வேட்பாளர் ஹெலெனா ஜேசேக்
(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
”கடந்த மார்ச் 2020 தொடக்கம் கனடாவின் அரச இயந்திரத்தின் பெரும் கூறுகளை கோவிட்-19 தொற்றானது ஆக்கிரமித்துக் கொள்ளவே, அது எமது அரசாங்கத்திற்கு பெரும் சவாலாகவே இருந்தது. அவ்வாறு இருந்தும், எமது பிரமரும் ஏனைய அமைச்சர்களும் இரவு பகலாக கடுமையாக பணியாற்றியதால் அனைத்துக் கனேடிய மக்களும் நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு உதவியாக இருந்தது. அந்த வகையில் ஒரு மருத்துவர் என்ற வகையில் எனக்கும் கனடாவின் பிரதான மருத்துவக் குழுவில் இணையும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேற்படி குழு கனடாவின் சுகாதார அமைச்சருக்கும் ஏனைய மருத்துவ அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கும் பொறுப்பில் பணியாற்றியது.
இதுபோன்று நான் எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதிய தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எனது சேவைகளை எனது தொகுதி மக்களுக்கும் ஒட்டு மொத்த கனடியர்களுக்கும் வழங்க விரும்புகின்றேன்'”
இவ்வாறு தெரிவித்தார் மார்க்கம் ஸ்ரோவில் தொகுதியின் லிபரல் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கனடாவின் மருத்துவக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான திருமதி ஹெலெனா ஜேசேக்.
நேற்று முன்தினம் அவரது தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் அவரைப் பேட்டி கண்ட உதயன் பிரதம ஆசிரியரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒரு மருத்துவரான திருமதி ஹெலெனா ஜேசேக் அவர்கள் முன்னர் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் கனடிய மத்திய பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றுவதற்கு முன்பாக யோர்க் பிராந்திய பிரதான மருத்துவ அதிகாரியாக பணியாற்றியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடா உதயன் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியின்போது மிகவும் உற்சாகமாக பதில்களை அளித்த மருத்துவர் திருமதி ஹெலெனா ஜேசேக் அவர்கள் தனது தொகுதியில் வாழும் தமிழ் மக்களோடு நெருங்கிய தொடர்புகளை வைத்து சேவையாற்றும் வழக்கத்தைக் கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த பதவிக் காலத்தின் அனுபவங்களையும் ஆற்றிய சேவைகளைப்பற்றியும் எமது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று ‘உதயன்’ சார்பில் கேட்கப்பட்டபோது அவர் எவ்வித தயக்கமும் இன்றி உரையாடினார்.
கடந்த 2020 மார்ச் மாதம் உலகை ஆக்கிரமித்துக் கொண்ட கோவிட்-19 தொற்றினால் அனைத்துக் கனடிய மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அச்சமுற்றார்கள். எதிர்காலம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்விகளை தங்களுக்குள் கேட்டுக்கொண்டார்கள். அப்போது எமது பிரதமர் மற்றும் சிரேஸ்ட அமைச்சர்கள் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளோடு இணைந்து இரவு பகலாக பணியாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக எமது அரசாங்கம் ஆக்கபூர்வமான திட்டங்களை அறிவித்தது. பொது மக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை பாதிக்கப்படாமல் மத்திய அரசின் உதவிகள் அவர்களைத் தேடி வந்தன.
அதற்கு அடுத்த நடவடிக்கையாக இந்த கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக தடுப்பூசிகள் மற்றும் தொற்று தொடர்பான பரிசோதனைகள் என அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் என்ற வகையில் நாம் எடுக்க வேண்டியிருந்தது. எம்மால் ஆன நடவடிக்கைகளை நாம் எடுத்தோம்’
இவ்வாறு தெரிவித்தார் திருமதி ஹெலெனா ஜேசேக் அவர்கள்
தொடர்ந்து ‘உதயன்’ சார்பில் மற்றுமொரு கேள்வி முன்வைக்கப்பட்டது.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் உங்கள் லிபரல் கட்சியையே மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்பதற்கு விசேட காரணங்கள் உண்டா? என்பதே அடுத்த கேள்வியாக இருந்தது.
அதற்கு பதிலளித்த ஹெலெனா ஜேசேக் அவர்கள் பின்வருமாறு கூறினார்.
“எமது கடந்த அரசாங்கத்தின் சேவைகளின் தொடர்ச்சியாகவே நாம் இந்த தேர்தலில் அடையப்போகும் வெற்றியைப் பார்க்கின்றோம். அதாவது நோய்த் தொற்றுக் காலத்தில் நாம் ஆற்றிய சேவையை மீண்டும் தொடரவே விரும்புகின்றோம்.
அதற்கு காரணம், தற்போது வீழ்ச்சியடைந்துள்ள கனடிய பொருளாதாரத்தை மீண்டும் நாம் சீராக்க விரும்புகின்றோம். பொருளாதாரத்தை சீர் செய்து நோய்த் தொற்று காலத்தில் நாம் செய்த செலவுகளை சரி செய்ய வேண்டும்.
தடுப்பூசிகள் மற்றும் தொற்று தொடர்பான பரிசோதனைகள் தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டிய தேவை இன்னும் உள்ளது. எனவே தான் எமது லிபரல் அரசாங்கம் மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும் என்று எமது தேர்தல் பிரச்சார வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது'” என்றார்.
“உங்கள் கட்சித் தலைவரும் பிரதமருமான ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் அ ண்மையில் அறிவித்த சிறுவர் பராமரிப்பிற்காக ஒரு குழந்தைக்கு நாளொன்றுக்கு 10 டாலர்கள் வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பின் சிறப்பம்சங்களைக் கூறுவீர்களா? என்ற அடுத்த கேள்வி முன்வைக்கப்பட்டது
அதற்கு பதிலளித்த ஹெலெனா ஜேசேக் அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்.
” எமது கட்சித் தலைவரும் பிரதமருமான ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் எமது தேசத்தின் குழந்தைகளினதும் தாய்மார்கள் தந்தையர்கள் என அனைவர் நலன்களிலும் அக்கறை கொண்டுள்ளார் என்பதையே நாம் இங்கு காண்கின்றோம். குழந்தைகள் அரசாங்கத்தின் உதவியோடு மிக எளிதாக குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப் படுகின்றார்கள்.
எனவே பெற்றோர்களும் முழுமையாக தங்கள் தொழில் நிலையங்களுக்குச் சென்று நாட்டின் உற்பத்திக்கு உதவுகின்றவர்களாக மாறுகின்றார்கள். அதேபோன்று, குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப் படுகின்ற குழந்தைகளும் அங்கு தமது குழந்தைப் பராயத்திலிருந்தே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றார்கள். கல்வி அவர்களுக்கு ஊட்டப்படுகின்றது. இதனால் அவர்களின் அறிவு விருத்தியடைகின்றது. எனவே அரசாங்கம் குழந்தைகளுக்காக முதலீடு செய்கின்ற பணம் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்றதை நாம் இனி வரும் காலங்களில் நேரடியாக அவதானிக்கலாம். இதற்காக மாகாண அரசாங்கங்களின் இணைப்பும் ஒத்துழைப்பும் மத்திய அரசிற்கு தேவைப்படுகின்றது” என்றார் ஹெலெனா ஜேசேக் அவர்கள்.