ஆப்கானிஸ்தானில் பதுங்கு குழிகள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானுக்கும், அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் மீது சமீப ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்து உள்ளன. இதனால், அவற்றை கட்டுப்படுத்த ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு சுமத்தியது. இதனை, ஆப்கானிஸ்தான் மறுத்தது. எனினும், ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. கடந்த பிப்ரவரி முதல் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை கடந்த மோதலால் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில், சீனா உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்த முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், கிழக்கு ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் போர் விமானங்கள் வான்வழியே சென்று அதிரடி தாக்குதல்களை நடத்தின. பயங்கரவாத பதுங்கு குழிகள் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதில், 28 பேர் பலியாகி உள்ளனர் என பாகிஸ்தான் தெரிவித்தது.















