மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் ஜனவரிக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படுமென ஆர்.எஸ்.பாரதி பேசினார். செங்கல்பட்டில் தி.மு.க. சட்டத்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மதுராந்தகம் இடைத்தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானது. பொதுவாக சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந்தாலோ அல்லது வேறு உயர்ந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு ராஜினாமா செய்தாலோ இடைத்தேர்தல் நடைபெறும். ஆனால் தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் இதுபோன்ற காரணங்கள் இல்லை. ஜனநாயகம் சாகடிக்கப்பட்டுவிட்டதால் இந்த 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக கட்சியின் தலைவர் முப்பெரும் விழாவில் குறிப்பிட்டார். இதனை வழக்கறிஞர்கள் மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். கடந்த காலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கும், தற்போது நடைபெறும் இடைத்தேர்தலுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்களுக்கு விளக்க வேண்டும். இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளுமே தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதிகள். தற்போதைய ஆட்சி தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என வாக்காளர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், தி.மு.க. ஆட்சியில் கிடைத்த நன்மைகளைத் தவிர, புதிதாக வந்த தமிழக வெற்றி கழக ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் கொண்டுவரப்படவில்லை என்பதையும் மக்கள் புரிந்து வைத்துள்ளனர். இவை அனைத்தும் தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும். இந்த 2 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால், ஜனவரி மாதத்திற்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எனவே வரலாற்று வெற்றியை பெற இடைவிடாது பணியாற்ற வேண்டும். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
















