கமல்ஹாசனும், இளையராஜாவும் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் “திரைப்படத்தில் சிறந்த பங்களிப்பிற்கான” சிறப்பு விருதுகள் பெற்றுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி பாராட்டுகளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகநாயகன் என மக்களால் போற்றப்படுகின்ற மிகச் சிறந்த நடிகரான திரை கலைஞர் கமல்ஹாசனுக்கும், இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜாவுக்கும் 2025-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகளில், இந்திய சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக, “திரைப்படத்தில் சிறந்த பங்களிப்பிற்கான” விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன், தனது தனித்துவமான நடிப்பாற்றலால், திறமையால், படைப்பாற்றலால் புதுமைகளை புகுத்தும் அற்புதத் திறமைகளால் தமிழ்த் திரைப்படத்தை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தியவராவார். தமிழக மற்றும் இந்தியத் திரைப்படத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. இளையராஜா, ஓர் கடைகோடி கிராமத்தில் பிறந்திருந்தாலும், தனது சகோதரர் பாவலர் வரதராஜன் அவர்களது குழுவில் இணைந்து, பொதுவுடைமை இயக்கத்தின் மேடைகளில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவராவார். அன்னக்கிளி திரைப்படத்திற்கு இசை அமைத்ததின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமாகி, பல்வேறு மொழிப் படங்களுக்கும் இசை அமைத்து இந்தியா முழுவதும் புகழ்பெற்றவராவர். இளையராஜா மார்ச் 8, 2025 அன்று லண்டனில் தனது முதல் மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான “Valiant” (சிம்பொனி எண் 1) இசையை அரங்கேற்றி, முழு மேற்கத்திய சிம்பொனியை உருவாக்கி, நேரலையில் நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். “திரைப்படத்தில் சிறந்த பங்களிப்பிற்கான” விருதுகளை பெற்றுள்ள மிகச் சிறந்த கலைஞர்களான கமல்ஹாசனும், இளையராஜாவும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். கமல்ஹாசனுக்கும், இளையராஜாவுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
















