கனடா-ஸ்காபுறோ நகரில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் ‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஸ்தாபகரும் ஆன்மீகப் பணி மற்றும் சமூகப் பணி ஆகியவற்றில் 25 வருடங்களுக்கு மேலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ‘சக்தி’ ஞானம்மா திருநாவுக்கரசு அவர்களின் வாழ்க்கை மற்றும் சேவைகளை விபரிக்கும் ‘ஞானத்தின் ஆன்மீகம்’ நூல் அவரது பிறந்த பதியான இணுவில் கிராமத்தில் அச்சடிக்கப்பெற்று அதன் பிரதிகள் கனடாவிற்கு வந்து சேர்ந்துள்ளன.
மேற்படி நூலின் அறிமுக விழா கடந்த 21ம் திகதி பிற்பகல் ஸ்காபுறோ நாஸ்ரின் வீதியில் அமைந்துள்ள ‘ மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி குருமன்ற’ வழிபாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் மேற்படி ‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி குருமன்றத்தோடு நீண்ட நாட்கள் இணைந்து செயற்பட்டு வருபவருமான லோகேந்திரலிங்கம் தலைமை தாங்கினார். வீடு விற்பனை முகவர் அருள் அமிர்தலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
‘சக்தி’ சோதிடர் யோகநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வழிபாட்டு மன்றத்தோடு தொடர்பான பல சக்திகள் மற்றும் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்ட பலர் அங்கு கலந்து சிறப்பித்தனர்.
அங்கு தலைமையுரையாற்றிய நா. லோகேந்திரலிங்கம் அவர்கள் தனது உரையில் “சக்தி’ ஞானம்மா திருநாவுக்கரசு அவர்களின் வாழ்க்கை மற்றும் சேவைகளை விபரிக்கும் ‘ஞானத்தின் ஆன்மீகம்’ நூல் பல உண்மையான விடயங்களையும் தகவல்களையும் கொண்டுள்ளதை நான் நன்கு அறிவேன். “சக்தி’ ஞானம்மா திருநாவுக்கரசு அவர்களின் ஆன்மீகப் பணி மற்றும் சமூகப் பணி தொடர்பான பல விடயங்கள் இந்த நூலில் விபரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு தாயகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் அவரது நிதி அன்பளிப்புக்களோடு நிறைவேற்றப்பட்டுள்ள சில திட்டங்கள் மற்றும் உதவிக் கரம் நீட்டியமை மற்றும் ஆலயங்களுக்கும் ஆதரவற்ற இளம் பெண்களுக்கு வாழ்வளித்த விபரங்களும் மனதை தொடுவதுடன் மற்றவர்களையும் அவ்வாறான பணிகளைச் செய்யத் தூண்டுகின்றவகையில் பிரசுமாகியுள்ளன” என்றார். சிறப்பு விருந்தினர் அருள் அமிர்தலிங்கம் அவர்களும் சிற்றுரையாற்றினார்.
தொடர்ந்து சக்தி ஞானம்மா அவர்களின் ஏற்புரையை அடுத்து சிறப்புப் பிரதிகளை கலந்து கொண்டவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.























