திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று (2025 – டிசம்பர் 3) தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 2025 டிசம்பர் 1ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் கடந்த திமுக ஆட்சியில் கார்த்திகை தீபத்தினமான 3ம் தேதி (2025) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு (கடந்த திமுக அரசு), மலையில் உள்ள தர்கா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு, தர்கா நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் வரும் 24ம் தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதியளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, கார்த்திகை தீபத்திருநாளான வரும் 24ம் தேதி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று பாமக சட்டமன்ற குழுத்தலைவரும், எம்.எல்.ஏ.வு.மான சவுமியா அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக சவுமியா அன்புமணி கூறுகையில், தீபம் ஏற்றுவது தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இது. ஆனாலும், இது இந்த ஆண்டுக்கான இடைக்கால தீர்ப்புதான். இந்த தீர்ப்பு தமிழகத்தின் பெரும்பான்மையான பொதுமக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் தீர்ப்பு. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு சுப்ரீம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. யாருக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியாக இந்த தீபத்திருவிழா நடைபெற வேண்டும் என்றார்.
















