முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சோதனை நடத்தினர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அன்பில் மகேஸ் வீட்டில் தற்போது சோதனை மேற்கொண்டனர். சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் காவல்துறை சோதனை நடத்தினர். தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை லஞ்சமாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட புகாரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரும், தி.மு.க நிர்வாகியுமான பி.டி. அரசகுமாரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில், சோதனை குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வெளியிட்ட தகவலில், திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
















