நக்கீரன்
தமிழ்நாட்டின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான கலாநிதி மாறன் குடும்பத்தில் நடைபெற்ற ஆடம்பரத் திருமணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவரது மகள் காவியா மாறனுக்கும் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் இடையில் கிரீஸ் நாட்டில் நொவெம்பர் 11 ஆம் நாள் நடைபெற்றுள்ளது. அந்தத் திருமணம், அதன் ஆடம்பரத்தால் மட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் வரலாறு, சாதி மறுப்பு, பகுத்தறிவு, சமூகநீதி ஆகியவற்றின் அடிப்படையிலும் விவாதத்திற்குரியதாகியுள்ளது. இந்தத் திருமணத்தைத் தொடர்ந்து நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சி நொவம்பர் 21 ஆம் நாள் சென்னையில் ஐந்து நட்சத்திரக் கோடடல் ஒன்றில் நடைபெற இருக்கிறது. இதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு முதலமைச்சர் யோசேப் உட்பட பல பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
- கலாநிதி மாறன் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்லர். முன்னாள் மத்திய அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தலைவருமான முரசொலி மாறனின் மகன். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரன். சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் (Sun TV Network) தலைவராகப் பெரும் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். அவரது சொத்து மதிப்பு Forbes Real-Time கணக்கின் மதிப்பீட்டின்படி சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டொலர். இந்திய ரூபாயில் சுமார் 26,000 கோடி. தமிழ்நாட்டின் கோடீசுவரர்கள் வரிசையில் அவர் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார்.
அனிருத் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பு அவரது குடும்பம் மத்தியதரக் குடும்பம்தான். காவ்யா மாறனோ பிறக்கும்போதே வாயில் தங்கக் கரண்டியோடு பிறந்தார். இப்போது அனிருத் தலை எடுத்த பிறகு அவரது குடும்பமும் பணக்காரக் குடும்பம் ஆகிவிட்டது. ஆக, இரண்டு கோடீசுவரர்கள் வாழ்க்கைத் துணையாக மாறியிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களது மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வட்டமடிக்கின்றன. ஒரு படத்துக்கு 10 கோடி சம்பளமாக பெறும் அனிருத் மொத்தம் 100 கோடி ரூபாய்வரை சொத்துச் சேர்த்திருக்கிறாராம். காவ்யா மாறனோ தந்தை செய்யும் தொழிலின் அடுத்த முகமாக இருக்கிறார். எனவே இந்த சொத்து முழுக்க அவருக்குத்தான் செல்லும். அதுமட்டுமின்றி ஐபிஎல்லில் ஹைதராபாத் அணியின் உரிமையாளரும் அவர். அதன் மூலம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்வரை சொத்து சேர்த்திருக்கிறாராம். இதையும் சேர்த்தால் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 27,000 கோடி ரூபாய்வரை இருக்கும் என்கிறார்கள். இவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகள் அல்ல.
இந்தத் திருமணம் உண்மையில் ஆடம்பரமான திருமணம்தான். இனிமேல் அனிருத் தொடர்ந்து இசையமைத்தாலும், மனைவியின் தொழில்களிலும் அவரை பார்க்கலாம் என்றே கருதப்படுகிறது.
திருமணத்திற்குப் ரூபா.300 கோடி வரை செலவாகியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்தத் தொகைகளை உறுதிப்படுத்தும் நம்பகமான செலவுக் கணக்குகள் வெளியாகவில்லை.
கலாநிதி மாறன் தனது பணத்தில் மகளுக்குத் திருமணம் நடத்துவது அவரது தனிப்பட்ட உரிமை. எத்தனை கோடி செலவிட வேண்டும், எந்த நாட்டில் திருமணம் நடத்த வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கலாம். ஆனால் தனிப்பட்ட உரிமை என்ற பெயரில் சமூகப் பொறுப்பு பற்றிய கேள்விகளை ஒதுக்கிவிட முடியுமா?
தமிழ்நாட்டில் இன்னமும் சொந்த வீடின்றி வாழும் இலட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் இருக்கின்றன. அன்றாடக் கூலியை நம்பி வாழும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். மகளின் திருமணத்திற்காகக் கடன் வாங்கி, ஆண்டுக்கணக்கில் வட்டிகட்டித் தவிக்கும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சமூகத்தில் ஒரு குடும்பத் திருமணத்திற்குப் பெரும் தொகை செலவிடப்படுவதாகச் செய்திகள் வெளியாகும்போது, அந்தப் பணத்தில் ஒரு பகுதியையாவது ஏழைகளின் நலனுக்காக ஒதுக்கியிருக்கலாமே என்ற கேள்வி எழுவது இயல்பானது.
உதாரணமாக, 300 ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்திருந்தால் எத்தனை குடும்பங்களின் வாழ்க்கை மாறியிருக்கும்? எத்தனை குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இருப்பிடம் கிடைத்திருக்கும்? எத்தனை பெற்றோர்கள் வீட்டு வாடகைச் சுமையிலிருந்து விடுபட்டிருப்பார்கள்?
ஆடம்பரத் திருமணத்தின் அலங்காரங்களை மக்கள் சில நாட்களில் மறந்துவிடலாம். ஆனால் தங்களுக்குக் கிடைத்த வீட்டை அந்த ஏழைக் குடும்பங்கள் தலைமுறைகளுக்கும் நினைவுகூரக்கூடும். இங்கே அம்பானி குடும்பத்தின் திருமணத்தையும் நினைவுகூர வேண்டியுள்ளது.
2024ஆம் ஆண்டு தனது மகன் அனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு, முகேஷ் அம்பானி குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கிய 50க்கும் மேற்பட்ட சோடிகளுக்குத் திருமணம் நடத்திவைத்தது. மணமகள்களுக்குப் பணம், நகைகள் வழங்கப்பட்டன. புதுமணத் தம்பதிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்களும் மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன.
அம்பானி குடும்பத்தின் திருமண ஆடம்பரமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. ஆனால் குடும்பக் கொண்டாட்டத்துடன் ஏழைகளுக்கான உதவியையும் இணைத்த அந்தச் செயலைப் பாராட்டுவதில் தவறில்லை. கலாநிதி மாறன் குடும்பமும் இத்தகைய சமூக நலத்திட்டத்தை அறிவித்திருந்தால், அது எத்தனை ஏழைக் குடும்பங்களுக்குப் பயனளித்திருக்கும்?
இந்தத் திருமணம் இந்தியாவுக்குப் பதிலாக கிரீஸ் நாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படுவதும் பொருளாதார விவாதத்தை எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டிலேயே திருமணம் நடைபெற்றிருந்தால் விடுதிகள், உணவு வழங்கும் நிறுவனங்கள், மலர் அலங்காரத் தொழிலாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், நாதஸ்வரக் கலைஞர்கள், வாகன ஓட்டுநர்கள் எனப் பலருக்கும் தொழில் வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம்.
அதேவேளை, வெளிநாட்டில் திருமணம் நடைபெற்றதால் செலவிடப்பட்ட பணம் முழுவதும் இந்தியப் பொருளாதாரத்திலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூற முடியாது. இந்திய நிறுவனங்களும் கலைஞர்களும் வெளிநாட்டுத் திருமணங்களில் பங்கேற்கலாம்.
எனவே, வெளிநாட்டில் திருமணம் நடத்துவது தேசப்பற்றின்மையின் அடையாளம் என்று முடிவுசெய்வதைவிட, பெரும் செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தின் மூலம் சமூகத்திற்கு என்ன பங்களிக்கிறார்கள் என்று கேட்பதே பொருத்தமானது.
இந்தத் திருமணத்தில் வரவேற்கத்தக்க இன்னொரு செய்தியும் இருக்கிறது. காவியா மாறன் – அனிருத் திருமணம் பார்ப்பனப் புரோகிதர்களின் வேதமந்திரங்கள் இல்லாமல், பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமண முறையில் நடைபெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலைகளையும் சங்கிலிகளையும் பரிமாறிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
திருமணத்தின் ஆடம்பரச் செலவுகள் குறித்த விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், புரோகிதர்களுக்கும் வேதமந்திரங்களுக்கும் இடமளிக்காமல் சுயமரியாதைத் திருமண முறையைப் பின்பற்றியிருப்பது திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பின்னணியில் பாராட்டத்தக்கது.
பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பார்ப்பனிய மேலாதிக்க எதிர்ப்பு, பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு மறுப்பு ஆகியவை முக்கியமானவை.பெரியார் பார்ப்பனியச் சமூக அமைப்பையும் வருணாசிரமக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்தவர். அவரது அரசியல் மொழியில் ஆரியர் – திராவிடர் முரண்பாடு முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. அண்ணாவும் கருணாநிதியும் அந்த அரசியல் மரபைத் தொடர்ந்தவர்கள்.
ஆனால் இன்று கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் அவருடன் நெருங்கிய தொடர்புடைய குடும்பங்களுக்கும் இடையே உருவாகியுள்ள திருமண உறவுகளைப் பார்க்கும்போது ஒரு கேள்வி எழுகிறது. ஒருகாலத்தில் அரசியல் இயக்கத்தின் அடையாளமாக விளங்கிய ஆரியர் – திராவிடர் முரண்பாடு, இன்றைய தலைமுறையின் குடும்ப உறவுகளில் எந்த அளவுக்குப் பொருத்தமுடையதாக இருக்கிறது?
கருணாநிதியின் அக்கா மகனான முரசொலி மாறன், பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மல்லிகாவைத் திருமணம் செய்துகொண்டவர். அது இருவேறு சாதிப் பின்னணிகளைச் சேர்ந்தவர்களுக்கிடையே நடைபெற்ற திருமணம். ஆனால் அடுத்த தலைமுறையின் நிலை வேறுபட்டது. முரசொலி மாறனின் மகனான கலாநிதி மாறனுக்கு, தாய்வழியாக ஏற்கெனவே பிராமணக் குடும்பப் பின்னணி உள்ளது. அவரது குடும்பத்தின் அடுத்தடுத்த திருமண உறவுகளையும் இந்தப் பின்னணியில் பார்க்க வேண்டும்.
எனவே முரசொலி மாறனின் திருமணத்தையும் காவியா – அனிருத் திருமணத்தையும் ஒரே பொருளில் சாதி மறுப்புத் திருமணங்கள் என்று அழைப்பது வரலாற்று ரீதியாகத் துல்லியமான அணுகுமுறையாக இருக்காது. இங்கே இரண்டு அம்சங்களை வேறுபடுத்த வேண்டும். ஒன்று, மணமக்களின் சாதிப் பின்னணி. மற்றொன்று, திருமணம் நடைபெற்ற முறை.
சுயமரியாதை முறையில் நடைபெற்ற எல்லாத் திருமணங்களும் அவசியம் சாதி மறுப்புத் திருமணங்களாக இருக்க வேண்டியதில்லை. அதேபோல், இருவேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் அவர்கள் பாரம்பரியச் சடங்குகளைப் பின்பற்றியிருக்கலாம்.
இந்த வேறுபாட்டைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம்.
இங்கே தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் வரலாற்று நிலைப்பாட்டையும் ஆராய வேண்டியுள்ளது. பாரம்பரிய இந்துச் சமூகத்தில் சாதிக்குள் திருமணம் செய்யும் வழக்கம் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, பிராமண சமூகத்தில் திருமண உறவுகளைச் சாதி, உட்பிரிவு, கோத்திரம் போன்ற அடையாளங்களின் அடிப்படையில் கட்டுப்படுத்தும் மரபுகள் இருந்துள்ளன.
இந்த மரபுகள் பல நூற்றாண்டுகளாகச் சமூக வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளாக எல்லா பிராமணர்களும் விதிவிலக்கின்றி சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டார்கள் என்று கூறுவதற்கு முழுமையான வரலாற்றுச் சான்றுகள் இல்லை.
2012ஆம் ஆண்டு மே மாதம் Times of India வெளியிட்ட செய்தியில், தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் அப்போதைய தலைவர் என். நாராயணன் சாதி மறுப்புத் திருமணங்களை எதிர்ப்பதாகத் தெரிவித்திருந்தார். பிராமண வாழ்க்கை முறையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
2021ஆம் ஆண்டு நவம்பரில் The New Indian Express வெளியிட்ட செய்தியில், தமிழ்நாட்டில் சுமார் 40,000 பிராமண இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் தேடுவதில் சிரமப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்திருந்தது. இதற்காக வடஇந்திய மாநிலங்களில் மணமகள்களைத் தேடும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதாகச் செய்திகள் தெரிவித்தன. இந்தச் செய்திகள் பாரம்பரியத் திருமணக் கட்டுப்பாடுகளுக்கும் மாறிவரும் சமூக உறவுகளுக்கும் இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
அப்படியானால், காவியா மாறன் – அனிருத் போன்ற திருமணங்களைத் தமிழ்நாடு பிராமணர் சங்கம் எப்படிப் பார்க்கிறது? சாதி எல்லைகள் தளர்ந்து வருகின்றன என்று வரவேற்கிறதா? அல்லது பாரம்பரியத் திருமண மரபுகள் பலவீனமடைவதாகக் கவலைப்படுகிறதா? சாதி தொலைகிறது; சாத்திரங்களின் கட்டுப்பாடுகள் தளர்கின்றன என்று கருதுகிறதா? அல்லது பழைய சாதிக் கோட்டைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறதா?
இந்தத் திருமணம் குறித்து பிராமணர் சங்கம் வெளியிட்ட தற்போதைய அதிகாரப்பூர்வக் கருத்து உறுதிப்படுத்தப்படாத நிலையில், அதன் பதிலை நாமாகக் கற்பித்துக்கொள்ள முடியாது.
தமிழ்த் திரையுலகிலும் சாதி எல்லைகளைக் கடந்த திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இரஜினிகாந்த் – லதா திருமணம், பிரசன்னா– சினேகா திருமணம் போன்றவை இதற்கான எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது.
ஒருகாலத்தில் திருமண உறவுகளுக்குத் தடையாக இருந்த சாதி எல்லைகள் இன்று ஓரளவு தளர்ந்துள்ளன என்பது உண்மை. ஆனால் இந்த மாற்றம் சமூகத்தின் அனைத்துத் தட்டுகளிலும் ஒரே அளவில் நிகழ்ந்துள்ளதா என்பது கேள்விக்குரியது.
திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல் செல்வாக்குமிக்க குடும்பங்கள், உயர்கல்வி பெற்றவர்கள் ஆகியோரிடையே சாதி எல்லைகளைக் கடந்த திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இவற்றில் பல திருமணங்கள் ஒரே பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்தைக் கொண்ட குடும்பங்களுக்கிடையே நடைபெறுவதை நாம் கவனிக்க வேண்டும்.
ஒரு செல்வந்த பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண், இன்னொரு சாதியைச் சேர்ந்த கோடீசுவரரைத் திருமணம் செய்துகொள்வதைச் சமூகம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதே பெண், சேரியில் வாழும், மெத்தப்படிக்காத, நிலையான வருமானமற்ற, சமூகச் செல்வாக்கில்லாத இளைஞரைத் திருமணம் செய்ய விரும்பினால் குடும்பமும் சமூகமும் அதனை அதே அளவு எளிதாக ஏற்றுக்கொள்ளுமா?
இங்கே சாதி மட்டுமல்ல, பணமும் வர்க்கமும் சமூக அந்தஸ்தும் திருமண உறவுகளைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன.
இதன் பொருள் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையே சாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுவதில்லை என்பதல்ல. ஆனால் உயர்சாதி–தாழ்த்தப்பட்ட சாதி என்ற எல்லையைக் கடப்பதோடு, செல்வந்தர்–ஏழை என்ற பொருளாதார எல்லையையும் கடக்கும் திருமணங்கள் சமூகத்தில் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதை ஆராய வேண்டும். இன்னொரு கேள்வியும் முக்கியமானது.
ஒரு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண், பிராமணரல்லாத ஒரு கோடீஸ்வரரைத் திருமணம் செய்துகொள்வதைச் சமூகம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதே அளவு செல்வம் கொண்ட, வரலாற்றில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்துகொள்ளும்போது அதே சமூக ஏற்பு கிடைக்குமா?
இங்கே பணம் மட்டுமே திருமணத்தைத் தீர்மானிப்பதில்லை. சாதிப் படிநிலை, குடும்ப அந்தஸ்து, சமூக மரபுகள் ஆகியவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
செல்வம் சாதித் தடைகளைத் தளர்த்தலாம். ஆனால் பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு மனப்பான்மையைச் செல்வத்தால் மட்டும் அகற்ற முடியாது. அதனால்தான் பெரியார் சாதி ஒழிப்பை வெறும் பொருளாதார முன்னேற்றமாகப் பார்க்கவில்லை. பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் சமூகச் சிந்தனையையே மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஒரு கோடீசுவரரின் பணத்தை ஏற்றுக்கொள்ளும் சமூகம், அவரது சாதியை ஏற்றுக்கொள்ளத் தயங்கினால், அங்கே சாதி ஒழிந்துவிட்டதாக எப்படிக் கூற முடியும்?
இதுதான் சாதி மறுப்புத் திருமணங்கள் குறித்து நாம் எழுப்ப வேண்டிய அடிப்படைக் கேள்வி. கலாநிதி மாறன் குடும்பத்தின் திருமண உறவுகளை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.
முரசொலி மாறனின் திருமணம் இருவேறு சாதிப் பின்னணிகளைக் கொண்டவர்களை இணைத்தது. அடுத்தடுத்த தலைமுறைகளில் அந்தப் பின்னணிகள் ஒரே குடும்பத்தின் அங்கங்களாகிவிட்டன. எனவே காவியா – அனிருத் திருமணத்தை முதல் தலைமுறையில் நடைபெற்ற சாதி மறுப்புத் திருமணத்துடன் நேரடியாக ஒப்பிட முடியாது.
மேலும், இந்தத் திருமணத்தில் இரு குடும்பங்களும் பொருளாதார வளமும் சமூகச் செல்வாக்கும் கொண்டவை என்பதைக் கவனிக்க வேண்டும்.
சாதி எல்லையைக் கடப்பது மட்டும் சமூகநீதியின் முழுமையான வெற்றியல்ல. சாதியுடன் இணைந்திருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் சமூக அதிகார வேறுபாடுகளும் குறைய வேண்டும்.
பெரியார் எதிர்த்தது பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு. அந்தச் சிந்தனையை இன்றைய சமூகத்திற்குப் பொருத்திப் பார்க்கும்போது சாதியுடன் வர்க்கமும் செல்வமும் அதிகாரமும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.
கோடீசுவரக் குடும்பங்களுக்கிடையே சாதி எல்லைகள் தளர்வது சமூக மாற்றத்தின் ஓர் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் சமூகத்தின் அடித்தட்டில் வாழும் மக்களுக்கும் அதே திருமணச் சுதந்திரமும் சமமான மரியாதையும் கிடைக்கும்போதுதான் அந்த மாற்றம் பரந்த சமூக முன்னேற்றமாக அமையும்.
ஒருகாலத்தில் திராவிட இயக்கத்தின் மைய அரசியல் கோட்பாடாக இருந்த ஆரியர் – திராவிடர் முரண்பாட்டை இன்றும் அதே பொருளில் பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு வரலாற்று ஆய்வு தேவைப்படுகிறது. ஆரியர், திராவிடர் என்ற மொழியியல், பண்பாட்டு, அரசியல் அடையாளங்களை மாற்றமில்லாத உயிரியல் இனங்களாகக் கருதுவதும் சரியான அணுகுமுறை அல்ல. இன்றைய தமிழ்ச் சமூகத்தில் சாதி ஒழிப்பு, சம வாய்ப்பு, சமூகநீதி ஆகியவற்றை எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தியுள்ளோம் என்பதே முக்கியமான அளவுகோலாக இருக்க வேண்டும்.
அதேபோல், பெரியார் வலியுறுத்திய சுயமரியாதைத் திருமணங்களின் நோக்கத்தையும் நினைவுகூர வேண்டும். தேவையற்ற சடங்குகள், புரோகித ஆதிக்கம், ஆடம்பரச் செலவுகள் ஆகியவற்றைக் குறைத்து, மணமக்களின் சம்மதத்தையும் சமத்துவத்தையும் முன்னிறுத்துவதே அந்த இயக்கத்தின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
அந்த வரலாற்றுப் பின்னணியில், திராவிட இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய செல்வந்தக் குடும்பங்களின் திருமண ஆடம்பரத்தை விமர்சன ரீதியாக ஆராய்வது பொருத்தமானதே.
காவியா – அனிருத் திருமணத்தில் சுயமரியாதைத் திருமண முறையைப் பின்பற்றியதாகக் கூறப்படுவது ஒரு முக்கியமான சமூகச் செய்தி. அதே திருமணத்திற்குப் பெரும் தொகை செலவிடப்பட்டதாகக் கூறப்படுவது சமூகப் பொறுப்பு பற்றிய இன்னொரு விவாதத்தை எழுப்புகிறது.
முதலாவது, பெரியாரின் சமூகச் சீர்திருத்த மரபின் தொடர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இரண்டாவது, பெரும் செல்வந்தர்களின் ஆடம்பரத்திற்கும் சமூகப் பொறுப்பிற்கும் இடையிலான உறவைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.
சமூகநீதியைப் பேசும் அரசியல் இயக்கங்களின் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தனிப்பட்ட வாழ்க்கையில் அந்தக் கொள்கைகளை எந்த அளவுக்குப் பின்பற்றுகிறார்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புவது சனநாயகத்தில் இயல்பானது.
ஆனால் ஒரு குடும்பத்தின் திருமணத்தை மட்டும் வைத்து ஓர் இயக்கத்தின் கொள்கைகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன என்றும் முடிவுசெய்ய முடியாது. அந்தக் கொள்கைகள் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களையும் இன்னும் நீடிக்கும் ஏற்றத் தாழ்வுகளையும் சேர்த்தே மதிப்பிட வேண்டும்.
இறுதியாக, இந்த விவாதம் கலாநிதி மாறன் குடும்பத்தைத் தாண்டி இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் அனைவருக்கும் பொருந்துகிறது. செல்வம் சம்பாதிப்பது குற்றமல்ல. ஆடம்பரமாக வாழ்வதும் தனிப்பட்ட உரிமை. ஆனால் பெரும் செல்வத்துடன் சமூகப் பொறுப்பும் இணைந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானது.
தமிழர்களின் அறநெறி மரபில் செல்வத்தின் பயன் குறித்து வள்ளுவர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
“ஊருணி நீர்நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு.” (திருக்குறள் – 215)
ஊருணியில் நிறைந்திருக்கும் நீர் ஊர் மக்களுக்குப் பயன்படுவதைப்போல, அறிவுடையவரின் செல்வமும் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்பதே அதன் பொருள்.
கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு நடத்தப்படும் திருமணம் சில நாட்களுக்குப் பிரமிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதும், கல்விக்கு உதவுவதும், மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதும் தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றக்கூடும்.
ஒரு குடும்பத்தின் செல்வம் எத்தனை கோடி என்பது மட்டும் முக்கியமல்ல. அந்தச் செல்வத்தால் எத்தனை குடும்பங்களின் வாழ்க்கை உயர்ந்தது என்பதும் முக்கியம். அதேபோல், சாதி எல்லைகளைக் கடந்த திருமணங்கள் எத்தனை நடைபெற்றன என்பது மட்டும் சமூக முன்னேற்றத்தின் அளவுகோலாக இருக்க முடியாது. அந்தத் திருமணச் சுதந்திரம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கிறதா என்பதும் முக்கியம்.
பணம், சாதித் தடைகளைத் தளர்த்தலாம். ஆனால் சாதியை ஒழிக்கப் பணம் மட்டும் போதாது. அதற்கு மனிதர்களின் மனப்பான்மையும் சமூக அமைப்பும் மாற வேண்டும்.
வள்ளுவர் கூறிய ஊருணியில் நீர் நிறைந்திருக்கலாம். ஆனால் அந்த நீர் ஊர் மக்களைச் சென்றடைகிறதா?
அதுதான் இந்த ஆடம்பரத் திருமணம் எழுப்பும் சமூகப் பொறுப்பு பற்றிய அடிப்படைக் கேள்வி.


















